இயற்கை விவசாயமும் காந்திய கோட்பாடும்

குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர்.

குறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் லாபம் வாயிலாக வளம் பெற்று வருகின்றனர்.

காந்திய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தில் தேவையில்லாமல் நிலத்தை உழவியல் பணிகளுக்கு உட்படுத்துவது கிடையாது.

நிலத்தின் தன்மைகேற்பவும், பயிரின் தேவையை கருத்தில் கொண்டும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடிகிறது.

காந்திய வழியில் விவசாயம் செய்வது எப்படி என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

தற்போதைய காந்திய வழி விவசாயத்தில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு இயற்கை முறையில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக காந்திய முறையில் தென்னை சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது தென்னை அருகே நீர் பாசனம் செய்வது கிடையாது.

தென்னை மரத்தில் இருந்து 12 அடி இடைவெளியில் நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக தண்ணீரை நோக்கி தென்னை வேர்கள் செல்வதால் மரம் நல்ல பிடிமானம் மற்றும் நிலத்தின் ஈரப்பத்தை திறன்பட பயன்படுத்த முடிகிறது. இதன் வாயிலாக 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

மேலும் தென்னை மரங்களை சுற்றி அலங்கார செடிகள் நடவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத சூழலில் இவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் வாடி வதங்கிவிடும். இதை பார்த்த உடன் விவசாயிகள் நீர்பாசன பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

இதுதவிர புதிதாக தோட்டங்கள் அமைக்கும் போது குறுகியகால பயிர்களாக காய்கறிகள், நடுத்தர வயது கொண்ட பப்பாளி, வாழை மற்றும் சீதாபழ மரங்கள் மற்றும் நீண்ட கால மரங்களான தென்னை, மா போன்றவை தேர்வு செய்து சாகுபடி பணிகளை செய்வதால் நிலத்தின் வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கிறது. இதனால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடிகிறது.

காந்திய சிந்தனை அடிப்படையில் வாழு, வாழவிடு என்ற நோக்கில் இயற்கை வளங்களை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்வதால் மண்ணின் வளம் தொடர்ச்சியாக பாதுகாக்கப்படுகிறது,

காந்திய வழி விவசாயத்தில் இயற்கை உரங்கள், வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவு, விவசாயிகள் கடன்பட்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்படாது, சிறு மற்றும் குறு விவசாயிகள் பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் காந்திய விவசாய முறைகளை பின்பற்றி செயல்படுவதன் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *