அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்

கடலூர் என்று சொன்னால் அது இரண்டு இடங்களுக்குப் பிரபலம். ஒன்று தொழிற் சாலைகள் நிறைந்த சிப்காட். இன்னொன்று அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம்.

சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களைத் தடுப்பது முதல் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது வரை சுமார் 21 வகையான சூழலியல் சேவைகளை இந்த அலையாத்திக் காடுகள் (Coastal Mangroves) மேற்கொள்கின்றன. மேலும் 90 சதவீத கடல் உயிரினங்கள் தங்களுடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தை அலையாத்திக் காடுகளில் கழிக்கின்றன. தவிர, 80 சதவீத கடல் மீன் வளத்துக்கும் இந்தக் காடுகள் காரணமாகும்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

அலையாத்திக் காடுகள் எவ்வாறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசுகளில் உள்ள கனரக உலோகங்களை சேர்த்து வைத்துக் கொண்டு சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தவர் எஸ்.சாண்டில்யன். மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரியின் விலங்கியல் துறை முன்னாள் பேராசிரியரான இவர், கடந்த ஆண்டு தனது ஆய்வுக் கட்டுரையை ‘எல்சிவ்யர்’ பதிப்பகத்தின் வெளியீடான ‘ஓசன் அண்ட் கோஸ்டல் மேனேஜ்மென்ட்’  (Ocean and coastal Management) எனும் பிரபல அறிவியல் ஆய்விதழில் வெளியிட்டு பெரும் கவனத்தை ஈர்த்தவர். இதுகுறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

“கடலூரில் இருந்து பிச்சாவரம் 40 கிமீ தூரம் கொண்டது. கடலூரில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவை வெளியிடும் புகை மற்றும் இதர திரவ‌ மாசுபாடுகள் நேரடியாகக் கடலில் கலக்கின்றன. அவை கடல் அலைகள் மூலம் பிச்சாவரம் பகுதியை வந்தடைந்து அதிக பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது.

இயற்கையிலேயே அலையாத்திக் காடுகள், தொழிற்சாலைகள் வெளியிடும் பாதரசம், ஈயம், துத்த நாகம், வெள்ளீயம், கோபால்ட், செம்பு, குரோமியம், காட்மியம், மாங்கனீசு, நிக்கெல் மற்றும் இரும்பு போன்ற ஆபத்தான‌ கனரக உலோகங்களை ஈர்த்துக் கொண்டு அவை நிலம் மற்றும் நீரில் கலந்துவிடாதவாறு பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

ஆனால் சமீபமாக இயற்கை மற்றும் மனிதக் காரணங்களால் நாம் அலையாத்திக் காடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். பிச்சாவரத்தில் மட்டும் 1980-களில் சுமார் 75 சதவீத அலையாத்திக் காடுகள் பரப்பை நாம் இழந்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அலையாத்திக் காடுகள் அழியும்போது, இவ்வளவு காலமாக அதில் சேமிக்கப்பட்டிருக்கும் கனரக உலோகங்கள் நிலத்திலும், நீரிலும் கலக்க ஆரம்பிக்கும். அதனை உண்ணும் சிறு உயிரினங்கள் மூலமாக‌ பறவைகள், மீன்கள், நண்டுகள், கால்நடைகள் போன்ற எண்ணற்ற உயிரினங்களின் உடல்களில் கனரக உலோகங்கள் சேர ஆரம்பிக்கும். அவற்றை உண்பதன் மூலம் மனிதர்களின் உடலிலும் கனரக உலோகங்கள் சேரும். நாளடைவில் அவை சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல விளைவுகளை உண்டாக்கும்.

1980-களில் காவிரி ஆற்றில் இருந்து பிச்சாவரத்துக்கு 75 டி.எம்.சி. நீர் வந்துகொண்டிருந்தது. அதனால் உப்புத்தன்மை சம அளவில் இருந்தது.ஆனால், தற்போது காவிரியில் இருந்து வரும் நீர் வெறும் 3 முதல் 5 டி.எம்.சி.யாக‌க் குறைந்துவிட்டது. இதனால் பிச்சாவரம் பகுதியில் உப்புத்தன்மை அதிகரித்துள் ளது. உப்புத்தன்மை அதிகரிக்க,அதிகரிக்க கனரக உலோகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

மேற்கண்ட கனரக‌ உலோகங்கள் எல்லாம் சிறு அளவில் இருந்தாலும் கூட அவை உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மீன்கள் மற்றும் அனைத்து உயிரினங்களும் பெரிதும் பாதிக்கப்படும்.

அதேபோல அலையாத்திக் காடுகளில் உள்ள தாவரங்களை அந்தப் பகுதியில் இருக்கும் கால்நடைகள், கோழிகள் போன் றவை தீவனமாக‌ உண்ணும். அவற்றில் கனரக உலோகங்கள் சேரும். பின்னர், அவற்றை உண்ணும் மனிதரிலும், கனரக உலோகங்கள் சேரத் தொடங்கும். இவ்வாறு நமது உணவுச் சங்கிலி யால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்.

இதற்கெல்லாம் முக்கியக் காரணம், பிச்சாவரம் பகுதியைச் சுற்றி இருக்கும் நகரங்களில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியாகும் மாசுபாடு தான். அதோடு செயற்கை முறை மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, விவசாயம், அளவுக்கு அதிகமான கால்நடை மேய்ச்சல், நகரியல் வளர்ச்சி மற்றும் இதர பொருளாதார நடவடிக்கைகளால், அலையாத்திக் காடுகள் வேகமாக அழிந்து வருகின்றன.

அதனைத் தடுக்க தற்போது இருக்கும் ஒரே வழி, இன்னும் அதிகளவில் அலையாத்திக் காடுகளை வளர்ப்பது தான்!” என்கிறார் சாண் டில்யன். (கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற் காக டெல்லியில்உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE – 19th Media Fellowship) பெற்றவர்.)

இவரின் ஆராய்ச்சி அறிக்கையை இங்கே படிக்கலாம் (Mangroves as bioshield: An undisputable fact)

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அலையாத்திக் காடுகள் அழிப்பதால் வரும் பிரச்சனைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *