கோடை மழையில் லாபம் குவிக்கும் எள் சாகுபடி!

கோடை மழையில் குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் அளிக்கும் எள் சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது

.
தமிழகத்தில் பரவலாக வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் கிணறுகளும் போதிய நீரின்றி வறண்டு கிடக்கின்றன. ஓரளவு நீர்வளத்தை பயன்படுத்தி பயிரிட்டுள்ள கரும்பு, வாழை பயிர்களுக்கும் போதிய தண்ணீரை அளிக்க இயலாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அக்னி வெயில் தொடங்கியுள்ளது. இருப்பினும், வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் தரும் எள் மற்றும் எண்ணெய் வித்துகளை விவசாயிகள் பயிரிடலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விதைக்கும் முறை:

கோடை மழை பெய்துள்ள தரிசு நிலத்தை நன்கு உழுது, ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். எள் விதைப்பதற்கு முன், ஏக்கருக்கு 44 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் 16 கிலோ, அடியுரமாக 2 கிலோ மாங்கனீசு ஆகியவற்றை கலந்து நிலத்தில் இடவேண்டும்.

தேர்வு செய்த விதை நன்கு பருமனாக கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். விதைகளில் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் சூடம்மோனால் கலந்து 200 கிராம் மைதா மாவு கரைசலில் எள் விதையை மூழ்கச் செய்ய வேண்டும். பின்னர் அரைக் கிலோ சாம்பல் கலந்து விதைக்கு முலாம் பூச வேண்டும். கரைசலில் இருக்கும் விதைகளை நிழலில் உலர வைக்க வேண்டும். இதனால் அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

நிலத்தில் லேசான ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. விதையுடன் உலர்ந்த மணல் 8 கிலோ கலந்து விதைக்க வேண்டும். விதை வறட்சியைத் தாங்கி நன்கு வளரும்.

களை கொத்துதல்:

விதைத்த 15 -ஆவது நாள் செடியிலிருந்து அரை அடி தூரம் விட்டு களைகளை கொத்திவிட வேண்டும். 30 -ஆவது நாளில் மீண்டும் களைகொத்த வேண்டும். அப்போது வளர்ச்சி, வீரியம் குன்றிய செடிகளை அகற்றிவிட வேண்டும். இதனால், ஆரோக்கியமான செடிகள் மேலும் நன்கு வளரும். களைகள் மூலம் நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், நீர்ச்சத்து வீணாவதை தடுக்கலாம். களைச்செடிகள் மூலம் பூச்சிகள், நோய்கள் பரவுவதையும் தடுக்கலாம்.

களை எடுத்தல்:

எள் விதைத்த 40 முதல் 45 நாள்கள் வரை களைகளை அகற்றுவது அவசியம். அதிக களைச் செடிகளை களைக்கொல்லிகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.

விதைத்த முதல் நாளிலும், மூன்றாம் நாளிலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் ஈரத்தன்மைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சலாம். எள் செடி பூக்கும் தருணத்திலும், காய்ப்பிடிக்கும் தருணத்திலும் தண்ணீர் விடவேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

செடிகளில் பூக்கள் சிறு இலைகளாக அடர்த்தியாக மாறும்போது மகசூல் பாதிக்கும். இது பூவிதழ்நோய் பாதிப்பாகும். இதனை கட்டுப்படுத்த டைமீத்தோயேட் அல்லது மோனோகுளோரோட்டோபாஸ் 200 மில்லியை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இலைகள், காய்கள் மஞ்சள் நிறமாக மாறும்போது இலைகள் உதிரும். அப்போது அறுவடை செய்து, ஒரு வாரத்துக்குப் பின் செடிகளை உலரவைத்து எள் மகசூலைப் பெறலாம்.

சாகுபடிக்கு ஏற்ப பருவம்:

எள் சாகுபடிக்கு மே -ஜூன் மற்றும் ஜனவரி -பிப்ரவரி மாதங்கள் ஏற்ற பருவம். தற்போது பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக நல்லெண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வணிக நிறுவனங்களின் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.250 – வரையிலும், தாவர எண்ணெய் கலந்த நல்லெண்ணெய் ரூ.150 முதல் ரூ.180 வரையிலும் விற்பனையாகிறது.

மரச் செக்கில் தயாராகும் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.300-ஐ எட்டியுள்ளது. தேக ஆரோக்கியத்துக்கு, நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் மூலகாரணியாக இருந்து வருகிறது. விவசாயிகள் எள் சாகுபடியில் ஈடுபட குறைந்த அளவு நீர்வசதி இருந்தாலும் போதுமானது. குறைந்த செலவில் 80 -90 நாள்களில் அதிக லாபம் பெறலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷும், தொழில்நுட்ப வல்லுநர் கருணைதாசன் ஆகியோர் தெரிவித்தனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *