கரும்புச சோகை இயற்கை உரம்

கரும்பு வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் 10-20 சதவீதம் கரும்பு சோகை கிடைக்கும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் 2.4 மில்லியன் டன்கள் அளவில் கரும்பு சோகை கிடைக்கிறது.

பொதுவாக 100 டன்கள் கரும்பு விளையும் நிலத்திலிருந்து குறைந்தது 10 டன்களாவது கரும்பு சோகை கிடைக்கும். இதை மக்க வைத்து இயற்கை உரம் செய்ய முடியும்

செய்முறை:

  • 10 டன் கரும்பு சோகையை மக்கவைக்க கீழ்க்கண்ட பொருட்கள் அவசியம். கரும்பு ஆலைக்கழிவு அழுக்கு (பிரஸ் மட்) – 10 டன்கள். யூரியா-100 கிலோ, ஜிப்சம்-200 கிலோ, ராக் பாஸ்பேட்-200 கிலோ,மாட்டுச்சாணம்-500 கிலோ, மட்கிய குப்பை-500 கிலோ, மண்-500 கிலோ, தண்ணீர் – தேவையான அளவு.
  • கரும்பு வயலில் ஒரு மூலையிலோ அல்லது உழவர்களுக்கு சவுகரியமான இடத்தையோ மண்வெட்டி கொண்டு செதுக்கி சுத்தம் செய்து 7 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் கொண்ட பகுதிகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
  • குழிவெட்டி கம்போஸ்ட் செய்யும் முறை சிறந்த முறை என்றாலும் குழி வெட்டுவதில் சிரமம் இருப்பதாலும், செலவைக் குறைப்பதற்காகவும் குழிமுறையில் கம்போஸ்ட் செய்வது தவிர்க்கப்படுகிறது.
  • முதலில் 7 x 3 மீட்டர் பரப்பளவில் 15 செ.மீ. உயரத்திற்கு கரும்பு சோகையை பரப்ப வேண்டும். இதற்கு சுமாராக 100 கிலோ கரும்பு சோகை தேவைப்படும்.
  • பின் இவ்வாறு பரப்பிய கரும்பு சோகை மீது 100 கிலோ பிரஸ் மட் எனப்படும் கரும்பாலை அழுக்கை பரப்பிவிட வேண்டும்.
  • அதன்மீது ராக்பாஸ்பேட் 2 கிலோ, ஜிப்சம் 2 கிலோ, யூரியா 1 கிலோ கலந்த உரக்கலவையினைத் தூவ வேண்டும்.
  • இதன்பிறகு 5 கிலோ மண், 5 கிலோ மாட்டுச்சாணம் மற்றும் 5 கிலோ மக்கிய குப்பை ஆகிய மூன்றையும் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கி கரும்பு சோகையும் கரும்பாலை அழுக்கும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு கரும்புசோகை, கரும்பாலை அழுக்கு, உரக்கலவை, மண், மாட்டுச்சாணம், குப்பைக்கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு மீட்டர் உயரம் வரை அடுக்கிவர வேண்டும்.
  • கடைசி அடுக்கின் மீது மண், கரும்பாலை அழுக்கு இரண்டையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து 5 செ.மீ. உயரத்திற்கு இட்டு மூடிவிட்டு, குவியல் நன்கு நனையும்படி தண்ணீர் தெளித்துவர வேண்டும்.
  • குவியல் ஈரமாக இருந்தால்தான் நுண்ணுயிர்கள் பெருகி சோகை மக்குவது விரைவாகும்.
  • 3 மாதங்கள் முடிந்தவுடன் மண்வெட்டி கொண்டு குவியலை வெட்டிப்பிரித்து சோகையையும் கரும்பாலை அழுக்கையும் நன்கு கலந்து மீண்டும் குவியலாக்க வேண்டும்.
  • ஓரளவிற்கு மக்கி இருக்கும் சோகையை மேலும் நன்கு மக்குவதற்கு இவ்வாறு கலக்கிவிட வேண்டும்.
  • மேலும் 2 மாதங்களுக்கு வாரம் ஒரு முறை குவியல் நன்கு நனையும்படி தண்ணீர் தெளித்துவர வேண்டும்.
  • 5வது மாத இறுதியில் சோகை நன்கு மக்கி ஒரு ஊட்டமேற்றிய கம்போஸ்ட் எருவாக மாறி இருக்கும்.
  • ஒரு எக்டர் நிலத்திலிருந்து கிடைக்கும் சோகையை கம்போஸ்ட் செய்ய மொத்தம் ரூ.2500 வரை செலவாகும்.

ஒரு எக்டர் நிலத்தில் இருந்து கிடைக்கும் சோகையும், கரும்பாலை அழுக்கும் சேர்ந்து குறைந்தது 10 முதல் 15 டன்கள் வரை கம்போஸ்ட் உரம் கிடைக்கும். இந்த எருவின் மதிப்பு ரூ.15,000க்கு மேல் இருக்கும்.

கரும்புச்சோகை கம்போஸ்ட் இடுவதன் மூலம் மண்வளம் காக்கப்படுகிறது. பயிரின் விளைச்சல் கூடுகிறது. சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுகிறது.

பொதுவாக ஒரு எக்டர் நிலத்திலிருந்து கிடைக்கும் கரும்புச்சோகையில் இருந்து தயாரிக்கப்படும் கம்போஸ்ட் உரம் ஒரு எக்டர் மறுதாம்பு கரும்பு பயிருக்கு போதுமானதாகும்.

(தகவல்: முனைவர் ரா.ஷீபா ஜாஸ்மின், அ.திருமுருகன், ரா.சீ.புரு÷ஷாத்தமன், கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாத்தூர்-635 806)

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கரும்புச சோகை இயற்கை உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *