இயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்!

விவசாயத்துலயும் அதிகளவு வருமானம் எடுக்க முடியுங்கிறதை ‘பசுமை விகடன்’ல படிச்சுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் வேலையில் இருந்து விலகி விவசாயத்துக்கே வந்தேன். நானும் வெற்றிகரமா விவசாயம் செய்துக்கிட்டு இருக்கேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், ‘சாஃப்ட்வேர்’ என்று ஆங்கிலத்தில் விளிக்கப்படும் மென்பொருள் துறை வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் கால் பதித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் எனும் கிராமத்தில் இருக்கிறது, பார்த்தசாரதியின் பண்ணை. ஒரு முற்பகல்வேளையில் அங்கே அவரைச் சந்தித்தோம்.

வேலையிலிருந்து விவசாயத்துக்கு!

“அப்பாவுக்கு விவசாயம்தான் முழுநேரத் தொழில். விவசாயத்தில் வந்த வருமானத்துலதான் எங்களைப் படிக்க வெச்சார். பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ. படிச்சிட்டு 2003-ம் வருஷம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 2010-ம் வருஷம் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நரம்பு வளர்ச்சி சம்பந்தமாக சில பிரச்னைகள் இருந்தது. அந்தச் சமயத்தில் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் 700 நகரங்களில் சர்வே எடுத்துட்டு… ‘தாய்ப்பாலில் ரசாயன உர, பூச்சிக்கொல்லி நச்சுக்களின் தாக்கம் இருக்கு’னு அறிவிப்பை வெளியிட்டுச்சு.

இந்த அறிவிப்பும், என் குழந்தையின் நிலையும் ஒருசேர என் மனதை பாதிக்கவே, ‘இதுக்கு தீர்வு, இயற்கை முறை விவசாயம் மட்டும்தான்’னு புரிஞ்சது. அப்பா ஆரம்பத்துல இருந்தே ‘பசுமை விகடன்’ வாசகர். எனக்கு இயற்கை விவசாயம் மேல ஆசை வரவும் 2009-ம் வருஷத்துல இருந்து நானும் அதை படிக்க ஆரம்பிச்சேன். பிறகு, அப்பாகிட்ட விவசாயம் செய்றது சம்பந்தமா பேசினேன். ‘விவசாயம் பக்கம் வரவே கூடாது’னுட்டார். நான், பிடிவாதமா கேட்டுக்கிட்டே இருக்கவும், எங்களுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்துல ஒண்ணரை ஏக்கர் நிலத்தை மட்டும் இயற்கை விவசாயத்துக்குக் கொடுத்தார்” என்று சொல்லி, பண்ணையின் மீது அழுத்தமான ஒரு பார்வையை வீசிய பார்த்தசாரதி, தொடர்ந்தார்.

 

வழிகாட்டிய நண்பர்கள்!

“பசுமை விகடன்ல தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள், நண்பர்கள் மூலமா தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை வெச்சு இயற்கை முறையில் கீரையையும், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும் சாகுபடி செய்தோம். அதெல்லாம் நல்லா வந்தது. இடையில, நம்மாழ்வார் அய்யா, ரீஸ்டோர் அனந்து மாதிரியானவங்க தொடர்பும் கிடைச்சது. அதுக்கப்பறம் இயற்கை விவசாயத்துல ஒரு பிடிப்பு வந்தது. அப்பாவுக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்ததும், கொஞ்சம் கொஞ்சமா விவசாயம் விரிவாச்சு. 2012-ம் வருஷம் நெல், கீரை, பருப்பு வகைகள்னு பயிர் பண்ணினோம். பாரம்பர்ய ரக நெல் போட்டதுல ஏக்கருக்கு 22 மூட்டை நெல் மகசூல் ஆச்சு. எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்க. காரணம், இதற்கு முன்னால் 15 மூட்டைதான் அந்த நிலத்துல மகசூல் கிடைக்கும். ஆனா, வழக்கத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்ச சம்பவம் நம்பிக்கையைக் கொடுத்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு முழுமையா விவசாயத்துல இறங்கிட்டேன்.

பாரம்பர்ய ரகங்கள்… இயற்கை ஊட்டம்!

இது, களி, வண்டல் கலந்த இருமண் பாங்கு. அதனால, தண்ணீரை தேக்கி வெச்சுக்கும். குறைந்த தண்ணீர் பாசனம் பண்ணினாலே போதுமானது. போன போகத்துல 7 ஏக்கர் நிலத்துல சொர்ணமசூரி, 5 ஏக்கர் நிலத்துல கிச்சிலி சம்பா, 3 ஏக்கர் நிலத்துல சீரக சம்பானு சாகுபடி செய்திருந்தோம். கொஞ்ச இடத்துல, பூங்கார், கைவர சம்பா, மைசூர் மல்லி நெல் ரகங்களை விதைப் பெருக்கத்துக்காக பயிர் பண்ணினோம். எல்லாமே ஒற்றைநாற்று நடவு முறைதான். ஆடிப்பட்டத்துல 25 சென்டி  மீட்டர் இடைவெளியில நடவு பண்ணினோம். 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தையும், பஞ்சகவ்யாவையும்தான் மாத்தி மாத்தி கொடுத்தோம். போன மாதம்தான், சொர்ணமசூரி, கிச்சிலி சம்பா, சீரக சம்பா மூணையும் அறுவடை பண்ணினோம். அடுத்து உளுந்து போடறதுக்கு தயார் செய்துக்கிட்டு இருக்கோம்” என்ற பார்த்தசாரதி மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

மதிப்புக் கூட்டலில் லாபம் அதிகம்!

“நாங்க பாரம்பர்ய நெல்லை அரிசியா மாத்திதான் விற்பனை செய்றோம். அப்படி செய்தால்தான் லாபம் கிடைக்கும். சென்னையில் எங்க வீட்டிலேயே இயற்கை அங்காடி நடத்துறோம். அங்கேயே விற்பனை செய்துடுவோம். எங்க அங்காடியில விற்பனை செய்றது போக மீதியை மற்ற அங்காடிகளுக்கும் கொடுக்கிறோம்.

இந்த முறை அறுவடை செய்தப்போ,  7 ஏக்கர் சொர்ணமசூரி ரகத்துல 168 மூட்டை (80 கிலோ மூட்டை); 5 ஏக்கர் கிச்சிலி சம்பாவுல 108 மூட்டை; 3 ஏக்கர் சீரக சம்பாவுல 51 மூட்டைனு கிடைச்சது. மொத்தமா 15 ஏக்கர் நிலத்துல இருந்து 327 மூட்டை கிடைச்சிருக்கு. ஒரு மூட்டை நெல்லை அரைச்சா 40 கிலோ அரிசி கிடைக்கும். அந்த வகையில சொர்ணமசூரி ரகத்துல 6 ஆயிரத்து 720 கிலோ அரிசி கிடைக்கும். இந்த அரிசி கிலோ 50 ரூபாய்னு விற்பனையாகும். கிச்சிலி சம்பா ரகத்துல 4 ஆயிரத்து 320 கிலோ அரிசி கிடைக்கும். இந்த அரிசி கிலோ 60 ரூபாய்னு விற்பனையாகும். சீரக சம்பா ரகத்துல 2 ஆயிரத்து 40 கிலோ அரிசி கிடைக்கும். இது, ஒரு கிலோ 70 ரூபாய்னு விற்பனையாகும். அந்த வகையில விற்பனையாச்சுனா… 15 ஏக்கருக்கும் சேர்த்து 7 லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். எல்லா செலவும் போக 4 லட்ச ரூபாய் வரை லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறோம்” என்ற பார்த்தசாரதி,

“இதுல வருமானத்தையும் லாபத்தையும் நாங்க பெருசா பார்க்கல. நஞ்சில்லாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து, அதை நாமும் சாப்பிட்டு, மற்றவர்களும் சாப்பிட வழி செய்கிறோம்கிற திருப்தியைத்தான் முக்கியமா பார்க்கிறோம்” என்று பெருமிதத்தோடு சொன்னார்.

  • ஒரு ஏக்கர் நிலத்தில் 24 மூட்டை சொர்ணமசூரி நெல்
  • ஒரு ஏக்கர் நிலத்தில், 21 மூட்டை கிச்சிலி சம்பா நெல்
  • ஒரு ஏக்கர் நிலத்தில் 17 மூட்டை சீரக சம்பா நெல்
  • பாரம்பர்ய ரகங்களில் பங்கமில்லா மகசூல்!
  • ஒற்றை நாற்று சாகுபடியில் விளைச்சல் அதிகம்!
  • அரிசியாக விற்பனை செய்தால், அதிக லாபம்!

இயற்கை விவசாயத்துக்கு முன்னோடி!
பார்த்தசாரதியின் தந்தை முரளி, “நாப்பது வருஷமா விவசாயம் செய்றேன். ஆரம்பத்துல ரசாயன உரம்தான் போடுவோம். 3 வருஷமா மகனுடைய ஆலோசனையில இயற்கை விவசாயம் செய்றோம். அந்தக் காலத்துல பயிர் செஞ்ச கிச்சிலி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை திரும்பவும் நிலத்துல பாக்கும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு பயிரும் அவ்வளவு அழகா வளர்ந்து நின்னுது. ரோட்ல போறவங்களையெல்லாம் திரும்பி பாக்க வைக்கும். ஆரம்பத்துல நானும் பாரம்பர்ய ரகம், இயற்கை விவசாயத்தை ஒப்புக்கல. அவங்க நிரூபிச்சுக் காட்டினதும் ஒத்துழைக்க ஆரம்பிச்சிட்டேன். அக்கம்பக்கத்து விவசாயிகளும் வந்து கேட்டு விசாரிச்சு, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டு வர்றாங்க.

எப்போதுமே எங்க குடும்பம் கிராமத்துல முன்னோடியா இருக்கும். இப்போ இயற்கை விவசாயத்துலயும் முன்னோடியா இருக்கோம்” என்றார், பெருமிதமாக.

உதவிக்கு பசுமை விகடன்!

பார்த்தசாரதியின் இயற்கை விவசாயத்துக்கு உறுதுணையாக இருப்பவர், அவருடைய மனைவி ரேகா. மென்பொருள் துறை பணியாளரான இவரும் வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டார்.

“நானும் விவசாயக் குடும்பம்தான். குழந்தை பிறந்ததுக்கப்புறம்தான் விவசாய ஆர்வம் வந்தது. அதனால, வேலையை விட்டாச்சு. இப்போ குழந்தையோடவும் அதிக நேரம் செலவழிக்க முடியுது. வீட்டிலேயே சின்னதா ஒரு இயற்கை அங்காடி வெச்சிருக்கோம். பசுமை விகடன்ல ‘பசுமை சந்தை’ பகுதியிலதான் விவசாயிகளின் முகவரிகளைத் தெரிஞ்சுக்கிட்டு பொருட்களைச் சேகரிக்கிறோம். வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு, பசுமை விகடன் எங்களுக்கு நிறைய உதவியிருக்கு” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்கிறார், ரேகா.

விவசாயத்துக்குத் திரும்புவோம்…

“கடந்த மூன்றாண்டுகளாக ‘பேக் டூ லேண்ட்’ என்ற பெயரில் நகரத்தில் வசிக்கும் விவசாய ஆர்வலர்களை ஒருங்கிணைச்சு பண்ணையில கூட்டங்கள் நடத்துறோம். விவசாயத்தில உள்ள சவால்கள், விவசாயத்தில நிலைத்து நிற்பது, விவசாயத்துக்கான நிலங்கள் வாங்குவது, வேலையிலிருந்து கொண்டே விவசாயம் செய்றதுனு பல விஷயங்கள விவாதிப்போம். நிபுணர்களும் கூட்டத்துக்கு வருவாங்க. கூட்டத்தில இயற்கை விளைபொருட்கள் மூலமா சமைச்ச பாரம்பர்ய உணவுகளைத்தான் பரிமாறுவோம். இதன்மூலமா நிறையபேர் விவசாயத்துக்குத் திரும்பிக்கிட்டிருக்காங்க” என்கிறார், பார்த்தசாரதி.

பூச்சிகளை விரட்டுவது எப்படி?

பூச்சிகளை விரட்டுவது எளிதுதான். கசப்பு (வேப்பிலை, நொச்சி, புங்கன்), பால் தன்மை (எருக்கன், பப்பாளி), வாசனை தன்மை (கொய்யா, துளசி) உள்ளிட்ட 15 வகையான இலை தழைகளை 4 அல்லது 5 கைப்பிடி எடுத்துக் கொண்டு, இதை ஒண்ணுக்கு பாதியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை 50 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து 21 நாள் ஊற வைக்க வேண்டும். இந்தக் கரைசலை வடிகட்டி 100 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

இயற்கை விவசாயிகளுக்கான சந்தை!

சென்னை, அடையாறில் செயல்பட்டு வரும் ‘ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ என்ற இயற்கை விவசாயிகளின் சந்தையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், ரேகா. அதுகுறித்துப் பேசியவர், “நியாயமான விலையில் இயற்கை விளைபொருட்கள் பரிமாற்றம் செய்யப்படணுங்கிறதுக்காக 2014-ம் வருஷம் இந்த அமைப்பைத் தொடங்கினோம். இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்கி, ஓரிடத்தில் சேகரித்து வெச்சிடுவோம். அங்க வந்து எல்லாரும் பொருட்களை வாங்கிக்கலாம். சென்னையின் பல்வேறு பகுதிகள்ல இருந்தும் வாங்க வர்றாங்க. எல்லா பொருளுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்திருக்கோம். எங்கள் குழுவிலிருந்து ஒருத்தர் போய் அவங்க நிலத்துல இயற்கை விவசாயம்தான் செய்யப்படுகிறதானு ஆய்வு செய்வார். அதுக்கப்பறம்தான் குறிப்பிட்ட விவசாயிகிட்ட பொருட்களை வாங்குவோம். சிறுதானியங்கள், காய்கறிகள், பழ வகைகள், பாரம்பர்ய அரிசி ரகங்கள்…னு எல்லாமே இங்க வருது” என்றார்.

தொடர்புக்கு, ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட், தொலைபேசி: 044-42611112, 98405-25516

பாரம்பர்ய அரிசியில் என்னவெல்லாம் செய்யலாம்?

தற்போது நாம் பயன்படுத்தும் அரிசியின் மூலம் செய்யப்படும் இட்லி, தோசை, ஆப்பம், முறுக்கு உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளையும் பாரம்பர்ய அரிசியிலும் தயாரிக்கலாம். இதில் சுவையும் கூடும் சத்துள்ளதாகவும் இருக்கும்.

நெல்லின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடும் அரிசியில் மட்டுமே அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் இந்த சத்துக்கள் இருக்காது. அதனால் கைகுத்தல் அல்லது நெல்லின் தோல் நீக்கும் கருவியின் மூலம் பெறப்படும் அரிசியை உணவுக்குப் பயன்படுத்துவது நல்லது.

விதைகள் எங்கு கிடைக்கும்?

பொதுவாக நெல் திருவிழாக்களில் பாரம்பர்ய விதைகள் கிடைக்கும். பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்யும் விவசாயிகள், பாரம்பர்ய நெல் ரகங்களைக் காப்பாற்றி வருவோரிடத்திலும் விதைகளை வாங்கிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு, பார்த்தசாரதி,செல்போன்: 09789094118

http://backtotheland.in/

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *