மண்புழு உரம்

மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம்.

ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணைக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் தழைகள், சந்தையில் இருந்து பெறப்படும் வேண்டாத சொத்தை காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைக் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து பெறப்படும் இலை, வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மண் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து தரமான மண்புழு உரத்தை பெற முடியும்.

 உரக்கூடம் அமைத்தல்:

  • மண்புழு உரக்கூடத்தை தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப அமைக்கலாம்.
  • நீள்வாக்காக கிழக்கு, மேற்காக நல்ல காற்றோட்ட வசதியுடன் உரக்கூடங்களை அமைக்க வேண்டும்.
  • மண்புழுவின் எதிரியான எறும்பைக் கட்டுப்படுத்த சிறிய நீர்வாய்க்கால் தொட்டியின் வெளிப்புற அடிப்பாகத்திலோ அல்லது தொட்டியின் சுவர் விளம்புகளின் மேற்புறத்திலோ அமைக்க வேண்டும்.
  • எலி, பாம்பு, ஓணான், தவளை, ஆந்தை போன்றவற்றில் இருந்து மண்புழுவை பாதுகாக்கும் வகையில் தொட்டிகளின் மேல் சிறுகண் வலைகள் அமைப்பது அவசியம்.
  • மண்புழுக்களுக்கு உணவு அளிக்கும்போது நன்கு மக்கிய உணவை தொட்டியின் மேல்விளிம்பில் இருந்து 2 அங்குலம் குறைவாக இருக்கும்படி நிரப்ப வேண்டும்.
  • தொட்டிக்குள் 40% ஈரப்பதம் இருக்கும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  •  மேல்மட்ட புழுக்களாக இருந்தால் புழு விடுவித்த 7 முதல் 14 நாள்கள் கழித்து ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது 2 நாள்களுக்கு ஒருமுறை 2 அங்குலத்துக்கு மிகாமல் உணவுப்படுக்கையின் மேல் உள்ள குருணை வடிவிலான புழு எச்சங்களை மட்டும் தனியாக சேகரிக்க வேண்டும்.
  •  இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்புழு உரத்தை 3 மி.மீ. கண்கொண்ட சல்லடைகளில் சலித்து உரத்தை பாலித்தீன் காகிதம் ஒட்டப்பட்ட அடர்மிகு பாலி எத்திலின் பைகளில் அடைத்து இருட்டான அறையில் 40% ஈரப்பதத்தில் சூரியஒளி படாத வகையில் வைத்து பயன்படுத்தலாம்.
  •  மண்புழு உர தயாரிப்புத் தொட்டியில் ஊற்றப்பட்ட உபரிநீர் கீழே திரவ உரமாக வெளிவரும்.இதுவே “வெர்மிவாஷ்’ எனப்படும்.இதில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால் பயிர்கள் எளிதில் இச்சத்துக்களை உட்கிரகித்து செழிப்பாக வளரும்.

 மண்புழு உரத்தின் பயன்கள்:

  • மண்புழு உரத்தில் சுமார் 1.5% தழைச்சத்து, 0.5%மணிச்சத்து, 0.8% சாம்பல் சத்து, 12% அங்ககக் கரிமப் பொருள்கள் உள்ளன.
  • ஒரு ஏக்கரில் மண்புழு உரத்தை பயன்படுத்தினால் மண்ணின் உயிர்தன்மை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.
  • உரத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் தாவரங்களுக்கு உடனே கிடைக்கிறது.
  • இதன்மூலம் பயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு, மகசூல் 20 முதல் 30% வரை அதிகரிக்கிறது.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *