தாமிரபரணியில் கோலா நிறுவனங்களுக்கு தற்காலிக தடை..

 

கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகள தாமிரபரணி தண்ணீரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடி வந்த செய்தியை நாம் முன்பே படித்து உள்ளோம்.

தாமிரபரணி நதியில் இருந்து நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் கோகோ கோலா மற்றும் பெப்சி குளிர்பான தயாரிப்புக் கம்பெனிகளுக்கு தண்ணீர் எடுத்துப் பயன்படுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இப்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Courtesy: Aananda vikatan
Courtesy: Aananda vikatan

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி நதியிலிருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தவிர விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பல ஊர்களுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால், குடிநீருக்கான தேவையைக் காட்டிலும் தொழிற்சாலைகளுக்கு பல மடங்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

‘குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், தொழிற்சாலைகளுக்கு மட்டும் எப்படி தொடர்ந்து தண்ணீரை வழங்கலாம்’ என்று விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. ஆனால், எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வந்தது அரசு. சில மாதங்களுக்கு முன்பு பெரும்போராட்டங்கள் வெடித்தபோது, போராட்டக்காரர்களை போலீஸை வைத்து அடித்து உதைத்து ரத்தச்சகதியில் மிதக்க வைத்தது தமிழக அரசு.

இந்நிலையில் நெல்லை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க செயலாளரும், வழக்கறிஞருமான முனைவர். பிரபாகர், கடந்த மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், ‘குடிநீருக்கான தண்ணீரை குளிர்பான ஆலைகளுக்கு அரசு வழங்கி வருவதைத் தடை செய்யவேண்டும்’ என்று தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதுதான், இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

பிரபாகரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “கடந்த 1996-ம் ஆண்டில் கங்கை கொண்டானில் 2,000 ஏக்கர் பரப்பில் சிப்காட் அமைக்கப்பட்டது. இதில், 45 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதே வளாகத்தில், கடந்த 2004-ல் இருந்து 31.54 ஏக்கர் பரப்பில் கோகோ கோலா குளிர்பான நிறுவனமும் இயங்கி வருகிறது. முதலில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதாக அனுமதி பெற்று, பிறகு அனுமதியை 10 லட்சம் லிட்டர் அளவாக நீட்டித்து தற்போது நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வருகிறது இக் கம்பெனி. இதே வளாகத்தில் பெப்சி குளிர்பான கம்பெனி தொடங்குவதற்கு கடந்த வருடம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கோகோ கோலா குளிர்பானக் கம்பெனி தினமும் தண்ணீரை உறிஞ்சி வரும் நிலைமையில் பெப்சி கம்பெனிக்கும் தண்ணீரை எடுக்க அரசு அனுமதி கொடுக்கவே கொந்தளிப்பான சூழல் உருவானது. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள், சமூக அமைப்புகள், கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. தற்போது, பெப்சி கம்பெனியும் தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வருகிறது. கோலா, பெப்சி ஆகிய இரண்டு கம்பெனிகளும் சேர்ந்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து வருகின்றன. இந்த இரண்டு கம்பெனிகளும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3.75 பைசாவை அரசுக்கு கட்டணமாக செலுத்துகிறார்கள். ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் என்று விற்கிறார்கள்.

ஏற்கெனவே சரியான மழை இல்லாததால பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர் மட்டம் 20 அடியாகக் குறைந்துவிட்டது. இதில் பாபநாசம் அணை கடந்த மாதமே மூடப்பட்டுவிட்டது. நெல்லை மாவட்டத்தில் 7 நாளைக்கு ஒரு முறையும், தூத்துக்குடி மாவட்டங்களில் 10 நாளைக்கு ஒரு முறையும்தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கரும் பாசனம் பெற்று வந்தன. தற்போது விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் முப்போகம் பார்த்த பூமி, இருபோக பூமியாக மாறி, இப்போ ஒரு போக பூமி என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு போகத்துக்கும் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறிக் கொண்டுள்ளனர்.

நிலைமை இப்படி மோசமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையிலும் குளிர்பான ஆலைகளுக்கு நாள் தவறாமல் தண்ணீர் சப்ளை நடக்கிறது. இதையெல்லாம் மனுவில் சுட்டிக்காட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை முதன்மை செயலர், சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம் ஆனால், நேற்று நடந்த விசாரணையில் அரசுத் தரப்பில் எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. குடிநீர், விவசாயம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை, தொழிற்சாலைகளுக்கு அல்ல என்கிற காரணத்தை அடிப்படையாக வைத்துதான் பெப்சி மற்றும் கோலா கம்பெனிகள் தாமிரபணி தண்ணீரைப் பயன்படுத்த இடைக்காலத்தடை விதித்துள்ளனர் நீதிபதிகள். ஆனால், இந்த இடைக்காலத்தடை நிரந்தரத் தடையாக மாற்றப்படவேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் எதிர்பார்ப்பும்” என்று சொன்னார் பிரபாகர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தாமிரபணி தண்ணீரை இந்த இரு கம்பெனிகளும் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது. தற்போதைய தீர்ப்புப் பற்றி இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனிடம் கேட்டபோது, “இந்த பெப்சி கம்பெனியை  கேரளாவில் அமைக்கத்தான் முதலில் திட்டமிட்டு இடம் தேடினார்கள். அங்கே கடும் எதிர்ப்பு இருந்ததால், தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் இடம் கேட்டார்கள். அங்கேயும் விவசாயிகள் போராட்டம் ஓங்கி ஒலித்ததால் இந்த சிப்காட் வளாகத்தில் குளிர்பான ஆலையை தொடங்கிவிட்டார்கள்.

தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்று, திருச்சி மாவட்டம், சூரியூரில் இயங்கி வந்த பெப்சி நிறுவனம், மக்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 2015 ஜனவரி முதல் மூடப்பட்டது. பெருந்துறை சிப்காட்டில் 71.35 ஏக்கர் பரப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனி அனுமதியும் கடந்த 2015 ஏப்ரல், 21-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மக்களின் தொடர் போராட்டங்களைத் தாங்க முடியாமல் சிவகங்கை மாவட்டத்தில் படாமாத்தூரில் இயங்கி வந்த கோகோ கோலா கம்பெனியை, அவர்களே மூடிவிட்டனர். இதேபோல தாமிரபணி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கும் நிரந்தரத் தடை வந்தால்தான் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நிரந்தர நிம்மதி” என்று கூறினார்.

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *