நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…

தமிழகத்தில் விவசாயிகள் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிந்து வருகின்றன. இதன் விளைவாக மகரந்த சேர்க்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கும் விவசாய முறை குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

  • பெரும்பாலும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழியில்தான்.
  • இந்த மகரந்தசேர்க்கையில் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தம் செல்வதே அயல் மகரந்தசேர்க்கை எனப்படும்.
  • அரிசி, கோதுமை போன்ற புல்வகை தாவரங்களுக்கு பூக்கள் மிக சிறியதாய், கண்களுக்கு புலப்படாத அளவில் இருக்கும். மென்காற்று வீசும்போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெற காற்று பெரிதும் துணை செய்கிறது.
  • ஆனால் பல்வேறு காய், கனிகள் சாகுபடியில் குறிப்பாக பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விளைச்சல் தரும் பூச்சிகளின் வாயிலான மகரந்த சேர்க்கை மிகவும் அவசியம்.
  • தேனீ, வண்டு, பட்டாம்பூச்சி போன்றவை விவசாயிகளுக்கு நன்மை தரும் பூச்சிகள். இவை, பூக்களில் தேன் எடுக்க ஒவ்வொரு பூவாக செல்லும்போது மகரந்தத்தை எடுத்துச் சென்று அயல் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.

சூழலியல் விவசாய முறை:

  • இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் நவீன அறிவியல் பயன்பாடே சூழலியல் விவசாயமாகும்.
  • இந்த புதிய விவசாய முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் எந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு மருந்தை தெளிக்க வேண்டும்.
  • பொதுவாக அதிகாலையில் பூச்சிமருந்தை அடித்தால் நன்மை தரும் பூச்சிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம்.
  • அதிகாலையில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது.
  • அடுத்ததாக சில தாவரங்களின் பூக்கள் நண்பகலில் இதழ்மூடிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த தாவரம் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் நண்பகலில் இதழ் மூடிய பூவை அண்டாது. எனவே அத்தகைய நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பது நன்மை தரும்.
  • இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலியவற்றை அறிந்து பூச்சி மருந்தை தெளித்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சூழலியல் விவசாய முறையாகும்.
  • உலகில் 90 சதவீத உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் நூறு தாவரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும்.
  • இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த அயல் மகரந்தசேர்க்கைக்கு சூழலியல் விவசாய முறை பெரிதும் உதவுகிறது. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அழிந்தால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும்.
  • தன் மகரந்தை சேர்க்கை ஏற்படும் கத்தரிகாய் போன்ற தாவரத்திலும், அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் அதிகளவு மகசூல் கிடைக்கும்.

இவ்வாறு தாவர இயல்புகளை அறிந்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கும் சூழலியல் விவசாய முறைகள் தமிழக விவசாயிகள் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம் என்றார் ராஜ்பிரவீன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *