கோடை பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் எலுமிச்சை

வரும் ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை விவசாயிகள் பெறலாம் எனத் தோட்டக் கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எலுமிச்சை, மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 எலுமிச்சைக்கு ஏற்ற மண், தட்பவெப்ப நிலை:

  • சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும்.
  • எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில் இடைவெளியைவிட வேண்டும். அப்படி நடும்போது ஒரு ஏக்கருக்கு 160 செடிகள் நடவு செய்யலாம். நோய்த் தடுப்பு செய்யப்பட்ட எலுமிச்சை நாற்றுகளையே நடவு செய்ய வேண்டும்.

குழி தயாரிக்கும் முறை, நீர்ப்பாசனம்:

  • இதற்கான குழியை 75 செ.மீ. சுற்றளவு உள்ளவாறு தோண்ட வேண்டும். நன்கு வளரும் வரை நீர் பாய்ச்சுவது அவசியம். சுமார் 7 முதல் 10 நாள்களில் நீர்ப் பாய்ச்சுவது போதுமானது. வேர் பாகத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

 உரமிடுதல்:

  • தழைச்சத்து 2 பாகங்களாக மார்ச், அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். தொழுஉரத்தை முதல் வருடத்துக்கு 10 கிலோவும், ஆண்டுதோறும் 5 கிலோவும் அதிகரிக்க வேண்டும். தழைச்சத்து முதல் வருடம் 200 கிராமில் தொடங்கி ஆண்டுக்கு 100 கிராம் அளவில் சேர்த்து இட வேண்டும். மணிச்சத்து, சாம்பல் சத்தை ஆண்டுக்கு 100 கிராம் அளவில் போட்டு, ஆண்டுதோறும் 40 கிராம் வரை கூடுதலாகச் சேர்க்க வேண்டும்.
  • உரங்களை இடும்போது மரத்தில் இருந்து 70 செ.மீ. தள்ளி மண்ணில் போட்டு கொத்தி விட வேண்டும்.
    புதிய துளிர் வரும்போது துத்தநாக சல்பேட் 100 லிட்டர் தண்ணீருக்கு 500 கிராம் கலந்து அந்தக் கரைசலை மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் தெளிக்க வேண்டும்.
  • செடியை 45 செ.மீ. உயரம் வரை கிளைகளின்றி நேராக வளர விட வேண்டும். செடிக்கு 30 கிலோ பச்சை இலைகளை 3 மாதத்துக்கு ஒரு முறை இட வேண்டும்.
  • எலுமிச்சை செடியின் ஊடுபயிராக அவரை குடும்பத்தைச் சேர்ந்த பயிர்கள், காய் வகைகளை மரங்கள் காய்ப்புக்கு வரும் காலம் வரை கூடுதலாகப் பயிரிட்டு பயன்பெறலாம்.

 பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல்:

  • காய் பிடிப்பை அதிகப்படுத்த 2.4 டி மருந்தை பி.பி.எம். 20 மில்லி லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். பிஞ்சு காய்கள் உதிர்வதைத் தடுக்க 20 பி.பி.எம். 2.4 டி அல்லது என்.ஏ.ஏ. 30 பி.பி.எம். என்ற மருந்தை 30 மில்லி கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கோடை பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் எலுமிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *