அசோலா உற்பத்தியில் லாபம் அடையலாம்

“அசோலா’ உற்பத்தி மூலம், கால்நடை வளர்ப்பை லாபம் மிக்கதாக மாற்ற முடியும்’ என, மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் கால்நடை மருத்துவர் அசோகன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

  • நீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையை சார்ந்த தாவரம், “அசோலா‘.
  • கால்நடைகளுக்கு மட்டுமின்றி கோழிகளுக்கும், தரமான தீவனமாக பயன்படுகிறது.
  • கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், விட்டமின்கள், பீட்டாகாரோடின் உட்பட 30 சதவீத புரதச்சத்துகள், இதில் உள்ளன.
  • நிழல் உள்ள இடத்தில் 10 அடி நீளம், இரண்டு அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, அதன் அடிப்பகுதியில், சில்பாலின் சீட்டை சீராக விரிக்க வேண்டும்.
  • பாலித்தின் சீட்டின் மேல் இரண்டு செ.மீ., அளவிற்கு தண்ணீர் ஊற்றி, பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாய்பேட், ஐந்து கிலோ பசுஞ்சாணம் கரைத்து இட வேண்டும்.
  • குளம், குட்டைகளின் மேல், பசுமையாக மிதக்கும், “அசோலா’ தாவரத்தை சேகரித்து, பாத்தி ஒன்றுக்கு ஐந்து கிலோ போட வேண்டும்.
  • இதன் மூலம், மண்ணில் உள்ள சத்துகள், தண்ணீரில்கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாட்களில் ஒரு பாத்தியில், 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும்.
  • மூன்றில் ஒரு பங்கு அசோலாவை, பாத்திலேயே விட்டு விட்டு, மீதியை அறுவடை செய்யலாம்.
  • பத்து நாட்களுக்கு ஒரு முறை, ஐந்து கிலோ பூஞ்சாணம் கரைப்பது நல்லது.
  • பூச்சித்தொல்லை வந்தால், ஐந்து மில்லி வேப்பெண்ணையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பாத்தியில் தெளிக்கலாம்.
  • அசோலா உற்பத்தி கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் காணப்படும்.
  • அசோலாவை நம் தேவைக்கு ஏற்ப, வீட்டிற்குள் சிறு பாத்திரங்கள், தொட்டிகளில் வைத்தும் தயாரிக்கலாம்.
  • அசோலாவை உரமாகவும் பயன்படுத்த முடியும்.
  • ஒரு ஏக்கர் வயலுக்கு, இரண்டு சென்ட் நாற்றங்கால் தேவைப்படும். ஒரு சென்ட் நிலத்தில் பாத்தி கட்டி, 10 முதல் 15 செ.மீ., தண்ணீர் நிரப்பி, 10 முதல் 15 கிலோ சாணமும், 100 கிராம் “சூப்பர் பாஸ்பேட்’ அல்லது “ராக் பாஸ்பேட்’ போட வேண்டும்.
  • பின்னர், 8 முதல் 10 கிலோ அசோலாவை இதில் போட்டால், 15 நாட்களில் 80 முதல் 100 கிலோ அசோலா வரை கிடைக்கும்.
  • இவ்வாறு உற்பத்தி செய்யும் அசோலாவை, நெற்பயிர் இட்ட ஒரு வாரத்தில், ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 200 கிலோ உரமாக போடலாம்.
  • இது 20 முதல் 25 நாட்களில் நன்கு வளர்ந்து, ஒரு ஏக்கர் நிலம் முழுவதும் பரவி விடும். நெற்பயிரோடு சேர்த்தும், அசோலாவை வளர்க்கலாம்.
  • அசோலாவை நுண்ணுயிர் உரமாக பயன்படுத்துவதால் 20 முதல் 30 சதவீத உரச் செலவை குறைக்க முடியும். களை வளர்வது கட்டுப்படுத்தப்படும். நீராவி ஆவதும் தடுக்கப்படும்.
  • அசோலாவில் “லிக்னின்’ மற்றும் நார்சத்து அதிகம் இருப்பதால், கால்நடைகள், கோழி, பன்றி மற்றும் மீன்களுக்கு உரமாக கொடுக்கலாம்.
  • அறுவடை செய்த அசோலாவை, மாட்டுச் சாணத்தின் வாசனை போகும்வரை, தண்ணீரில் கழுவி, தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் 1-1 என்ற சதவீதத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.
  • அசோலவை ஒரு பசுவிற்கு, இரண்டு கிலோ வரை, தீவனமாக கொடுப்பதால், 15 முதல் 20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும்.
  • புண்ணாக்கு செலவு 25 முதல் 40 சதவீதம் வரை குறையும்.
  • பாலின் தரம் அதிகரிப்பது மற்றுமின்றி, கால்நடைகளின் ஆரோக்கியம் அதிகரித்து வாழ்நாளும் அதிகரிக்கிறது.
  • அசோலாவை மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு, ஒன்று முதல் 15 கிலோவும், இறைச்சிக் கோழி, வான்கோழிகளுக்கு 20 முதல் 30 கிராமும், ஆடுகளுக்கு 300 முதல் 500 கிராமும், வெண்பன்றிக்கு ஒன்றரை முதல் இரண்டு கிலோவும், முயலுக்கு 100 கிராமும் கொடுக்கலாம்.
  • இதில், மூன்று சதவீத கொழுப்பு சத்தும், 14 முதல் 15 சதவீத நார்சத்தும், 25 முதல் 30 சதவீத புரதசத்தும், 45 முதல் 50 சதவீத மாவுச் சத்தும் உள்ளது.
  • ஒரு கிலோ அசோலா உற்பத்தி செய்யும் செலவு, மிகவும் குறைவு என்பதால், தீவனச் செலவு வெகுவாக குறையும்.
  • விவசாயிகள் அசோலா உற்பத்தியில் இறங்கினால், கால்நடை வளர்ப்பை லாபகரமாக செய்ய முடியும். “விட்டமின் பி12′ உருவாவதற்கு, தேவையான மூலப்பொருளாக, “பீட்டாகாரோட்டின்’ உள்ளது. அசோலா கலந்த தீவனத்தை தின்று வளரும் கோழியின் முட்டைகளை சாப்பிடுவதால், மனிதர்களுக்கும் கண் பார்வை நன்றாக தெரியும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *