மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து

“அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் விதமாக உளுந்து பயிரிடவேண்டும்,’ என வேளாண் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது.

ஒரு எக்டேர் சத்தான மண்ணில் ஒரு சதவீதம் கரிம சத்தும்,300 கிலோ தழைச்சத்தும் 20 கிலோ மணிச்சத்தும், 200 கிலோ சாம்பல் சத்தும் இருக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கரிமச்சத்து 0.4 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரையே உள்ளன.

நெல் நடவு செய்தவர்கள் மண் வளத்தை அதிகப்படுத்தும் உளுந்து பயிரை பயிரிட்டனர். உளுந்தானது வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உட்கிரகித்து மண்ணின் தழைச்சத்தை அதிகரிக்கவல்லது. உதிரும் இலைகள் கரிமசத்தை அதிகரிக்கும். அதன் வேரில் உள்ள முடிச்சுகளில் தழைச்சத்தை கிரகித்து கொடுக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதனால், மண்வளம் மேம்பட்டு வந்தது. மழையின்மையால் அறுவடை முடிந்ததும் நிலத்தை தரிசாக போட்டு வந்தனர். இதனால் மண்வளம் குன்றி, போதிய விளைச்சல் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால், பெரும்பாலான பகுதி கண்மாய்களில் நீர் இருப்பு உள்ளன. கடந்த ஆண்டில் விவசாயம் மேற்கொள்ளாதவர்களும் பருவம் தவறி விதைத்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அறுவடை தொடங்க உள்ளது. அறுவடை முடிந்ததும் நிலத்தின் வளம் மேம்பட உளுந்து பயிரிடலாம் என செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி நிலைய துறை தலைவர் மெர்டில் கிரேஸ் கூறுகையில், “”மழை ஓரளவு பெய்துள்ளதால் நெல் அறுவடை முடித்த விவசாயிகள் வம்பன் 5,6 கோ-6 உள்ளிட்ட உளுந்து வகைகளை தை பட்டத்தில் விதைக்கலாம். 65 முதல் 75 நாளில் விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு 5 கிலோ விதை மட்டும் தேவைப்படும். 5 கிலோ விதையில் 50 கிராம் சூடோமோனஸ், 10 கிராம் டிரைக்கோ டெர்மாவிரிடி கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். உளுந்துக்கான சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் லாபம் பெறலாம்,” என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மண்வளத்தை நிலை நிறுத்தும் உளுந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *