ஒருங்கிணைந்த விவசாயத்தில் நல்ல லாபம்

சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘விவசாயிகள் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு… என மாற்றுத் தொழில்களையும் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் எடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். இதே கருத்தைத்தான் இயற்கை விவசாய வல்லுநர்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். பல விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, கோழி எனச் சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படி ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து அதில் நவீனத் தொழில்நுட்பங்களையும் புகுத்தி நல்ல லாபம் எடுத்து வருகிறார், மதுரை மாவட்டம், குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி, கிருஷ்ணன்.

கிருஷ்ணன், அரை ஏக்கர் அளவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, அதில் அருமையான லாபம் எடுத்து வருகிறார்.

2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையைத் தொடங்கிய இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில, தேசிய விருதுகள் எனக் குவிந்துகொண்டிருக்கின்றன. அரசு சார்பில் பல மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குத் தொழில்நுட்பம் சொல்லிக் கொடுத்தும் வருகிறார், இவர். கிருஷ்ணனை அவரது பண்ணையில் சந்தித்தோம்.

மனது நிறைந்த வாழ்க்கை!

“எங்க பாட்டன் காலத்திலிருந்தே விவசாயம்தான் நம்ம பரம்பரைத் தொழில். நான் அந்தக் காலத்து பி.யூ.சி. படிப்பு முடிஞ்சதுமே விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு தடவை மதுரை விவசாயக் கல்லூரியில் நடந்த ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அதுக்கப்பறம், அந்தக் கல்லூரிப் பேராசிரியர்களோட அறிவுரையின்படி 2010-ம் வருஷம் 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆரம்பிச்சேன். முழுக்க இயற்கை வழி விவசாய முறையிலதான் பயிர்களை சாகுபடி செய்றேன். ஒருங்கிணைந்த பண்ணை முறையில் கை நிறைய லாபம், மனசு நிறைஞ்ச வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோட, பல விருதுகளும் என்னைத் தேடி வந்திருக்கு. ஒரு விவசாயியாக பெருமையா வாழ்ந்துகிட்டிருக்கேன்” என்று பெருமிதப்பட்ட கிருஷ்ணன், பண்ணையைச் சுற்றிக்காட்டினார்.

“20 சென்ட் நிலத்துல நெல், 8 சென்ட் நிலத்துல மீன் வளர்ப்புக் குட்டை, 20 சென்ட் நிலத்துல தென்னை, 2 சென்ட் நிலத்துல ஆடு கோழி மாடுகளுக்கான கொட்டகைகள் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வெச்சிருக்கேன். அதோட, மண்புழு உரம் தயாரிக்கிறதுக்கான குழிகளும் இருக்கு. இங்க, நானும் என் மனைவியுமே எல்லா வேலையும் பாத்துடுவோம். சில வேலைகளுக்கு மட்டும்தான் வெளியாட்களைக் கூப்பிடுவோம்.

ஒரு போகம் நெல்… அடுத்த போகம் சோளம்!

நெல் வயல்ல சோளத்தையும் நெல்லையும் மாறி மாறி விதைப்போம். ஏ.எஸ்.டி 16 ரக நெல்லைத்தான் சாகுபடி செய்றோம். இதுல, 12 மூட்டை நெல் அறுவடையாகும். ஒரு மூட்டை நெல் தொள்ளாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். அதுமூலமா, 11 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். செலவெல்லாம் போக, 8 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். அடுத்து சோளம் போடும்போது 20 சென்ட் நிலத்துல 4 மூட்டை அறுவடை ஆகும். இது 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். அதுல செலவு போக 4 ஆயிரம் ரூபாய் லாபமா இருக்கும்” என்ற கிருஷ்ணன், மீன்குட்டைக்கு அழைத்துச் சென்றார்.

மாடுகளுடன் தனது தோட்டத்தில் கிருஷ்ணன்

8 சென்ட் குளம்… 4 வகை மீன்கள்!

“70 அடி நீளம், 50 அடி அகலம், 6 அடி ஆழத்துல குளம் அமைச்சிருக்கேன். பெரியாறு பாசனக் கால்வாய் தண்ணிதான் மீன் குளத்துக்கு. கட்லா, ரோகு, கண்ணாடி, நாட்டு விரால்னு மொத்தம் 700 குஞ்சுகள் விடுவேன். வருஷத்துக்கு ஒரு அறுவடைதான். ஆனி மாசம் குஞ்சுகளை விட்டு பத்து மாசத்துல அறுவடை பண்ணிடுவோம். நாட்டு விரால் மட்டும் 100 குஞ்சுகளை விடுவோம். மற்ற வகைகள்ல தலா 200 குஞ்சுகள் விடுவோம். நாட்டுவிரால் குஞ்சு ஒண்ணு 5 ரூபாய். மற்ற ரகங்கள் 3 ரூபாய். அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, கடலைப் பிண்ணாக்கு, காய்கறிக் கழிவுகள், மாட்டுச்சாணம், கோழிப் பண்ணைக் கழிவுகள், கொழிஞ்சித் தழைகள்தான் மீன்களுக்குத் தீவனம். பத்து மாசம் தீவனத்துக்கு மட்டும் 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். நானும், என் மனைவியுமே மீன்களைப் பிடித்து விற்பனை செஞ்சிடுவோம்.

பத்து மாசத்துல நாட்டு விரால் மீன்கள் ஒவ்வொண்ணும் அரைக் கிலோ அளவு வந்துடும். கிலோ 400 ரூபாய்னு பண்ணையிலயே வந்து வியாபாரிங்க வாங்கிக்கிறாங்க. மொத்தம், தரமா, 25 கிலோ விரால் கிடைக்கும். அதை விற்பனை செய்றப்போ, 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மற்ற ரக மீன்கள் ஒவ்வொண்ணும் அரைக் கிலோவுல இருந்து ஒரு கிலோ வரை இருக்கும். இந்த ரகங்கள் கிலோ 120 ரூபாய்னு விற்பனையாகும். எல்லா ரகங்களும் சேர்ந்து 300 கிலோ அளவுக்குக் கிடைக்கும். இதன் மூலமா, 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தமாக மீன்கள் மூலமா 46 ஆயிரம் ரூபாய் வருமானம். அதுல செலவெல்லாம் போக, 33 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும். மீன் பிடிப்பு முடிஞ்சதும், குளத்தை உழுது மூணு மாசம் காயவிட்டு தண்ணி நிரப்பிடுவோம்.

3 மாத வயதில் நாட்டுக்கோழிகள் விற்பனை!

20 அடிக்கு 16 அடி அளவுல கொட்டகை அமைச்சு 100 நாட்டுக்கோழிகளை வளர்க்கிறேன். ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி 90 நாள் வளர்த்து விற்பனை செய்திடுவேன். வருஷத்துக்கு இப்படி நாலு ‘பேட்ச்’ வளர்க்க முடியும். 3 மாசம் வளர்த்தா ஒரு கோழி ஒரு கிலோ வரை எடை இருக்கும். ஒவ்வொரு பேட்ச்லயும் சராசரியா 10 கோழிகள்வரை இறந்துடும். எல்லாம் போக, ஒரு பேட்சுக்கு உயிர் எடையில 70 கிலோ அளவுக்குக் கோழிகள் இருக்கும். உயிர் எடையில ஒரு கிலோ இருநூறு ரூபாய்னு பண்ணையிலேயே விற்பனை செய்துடுவேன். ஒரு பேட்சுல 14 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 56 ஆயிரம் ரூபாய் வருமானம். குஞ்சுகள், மின்சாரம், தீவனம்னு எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 36 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். கோழிகளுக்கு மக்காச்சோளக் குருணை, கம்பு, முட்டைகோஸ் கழிவு, கேரட் கழிவுனு தீவனமாகக் கொடுக்கிறோம். தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

கோழிகள்

20 ஆடுகள்… ஆண்டுக்கு 15 குட்டிகள்!

20 அடிக்கு 16 அடி அளவுல கொட்டில் அமைச்சு ஆடு வளர்க்கிறேன். கன்னி வகையைச் சேர்ந்த 15 ஆடுகள், 5 கிடாக்கள் இருக்கு.  ஆடுகளுக்கு பிண்ணாக்கும், பசுந்தீவனமும் கொடுக்கிறேன். பசுந்தீவனம் நம்ம வயல்ல இருந்தே கிடைச்சிடும்.

15 ஆடுகள்ல இருந்து ரெண்டு வருஷத்துக்கு 30 குட்டிகள் கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 15 குட்டிகள் கிடைக்கும். 10 கிலோ வரை வளர்ந்த குட்டிகளை ஒரு குட்டி 4 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்வேன். அதன் மூலமா வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எல்லா செலவும் போக, வருஷத்துக்கு 45 ஆயிரம் லாபமா நிக்கும்.

20 சென்ட் நிலத்துல 40 தென்னை மரங்கள் இருக்கு. 40 மரங்கள்லயும் சேர்த்து வருஷத்துக்கு 4 ஆயிரத்து 800 தேங்காய்கள் வரை கிடைக்கும். ஒரு காய் ஏழு ரூபாய்னு விற்பனை செய்வேன். இதன் மூலமா 33 ஆயிரத்து 600 ரூபாய் கிடைக்கும். இதுல இடுபொருள், வெட்டுக்கூலி போக 25 ஆயிரம் ரூபாய் அளவுக்குக் கண்டிப்பா லாபம் கிடைக்கும்.

தினமும் 10 லிட்டர் பால்!

இரண்டு பசுக்கள் இருக்கு. இரண்டுமே  இப்போ கறவையில இருக்கு. தினமும் 10 லிட்டர் அளவுக்கு பால் கிடைக்குது. எங்க வீட்டுல நானும் என் மனைவியும்தான். அதனால் வீட்டு உபயோகம் இல்லை. அதனால, 10 லிட்டர் பாலையும் லிட்டர் 40 ரூபாய்னு விற்பனை செய்துடுவோம். வயல்ல கிடைக்கிற வைக்கோலும் பிண்ணாக்கும்தான் மாடுகளுக்குத் தீவனம். வருஷத்துக்கு சராசரியா ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு பால் மூலமா வருமானம் கிடைக்கும். அதுல பாதி அளவு செலவானாலும், வருஷம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.

வரவு செலவு கணக்கு

5 தேனீப் பெட்டிகள் இருக்கு. 40 நாட்களுக்கு ஒரு முறை தேன் எடுப்போம். 5 பெட்டிகள்ல வருஷத்துக்கு 300 கிலோ வரை தேன் கிடைக்குது. இதுல வருஷம் 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சிடுது. தேனீக்குனு பெருசா செலவில்லை. பல்லி மாதிரியான பிராணிகள்கிட்ட இருந்து பாதுகாக்கிறதுதான் வேலை. இதுக்கு வருஷத்துக்கு 500 ரூபாய்தான் செலவாகும்.

10 அடி நீளம்,  8 அடி அகலம், 3 அடி ஆழத்துல மண்புழு உரம் தயாரிக்க குழி அமைச்சிருக்கேன். பண்ணைக் கழிவுகளையும், பசுஞ்சாணத்தையும் போட்டு மண்புழுக்களை விட்டா 45 நாளைக்கு 300 கிலோ வரை மண்புழு உரம் கிடைக்கும். இதை சொந்தத் தேவைக்கே பயன்படுத்திக்கிறேன்” என்ற கிருஷ்ணன் நிறைவாக,

தேனீப்பெட்டிகள்

“இந்த அரை ஏக்கர் இல்லாம தனியா நாலரை ஏக்கர் இருக்கு. அதுல நெல் சாகுபடி பண்றேன். அரை ஏக்கர்ல மட்டும் செய்து பார்க்கலாம்னு ஒருங்கிணைந்த பண்ணையை அமைச்சேன். ரொம்பவே நல்லா வந்திருக்கு. இதுலேருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடுது. அதில்லாம மத்த விவசாயிகளுக்கு மாதிரிப் பண்ணையாவும் இது இருக்கிறதுல எங்களுக்கு முழுத் திருப்தி” என நெகிழ்ச்சியுடன் சொன்னார்.

விவசாயம் வாங்கித் தந்த விருதுகள்!

விருதுகளுடன் விவசாயி

  • கிருஷ்ணன், 2011-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடமிருந்து ‘சிறந்த முன்னோடி விவசாயி’ விருது பெற்றுள்ளார்.
  • 2012-ம் ஆண்டு அப்போதைய மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரிடமிருந்து தேசிய விருது மற்றும் 2 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை பெற்றுள்ளார்.
  • 2013-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெற்றுள்ளார்.  2014-ம் ஆண்டு ‘சிறந்த வேளாண் விவசாயி’ என்ற மாநில விருது; 2015-ம் ஆண்டு சிறந்த ‘உழவர் ஊக்குவிப்பாளர்’ என மாநில விருது; 2016-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலையிலிருந்து ‘வேளாண்மைச் செம்மல்’ விருது என ஒவ்வொரு ஆண்டும் விருது பெற்றுள்ளார்.

தொடர்புக்கு,
கிருஷ்ணன்,
செல்போன்: 08973737379 .

நன்றி:  பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *