ஆட்டு ஊட்ட கரைசல் செய்வது எப்படி?

இயற்கை விவசாயத்தின் ஒரு தூணாகிய பஞ்சகவ்யா பற்றி படித்து இருக்கிறோம். மாடு இல்லாத விவசாயிகள், ஆடுகள் மூலமாகவும் அதே மாதிரியான கரைசலை தயார் செய்ய முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் முனைவர் தி.ராஜ்பிரவீன்.

சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆட்டு ஊட்டம் குறைந்த செலவில் அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கிறது என்கிறார் அவர்.

ஆட்டு ஊட்டம் தயாரிக்கும் முறை:

  • ஆட்டூட்டம் தயார் செய்ய விவசாயிகள் மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனை பயன்படுத்தலாம்.
  • ஆட்டு புழுக்கை- 5 கிலோ, ஆட்டு சிறுநீர்- 3 லிட்டர், ஆட்டுப்பால்- 2 லிட்டர், ஆட்டுத்தயிர்- 2 லிட்டர், வாழைப்பழம்- 10, இளநீர்- 2 லிட்டர், கடலை பிண்ணாக்கு- 2 கிலோ, கரும்புச்சாறு- 2 லிட்டர், கள்- 2 லிட்டர் என்ற அளவில் நன்றாக கலக்கி கதர்த்துணி அல்லது சணல் சாக்கு போட்டு மூடிவைக்கவும்.
  • கடலைப் பிண்ணாக்கு கிடைக்கவில்லை எனில், உளுந்து கால் கிலோ, பாசிப்பயறு கால் கிலோ என இரண்டையும் ஒருநாள் முழுவதும் ஊற வைத்து அரைத்துப் போடலாம்.
  • கள் கிடைக்கவில்லை என்றால் மாற்றாக தேங்காய் நீரை 4 நாள்கள் புளிக்க வைத்து ஊற்றலாம்.
  • இவ்வாறு உருவாக்கப்பட்ட கலவையை தினமும் இருவேளை குச்சியால் கலக்க வேண்டும். இப்படி செய்வதன் வாயிலாக கலவையில் காற்றோட்டம் ஏற்படும் மீத்தேன் வாயு வெளியேறி, நுண்ணுயிர்கள் பெருகும்.

கலவையை பயன்படுத்தும் முறை:

  • ஆட்டு ஊட்ட கலவை தயாரித்த 14-ம் நாள் முதல், அதை பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • இந்த ஆட்டு ஊட்டத்தை 10 ஏக்கருக்கு பயன்படுத்தலாம். 10 லிட்டர் நீரில் இக்கலவையை 250 மில்லி கலந்து பயன்படுத்த வேண்டும்.
  • இந்த கலவையை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம

ஆட்டு ஊட்ட கரைசலின் பயன்கள்

  • பசுக்கள் இல்லாத விவசாயிகள் ஆடுகளின் கழிவுகளை திறன்பட பயன்படுத்தி ஆட்டு ஊட்டம் தயாரிப்பில் எளிதாக ஈடுபட முடியும்.
  • ஆடுகள் பலவிதமான இலை, தழைகளை உண்ணுவதால் புழுக்கையிலும், சிறுநீரிலும் அவற்றின் சாரம் இருக்கும். எனவே ஆட்டு ஊட்டம் தெளிக்கும் போது சுவையான காய், கனிகள் கிடைக்கும்.
  • பழத்தில் அதிகளவு இனிப்பு சுவை இருப்பதாக முன்னாடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
  • மேலும் நெற்பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் (Growth​ Promoter) மற்றும் நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது.
  • எனவே தமிழக விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஆட்டு ஊட்டம் தயாரிப்பில் ஈடுபட்டு வாழ்வில் வளம் பெறலாம். கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆடுகளை வளர்த்து, இந்த எளிய ஆட்டூட்ட கலவையை தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து லாபம் பெற முடியும் என்று விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “ஆட்டு ஊட்ட கரைசல் செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *