‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்

யற்கைக்கு முன்ன நாமெல்லாம் ரொம்பவும் சின்னவங்கதான். பூமியோட ஆயுள் ரொம்பவும் அதிகம். நமக்கு ஒரு நொடி மாதிரிதான் பூமிக்கு 100 வருஷம். டைனோஸரையே இயற்கை பாத்துடுச்சு, அதனால இயற்கையை நாம காப்பாத்துறோம்ங்கிற கர்வம் வரவே கூடாது. ஏன்னா.. அது நம்மளோட கடமை. நாம நல்லா இருக்கணும்னா இயற்கையோட ஒன்றித்தான் ஆகணும். மரங்கள் வளர்த்துதான் ஆகணும். தண்ணீர் சேமிச்சுதான் ஆகணும்.

மாடு கூட, சாப்பிடும்போது வேரை விட்டுட்டுத்தான் சாப்பிடும். சில நாட்கள் கழிச்சு திரும்ப அதே இடத்துல புல் முளைக்கும், மீண்டும் அதை மாடு சாப்பிடும். ஆனால் மனிதர்கள்தான் இயற்கையை வேரோடு அழிக்கிறாங்க. வீட்டைச் சுத்தி மொசைக், டைல்ஸ் போட்டு, சாலையில் தார் போட்டு மொழுகி, பூமிக்குள்ள தண்ணி போற துவாரத்தை எல்லாம் அடைச்சிடுறோம். இது, மரத்தோட கிளையில் உட்கார்ந்துக்கிட்டு அதனையே வெட்டுறதுக்குச் சமம்”

-தனக்கே உரிய பாணியில் நேரிலும் ஈர்ப்புடன் பேசுகிறார், திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பரபரப்பாக இருக்கும் பிரகாஷ்ராஜ், ஒரு ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயி. ஹைதராபாத், கம்மாதனம் பகுதியில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருந்தவரைச் சந்தித்தோம்.

“எனக்கு விவசாயத்துல ஆர்வம் வர்றதுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தது, ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கர்தான். சில வருஷங்களுக்கு முன்ன ஜீரோ பட்ஜெட் விவசாயம் பத்தி பேச மைசூர் பக்கமா வந்தாரு. அவர பாக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, நிகழ்ச்சி முடிஞ்சிப் போச்சினு சொல்லிட்டாங்க. அடுத்த நாள் காலையில அவர் 9 மணிக்கு ரயில்ல போறார்னு தகவல் கிடைச்சது.

காலையில 6 மணிக்கே அவர் தங்கி இருந்த இடத்துக்குப் பார்க்க போயிட்டேன். என்னைப் பாத்ததும் ஆச்சர்யப்பட்டார். ‘எனக்கும் விவசாயம் சொல்லிக் குடுங்க, ஆசையா இருக்கு’னு கேட்டேன். உடனே, ‘சொன்னா புரியாது, வா போலாம்’னு பன்னவாசி (கர்நாடகா) அருகில் இருந்த ஒரு பண்ணைக்குக் கூட்டிட்டுப் போனார். அந்தப் பண்ணையில அவர் சொல்லிக் கொடுத்த விஷயங்களைக் கேட்க கேட்க அவர் மேல மிகப்பெரிய மரியாதை வந்துச்சு.

ஜீரோ பட்ஜெட் விவசாயம் தவிர, எதுக்குமே சமாதானம் ஆகாத நேர்மை, நேர்படப் பேசுற தைரியம், அவரோட கோபம்னு அவர் இயல்பு எனக்குப் பிடிச்சிடுச்சு. அப்படியே பழக ஆரம்பிச்சு இன்னிக்கும் அவரோட தொடர்புல இருக்கேன். கொண்டாரெட்டிப்பள்ளியில (ஹைதராபாத்) நான் ஒரு கிராமத்தைத் தத்து எடுத்தி ருக்கேன். அந்த கிராமத்துக்கு அவர அழைச்சிக்கிட்டு வந்து அங்கிருக்குற 230 விவசாயிகளுக்கும் ஒரு வாரம் பயிற்சி முகாம் நடத்தணும்னு ஆசை.

கண்டிப்பா கொஞ்ச நாட்கள்ல அது நடக்கும். அவங்களுக்கு மட்டுமில்ல எனக்கும், என்னோட விவசாயத்துல உதவியா இருக்கிற என் பணியாளர்களுக்கும் உதவியா இருக்கும்னு நம்புறேன்” என்ற பிரகாஷ்ராஜ், தான் விவசாயத்துக்கு வந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“எனக்கு விவசாயம் ஒண்ணும் பாரம்பர்யமில்ல. என்னோட அப்பா அம்மா ரெண்டு பேருமே நகரத்துல வாழ்ந்தவங்கதான். நான் கஷ்டப்பட்டு நடிகனா ஒரு இடத்தப் பிடிச்ச கொஞ்ச நாட்கள்லேயே வாழ்க்கை ரொம்ப பரபரப்பா ஆகிடுச்சி. விமானப் பயணம், அடுக்குமாடிக் கட்டட வாழ்க்கைனு எனக்கும் பூமிக்கும் இடைவெளி அதிகமாயிருச்சு. ஒருமுறை சென்னையில் இருந்து பெங்களூருக்கு கார்ல போனேன். அப்போ, சாலையோரங்கள்ல பாத்த அந்த மலைகள், வயல்கள், மரங்களும் என்னை இதுதான்டா இயற்கைனு  கூட்டிட்டுப் போச்சு. அதுக்கப்புறமா அடிக்கடி கார்ல டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். அந்த சமயத்துலதான் விவசாயம் பண்ற ஆசையும் வந்தது.

உடனடியா அதை செயல்படுத்த முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல எனக்கு ஒண்ணும் தெரியாதுனாலும், கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிட்டேன். எனக்கு சென்னையில மகாபலிபுரம், ஹைதராபாத்ல கம்மதானம், கொண்டா ரெட்டிபள்ளி, ஸ்ரீரங்கப்பட்டினம்,  அடுத்து கொடைக்கானல்னு பல இடங்கள்ல பண்ணைகள் இருக்கு. நான் விரும்பி நடுறது மா, தென்னை, பனை மரங்கள்தான். இதைத்தவிர, எல்லா காய்கறிகளையும் பயிர் செய்றேன். எந்த காய்கறி பேரைச் சொன்னாலும் அது, என்னோட ஏதாவது ஒரு பண்ணையில விளையும். இது தவிர, எலுமிச்சை ஆரஞ்சு, வாழை, சப்போட்டா பழ வகைகளும் இருக்கு.

இதோ நீங்க பார்க்கிற இந்தப் பண்ணை இருக்கிற இடம் நான் வாங்கும் போது வெறும் கட்டாந்தரையா இருந்துச்சு. புல் கூட நெருக்கமா முளைக்கல. அதுல ஓங்கோல் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள் கொஞ்சத்தை வாங்கிப் பராமரிக்க ஆரம்பித்தேன். அந்த மாடுகள் போட்ட சாணத்துலயும், மூத்திரத்துலயும்தான்  இந்த பூமி வளமாகியிருக்கு. அதுக்கப்புறமாதான், மா, தென்னைனு  நட்டோம்” என்ற பிரகாஷ்ராஜ் நிறைவாக,

“இத்தனை நாட்கள் வாழ்ந்து எவ்வளவோ நல்ல விஷயத்தை பூமிகிட்ட இருந்து அனுபவிச்சிருக்கேன். இனி இது என்னோட நேரம். நான் பூமிக்கு இன்னும் நிறைய செய்யணும். என் காலத்துக்குள்ள ஒரு லட்சம் மரமாவது நடணும். இதே மாதிரி இயற்கையான சூழல்ல அடுத்த தலைமுறையும் வாழணும்” புன்னகையோடு பண்ணையைப் பார்க்கிறார், பிரகாஷ்ராஜ்

புதுமையான பாசனமுறை!

“எனது பண்ணையில தண்ணீர் பாய்ச்ச ஒரு புது முறையைப் பயன்படுத்துறேன். நீரை இறைப்பதற்காக ஒரு காற்றாலை அமைச்சிருக்கேன். அது காத்துல சுத்த சுத்த அதோட இணைஞ்சு இருக்கிற கருவி பூமியின் அடியில் இருந்து நீரை ஏற்றி மின்சாரமே இல்லாம ஓவர் டேங்கில் நிரப்பி விடும். ஓவர் டேங்கை உயரமாக அமைச்சிருக்கோம். இதனால,  புவியீர்ப்பு விசையிலேயே சொட்டுநீர்க் குழாய்கள் மூலமாக செடிகளுக்கு பாசனம் நடந்துடுது. மின்சாரமும், மனித உழைப்பும் தேவை இல்லை. டேங்க் நிரம்பி வழிஞ்சா, அந்த தண்ணி குளத்தில் போய் சேர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கோம். தண்ணீர் நமக்கு கிடைச்ச தேவாம்சம். நம்ம தேவைக்காக பூமியின் அடியில் எப்படி நீரை தேடுறமோ, அதேமாதிரி நீரை மண்ணுக்குள்ள சேக்குறதிலயும் அக்கறை காட்டணும்” என்று அக்கறையுடன் சொல்கிறார், பிரகாஷ்ராஜ்.

பல பயிர் சாகுபடி!

“என்னோட பண்ணையில 30 அடி இடைவெளியில மா, தென்னை மரங்களை வெச்சிருக்கோம். மரங்களுக்கு இடையில இந்த இடைவெளி நிச்சயம் இருக்கணும். அந்த இடைவெளியில 8 அடிக்கு ஒரு சப்போட்டா, கொய்யா, மாதுளை நடலாம். அதுகளுக்கு இடையில, 2 அடி இடைவெளியில காய்கறிகளை நடலாம். அதுக்கும் இடையில பரவலா கொத்தமல்லி, கறிவேப்பிலை நடலாம். இது மாதிரி பல பயிர்களை நடும்போது மண்ணும் வளமாகும். விவசாயிக்கு வருமானமும் அதிகமாகும்” தேர்ந்த விவசாயியைப் போலப் பேசுகிறார், பிரகாஷ்ராஜ்.


விவசாயிகளுக்கான சந்தை..!

“கிராமத்துல கிலோ 16 ரூபாய்க்கு விற்பனையாகிற பாகக்காய், முட்டைகோஸ் எல்லாம் நகரத்துக்குப் போனா 60, 70 ரூபாய்னு விற்பனையாகுது. ஆனா, உற்பத்தி பண்ணுன விவசாயிக்கு பெருசா லாபமில்ல. அவங்க குடும்பம் மட்டும் எப்பவுமே கஷ்டத்துல இருக்கு. இது எனக்கு சரியா படல. நாம சாப்பிடணும்னு உழவு செய்றவன், கடன் சுமையில கஷ்டப்படுறதுக்கும், மருத்துவத்துக்குக் கூட காசில்லாம அலையிறதுக்கும் விவசாயி மட்டும் காரணமில்லை. நாமளும் ஏதோ ஒருவகையில காரணமா இருக்கோம். என்னால முடிஞ்ச வரைக்கும் ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதுனால ‘வெஜ் மந்திரா’னு ஒரு சந்தை ஆரம்பிச்சிருக்கேன். இனி வருங்காலத்தில் விவசாயிகளோட இடத்துக்குப் போய் காய்கறிகளை வாங்கி, விற்பனை செய்து அதிக லாபத்தை அவங்களுக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். விரைவில இது நடைமுறைக்கு வரும்.  அது மட்டுமில்ல வார இறுதி நாட்கள்ல குழுவாகவோ, குடும்பமாவாகவோ பள்ளி மாணவர்களாகவோ, வந்து விவசாயம் பத்தி தெரிஞ்சிக்க, ஒரு பயிற்சி களமாவும் என்னோட பண்ணைகள் இருக்கும்” என்றார், பிரகாஷ்ராஜ்.

‘‘போன்சாய் மரங்கள் வேண்டாமே!’’

தனது தோட்டத்தில்  ஏராளமான போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார், பிரகாஷ்ராஜ். அது குறித்துப் பேசியவர், “ஆலமரம், அரசமரம் இதெல்லாம் பெருசா வளரணும். அதுதான் அதோட இயல்பு அதை போயி ஒரு சின்னக்கிண்ணத்துல வெச்சி அழகு பாத்தா நல்லாவா இருக்கும். இடம் இல்லைனா அதை நடவே கூடாது. அதோட இயல்பைக் கெடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கு… நம்மள யாராவது டெஸ்ட் டியூப்லயே வெச்சு அழகு பாத்தா கோபம் வருமில்ல. அதனாலதான், எந்த இடத்துல போன்ஸாய் கண்ல பட்டாலும் அதை எடுத்துட்டு வந்து என் பண்ணையில வெச்சி… அதோட இயல்புக்கு வளரட்டுமேனு  வெச்சிடுவேன். அது கண்டிப்பா பெருசாயிடும்” என்கிறார், நம்பிக்கையுடன்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

8 thoughts on “‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்

  1. Devi says:

    very nice informations ..On reading this i am also inspired and want to do like this activities .May i know whether we can visit this farm house anything in chennai or nearby

  2. Prakash says:

    Recently I watched ‘Un Samayal Arayil’ movie and really impressed. Now after reading this article i do not have any words to appreciate his talent. He is the real super hero. I am really impressed and read this article multiple times. I am also having interest to start agriculture farm once I back to India.

  3. இராசேந்தி ரன் says:

    நடிப்பில் மட்டுமல்ல விவசாயத்திலும் சமரசம் இல்லாமல் இயல்பாக செயல்பட்டு நிரூபித்தமைக்கு வாழ்த்துக்கள். பலருக்கும் வழிகாட்டுங்கள்.

  4. dinesh kannan says:

    nanum yenathu nilathil zero budget/try pannanum nu aasa paaduran . nan one straw revoloution padichan masanobu fukuoka,namazhvar, subash palekar , krishnappa ivangalam than yennoda inspiration . intha comments ninga (prakash raj) parpingala nu theriyala. aanal prakash raj idam ithai yaravathu solla mudinja sollunga .nan unga pannai nilatha pakkanum . yenaku tips venum.ungaluku reply panna mudinja intha mail id ku pannunga deenakannan100@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *