கரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள்

பருவநிலை மாற்றத்தால் கரும்பைத் தின்னும் பூச்சிகள் அதிகமாகத் தென்படுகின்றன. இதனால் மகசூல் பாதிப்பு, சர்க்கரையின் அளவு குறையும் நிலை.  இது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

இப்போது கரும்பில் 2 விதமான தண்டு துளைப்பான் நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இளம் குருத்துப் புழு. மற்றொன்று இடைக்கணு புழு.இந்த நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

மேலும் பரவலாக கரும்பில் வெண்கம்பள அசு உணி பூச்சியும் அதிகம் இருக்கிறது. இது சாறு உறிஞ்சம் பூச்சு. இந்த மூன்றும் இப்போது வயலில் காணப்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கரும்பு நடவு நட்ட 1 மாதத்தில் இருந்து 3 மாதம் வரை இளம் குருத்துப் புழு தாக்கும். கரும்பு நடவு நட்டதிலிருந்து 6 மாதம் வரை இடைக்கணு புழுக்கள் தாக்கும்.
  • இதைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு நட்ட 2 மாதத்துக்குள் கரும்பில் பருக்களை எடுத்துவிட வேண்டும்.
  • கரும்பு நட்ட வரிசையில் 1 ஏக்கருக்கு வேப்பம்புண்ணாக்கு 80 கிலோ முதல் 100 கிலோ வரை இட்டு மண் அணைத்து விட வேண்டும். அப்படி செய்வதால் வேப்பம்புண்ணாக்கில் உள்ள அசாடிரெக்டின் என்ற மூலப் பொருளில் இருந்து ஒரு கசப்பு தன்மை வெளியாவதால் இளம் குருத்துப் புழு தண்டினுள் சென்று தாக்குவது தடுக்கப்படுகிறது.
  • ஒருவேளை சில இளம்குருத்துப் புழுக்கள் தண்டினுள் ஏற்கெனவே சென்று தாக்கல் தொடுத்துக் கொண்டிருந்தால் அதைக் கட்டுப்படுத்த 1 ஏக்கருக்கு 6 கிலோ கார்போபியூரான் 3 சத குருணை மருந்தை கரும்பு நட்ட வரிசையில் இட்டு தண்ணீரில் பாய்ச்ச வேண்டும்.
  • அப்படி செய்வதால் இந்த மருந்தில் இருந்து வெளிவரும் விஷத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக கரும்பின் தண்டு பகுதியில் ஊருடுவும்போது தண்டின் உள்பகுதியில் உள்ள இளம் குருத்துப் புழுக்குள் இறந்துவிடும்.
  • இடைக்கணு புழு இரண்டு கணுக்களுக்கு இடையில் துளையைப் போட்டு கரும்பின் தண்டை சாப்பிடும். இதைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்.
  • அது போன்ற சூழ்நிலையில் கரும்பில் சோலையை முதலில் உரிக்க வேண்டும். டிரைகோகிராமா கைலோனிஸ் என்ற புழு ஒட்டுண்ணி அட்டைகளை 1 ஏக்கருக்கு 6 சிசி என்ற அளவில் கரும்பு நடவு நட்ட 4-வது மாதத்தில் இருந்து ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் 5 முறை பயன்படுத்த வேண்டும்.
  • இப்படி பயன்படுத்தினால் ஒட்டுண்ணியின் மூலம் கரும்பில் உள்ள இடைக்கணு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.
  • ஒட்டுண்ணி அட்டைகள் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் கிடைக்கிறது.  இதன் விலை 1 சிசி ரூ.20 மட்டும்.
  • தாக்குதல் அதிகமாக தென்பட்டால் புரசனோபாஸ் என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை 1 ஏக்கருக்கு 400 மி.லி என்ற அளவில் எடுத்து 200 லிட்டர் நீரில் கரைத்து கரும்பின் தண்டு பகுதி முழுவதும் நனையுமாறும் இடைக்கணுவில் உள்ள துளையில் படுமாறும் தெளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • இதைத் தவிர வயல் வரப்பு ஓரங்களில் உள்ள களையை நீக்க வேண்டும்.
  • வாரத்துக்கு இருமுறை கண்டிப்பாக நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • வெண்கம்பள அசு உணி பூச்சி கரும்பில் சாறு உறிஞ்சும் பூச்சு.இது கரும்பின் சோலையில் இருக்கும். முக்கியமாக வரப்பில் இருந்து முதல் 6 வரிசையில் இருக்கும். உள்ளே அதிகம் இருக்காது.
  • இதைக் கட்டுப்படுத்த முதல் 6 வரிசையில் உள்ள களைகளை மண்வெட்டிக் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி மனிதர்களின் துணியில் ஒட்டுக் கொண்டு மனிதர்கள் மூலமும் பரவும்.
  • தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 ஏக்கருக்கு வேப்ப எண்ணெய் 25 மி.லி. 1 லிட்டர் நீரில் கரைத்து அதிகத் திறன் கொண்ட விசைதெளிப்பானால் சோலையின் அடிப்பகுதி நனையுமாறு தெளிக்க வேண்டும் அல்லது டைமீத்தோஏட் என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் நீரில் 2 மி.மி என்ற அளவிலும் அசிபேட் என்ற ரசாயன கலவையை 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவிலும் இரண்டையும் கலந்து சோலையின் கீழ் பகுதி நனையுமாறு தெளிப்பதால் இந்தப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *