நம்மாழ்வார் விட்டுச்சென்ற ‘வானகம்’!

நம்மாழ்வார் நினைவேந்தல்

ன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு திரும்பியுள்ள இளைஞர்களும், காபி ஷாப்கள் போல, சாலையோரங்களில் முளைத்திருக்கும் ஆர்கானிக் அங்காடிகளும் நம்மாழ்வார் விதைத்த விதையின் அறுவடைகள். தனது வாழ்நாள் முழுக்க இயற்கை விவசாயத்துக்கும், அது சார்ந்த மரபியல் போராட்டங்களுக்காக மட்டுமே அர்ப்பணித்தவர் நம்மாழ்வார்.

அவரது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் வானகத்தில் நடந்தது.

கடவூர் மாவட்டத்தில் தரிசாக இருந்த நிலமானது இன்று, இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. சிறு, குறு தானியங்களான ராகி, கம்பு, சோளம், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவையும் இங்கு பயிரிடப்படுகிறது.

உடலுக்கு நஞ்சாகும் எந்தவித ரசாயன உயிர்க் கொல்லிகளும் இங்கு பயிர்களுக்கு பயன்படுத்தாமல் இயற்கையான உரங்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இளைஞர்களை இயற்கை வேளாண்மையில் அதிக அளவு ஈடுபடுத்தும் வகையில் இங்கு வேளாண்மைப் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

பல ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் கூட மக்கள் இங்கு வேளாண் பயிற்சி பட்டறைக்கு ஆர்வமுடன் கலந்து கொண்டு வேளாண் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வானகத்தை உருவாக்கிய நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் வானகத்தில் இயற்கை விழாவாகவே அனுசரிக்கப்பட்டது.

சாவித்திரி நம்மாழ்வார்

நம்மாழ்வாரின் துணைவியார் சாவித்திரி நம்மாழ்வார் அவர்கள் மரக்கன்று நட்டு வைத்து விழாவை துவக்கி வைத்தார். நினைவேந்தல் நிகழ்வில் பல ஊர்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக 174 மரபு நெல் வகைகள், இலுப்பை, பண்ணை மர விதைகள், பசுமைக் காய்கறிகள், கீரைகள், சிறு குறு தானியங்கள், நம்மாழ்வார்வாரின் புத்தகங்கள் போன்றவை பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தது. பெரும்பலான மக்கள் அதனை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சூழலியல் செயல்பாட்டாளர் பரத் மன்சாடா, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், இயற்கை வழி வேளாண்மையாளர் இலியாஸ் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

வானகம்

குஜராத்தைச் சேர்ந்த பரத் மன்சாடா ‘Organic farming’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் பேசும்போது மகாராஷ்டிரத்தின் மிகப் பெரிய சூழலியாளர் பாஸ்கர் சாபேவையும் நம்மாழ்வாரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறினார்.

விவசாயத்தில் நடக்கும் அரசியல் பற்றி பேசிய பரத் மன்சாடா, இயற்கை சார்ந்து வேளாண்மை செய்வதே, வலுவான சமூகத்தை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார். கவிஞர் அறிவுமதி பேசும்போது நம்மாழ்வாருடன் பசுமை உலகுக்காக பணியாற்றும்போதுதான் தானும் சூழலியாளாராக மாறியதாக குறிப்பிட்டார். ‘மரம் சா மருந்தும் கொள்ளா’ என்னும் சங்க கால நற்றிணை வரியை எடுத்துரைத்த அவர், பசுமையான சமூகத்தின் தேவை குறித்தும் பேசினார்.

நம்மாழ்வார்

கேரளாவைச் சேர்ந்த சூழலியாளர் இலியாஸ் இயற்கை விவசாய முறையை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பவர். இலியாஸ் பேசும்போது, கேரளாவில் 2012-ல் நம்மாழ்வார் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவரின் கருத்துகளாலும், செயல்பாடுகளாலும் கவரப்பட்டதாக கூறியவர், அதன் பின்னர் நம்மாழ்வாரின் இயற்கை முறை வேளாண்மையை அதிகமாக பின்பற்றியதாக கூறினார்.

கோழிக்கோட்டில் பெரும் பகுதி ஒன்றை இயற்கை விவசாய பூமியாக மாற்றிய பெருமை நம்மாழ்வாரையேச் சாரும் என்று நினைவு கூர்ந்தார். கவிஞர் பாமரன் நம்மாழ்வாருடன் நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததோடு, இயற்கை முறை விவசாயத்தின் அவசியம் பற்றியும் கூறினார்.

விழாவில் வெட்டி வேர் குடிநீரும், சிறு தானிய மதிய உணவும் மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் இளைஞர்கள்  பெரும்பான்மையாக இருந்தது, மாறி வரும் இயற்கை சார்ந்த உணவு பழக்கங்களையும், இக்கால இளைஞர்களின் வேளாண் ஆர்வத்தையும் காட்டும்படியாக இருந்தது.

இந்த வருட தொடக்கம் வானக மக்களுக்கு இயற்கை வேளாண்மைச் சார்ந்த தெளிவும், அதை நோக்கிய பயணப் புள்ளியாகவும் இருக்கும்படி அமைந்தது.

நன்றி: ஆனந்த விகடன்

Related Posts

இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்... ""இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியின...
இயற்கை வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள்... வணக்கம் , வருகிற டிசம்பர் 30ம் தேதி 2014 செவ்வாய்...
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி... இயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந...
இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar... இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *