இயற்கை முறையில் பாகல் சாகுபடி!

  • பட்டம் கிடையாது
  • 15 சென்ட் நிலத்தில் 2 ஆயிரம் கிலோ
  • கேரளாவில் நல்ல சந்தை வாய்ப்பு

குறைவான தண்ணீர், குறைவான வேலையாட்கள், குறைவான களையெடுப்பு, கணிசமான வருமானம்… இதனால்தான் விவசாயிகள் பலரும் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, பாகற்காய்க்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருப்பதால், பல விவசாயிகளின் தேர்வு பாகற்காயாக இருக்கிறது. அந்த வகையில், பதினைந்தே சென்ட் நிலப் பரப்பில், வெள்ளைப் பாகற்காயை இயற்கை முறையில் சாகுபடி செய்து கணிசமான லாபம் பார்த்து வருகிறார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ‘இயற்கை விவசாயி’ பாலகிருஷ்ணன்.

சாத்தான்குளத்திலிருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நடுவக்குறிச்சி என்ற கிராமத்தில் உள்ளது, பாலகிருஷ்ணனின் பாகல் தோட்டம். பந்தலில் தொங்கிக் கொண்டிருந்த பாகற்காய்களைப் பறித்து ஓலைப்பெட்டியில் போட்டுக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

கையைக் கடித்த வாழை சாகுபடி!

“எனக்கு இதுதான் சொந்த ஊர். பூர்விகமாவே விவசாய குடும்பம்தான். எங்க குடும்பத்துக்கு பத்து ஏக்கர் இருந்துச்சு. அதுல தென்னை, வாழை சாகுபடி செஞ்சாங்க. அப்போ, ரசாயன உரம்தான் பயன்படுத்துவாங்க. நான், 8-ம் வகுப்பு வரை படிச்சிட்டு, சென்னையில ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குப் போயிட்டேன். பத்து வருஷம் கழிச்சு ஊருக்குத் திரும்பி வந்தப்போ, சொத்து பிரிச்சு எனக்கு ரெண்டு ஏக்கர் கொடுத்தாங்க. இங்க, துணி வியாபாரம், ஃபோட்டோகிராபர் வேலை பார்த்துக்கிட்டே விவசாயத்தையும் ஆரம்பித்தேன். ரசாயன உரம் போட்டு செவ்வாழை சாகுபடியில இறங்கினப்போ, குலை தள்ளுற பருவத்துல தண்ணி பத்தாமபோய் பாதியளவு வாழை பட்டுப் போச்சு. அதோட கொஞ்ச நாள் விவசாயத்தைத் தள்ளி வெச்சிட்டேன்.

கைகொடுத்த பசுமை விகடன்!

எனக்கு பஸ் பிரயாணம்னா புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. 2011-ம் வருஷம் ஒரு நாள் வெளியூர் போறதுக்காக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். அப்போ, புத்தகம் வாங்கலாம்னு கடையில பார்த்தப்போதான், அட்டையில செவ்வாழை படம் போட்டு ஒரு புத்தகம் தொங்குச்சு. உடனே அதை வாங்கிட்டேன். அது, ‘பசுமை விகடன்’ புத்தகம். அதுல, செவ்வாழை குறித்த கட்டுரையில, இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்தி நல்ல மகசூல் எடுத்ததை எழுதியிருந்தாங்க. அதுல இருந்து  பசுமைவிகடனைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சிட்டேன்.

அது மூலமா இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு திரும்பவும் விவசாயத்துல இறங்கினேன். கால் ஏக்கர் நிலத்துல சாணம், குப்பை மட்டும் அடியுரமாப் போட்டு ‘டெல்லி கனகாம்பரம்’ போட்டேன். நல்ல மகசூல் கிடைச்சுது. பூக்களும் நல்லா இருந்துச்சு. ஆனா, பறிப்புக்கு ஆள் கிடைக்கலை. அதனால கனகாம்பரத்தையும் விட்டுட்டு, கால் ஏக்கர் நிலத்துல செடிமுருங்கை, அரை ஏக்கர் நிலத்துல எலுமிச்சையும் நடவு செஞ்சேன். செடிமுருங்கையில நல்ல மகசூல் கிடைச்சுது” என்று முன்கதை சொன்ன பாலகிருஷ்ணன் தொடர்ந்தார்.

குறுக்குப்பந்தல் முறையில் பாகல்!

“எலுமிச்சை இப்போ பறிப்புல இருக்கு. 15 சென்ட் நிலத்துல பந்தல் போட்டு வெள்ளைப் பாகல் போட்டிருக்கேன். அதுவும் பறிப்பில் இருக்கு. எலுமிச்சையில காய்ப்பு சுமார்தான். இப்போ, 30 சென்ட் நிலத்துல வெண்டை விதை ஊன்றியிருக்கேன். மீதி இருக்கிற 80 சென்ட் நிலம் உழுது தயாரா இருக்கு. இது மணல் கலந்த செம்மண். பார்க்கிறதுக்கு சலித்த மணல் மாதிரி உதிரியா இருக்கும். அதனால பாகல் நல்லாவே வருது. இந்த வெள்ளைப் பாகல் விதை, நண்பர் மூலமா கிடைச்சுது. நல்லா வளர்ந்த செடியில யிருந்து, விதையை சேமிச்சு, திரும்பவும் விதைக்கலாம்னு அந்த நண்பர் சொன்னாரு. நான், வழக்கமான முறையில மேற்புறமா பந்தல் அமைக்காம… குறுக்குப் பந்தல் (பக்கவாட்டுப் பந்தல்) போட்டிருக்கேன். அதனால கொடிகள் பக்கவாட்டுலதான் படரும். அதனால, செடிகளுக்கு வெயில் நல்லா கிடைக்கும். காற்றோட்டமும் இருக்கும். போன கார்த்திகை மாதம் விதைத்தது, முழுக்க இயற்கை முறையில சாகுபடி செய்றதால எந்த பாதிப்பும் இல்லாம நல்ல மகசூல் கிடைச்சிக்கிட்டு இருக்கு” என்ற பாலகிருஷ்ணன், வருமானம் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

100 பறிப்புகள்!

“நடவு செய்த 50-ம் நாள்ல இருந்து, 150-ம் நாள் வரை  தினமும் காய் பறிக்கலாம். மொத்தம் 100 பறிப்புகள். ஆனால், நான் குறைந்த அளவு பரப்பளவுல போட்டிருக்கிறதால ரெண்டு நாளைக்கு ஒரு முறைதான் பறிக்கிறேன். இதுக்குனு ஆட்களை விடுறதில்லை, நானே பறிச்சிடுவேன். இதுவரை (10.02.16-ம் தேதி வரை) 18 பறிப்புகள் முடிஞ்சிருக்கு. இதுவரை 430 கிலோ கிடைச்சிருக்கு. ஒரு கிலோ பாகல்,

35 ரூபாய்ல இருந்து  50 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கேன். இதுவரை 18 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைச்சிருக்கு. சொட்டு நீர், பந்தல் செலவு இல்லாம… நடவு, இடுபொருள், களைஎடுப்புனு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியிருக்கு. இனிமே பெரிசா செலவிருக்காது. அடுத்தடுத்து இன்னும் மகசூல் கூடும். மாசி மாதத்துக்குப் பிறகு விலையும் அதிகரிக்க ஆரம்பிக்கும். சில சமயங்கள்ல அதிகபட்சமா கிலோவுக்கு 70 ரூபாய் வரை விலை கிடைக்கும்.

இன்னும் 32 பறிப்புகள் பறிக்கலாம். சராசரியா ஒரு பறிப்புக்கு 50 கிலோனு வெச்சுக்கிட்டா… இன்னும் 1,600 கிலோ காய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். சராசரியா கிலோவுக்கு 40 ரூபாய்னு விலை கிடைச்சாலே… 64  ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். மொத்தமா பார்த்தா 15 சென்ட் நிலத்துல 150 நாள்ல 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும்” என்ற பாலகிருஷ்ணன் நிறைவாக,

“இப்போ,  காவல்கிணறு மார்கெட்டுக்குத் தான் காய் அனுப்பிக்கிட்டு இருக்கேன். கேரளாவில் இதுக்கு நல்ல தேவை இருக்குனு தெரிஞ்சதால அங்க கடை வெச்சிருக்கிற என்னோட உறவினருக்கும் காய் அனுப்பிக்கிட்டிருக்கேன். அவர் அதிகமா கேட்டிருக்குறதால, அடுத்ததா ஒரு ஏக்கர் அளவுல வெள்ளைப் பாகல் போடலாம்னு இருக்கேன்” என்று நம்பிக்கை மிளிரச் சொன்னவர், பறித்த பாகலை ஓலைப் பெட்டியிலிருந்து மூட்டைக்கு மாற்றும் பணியில் முனைப்பானார்.
பாலகிருஷ்ணன், தான் பாகல் சாகுபடி செய்த முறை குறித்து சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
செம்மண்ணில் அதிக மகசூல்!

வெள்ளைப் பாகலுக்குனு தனிப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். இது, அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும் என்றாலும்… செம்மண்ணில் அதிக மகசூல் கொடுக்கும்.
15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து… ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல் மண் கொண்டு குழியை மூடி… ஒவ்வொரு குழியிலும் ஒரு சாண் இடைவெளியில் மூன்று விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 சென்ட் நிலத்துக்கு 100 கிராம் விதை தேவைப்படும்.

ஒவ்வொரு வரிசையிலும் 10 அடி உயரமுள்ள மூன்று முருங்கைக்கம்புகளை 4 அடி இடைவெளியில் நட்டு வைக்க வேண்டும். அக்கம்புகளை ‘கம்பிவேலி அமைப்பது போல’ கயிறுகளால் இணைத்துப் பின்னி விட வேண்டும். விதை ஊன்றிய 6-ம் நாளுக்கு மேல் முளைப்பு எடுக்க வேண்டும். 15-ம் நாளில் ஒர் அடி உயரம் வரை வந்து விடும். 15 நாள் மற்றும் 30-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளுக்கு மேல் கொடிகளை கயிற்றில் படர விட வேண்டும். 30-ம் நாளுக்கு மேல் மொட்டு விட்டு  40-ம் நாளுக்குள் பூக்கத் தொடங்கும். 45-ம் நாளுக்கு மேல் ஒன்றிரண்டு காய்கள் வர ஆரம்பித்துவிடும்.

ஊட்டத்துக்கு பிண்ணாக்குக் கரைசல்!
“50 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் டிரம் எடுத்துக் கொண்டு அதில்… வேப்பம் பிண்ணாக்கு-2 கிலோ, கடலைப் பிண்ணாக்கு -1 கிலோ, எள்ளுப் பிண்ணாக்கு -2 கிலோ, பசுஞ்சாணம்-5 கிலோ ஆகியவற்றைப் போட்டு கலந்துகொள்ள வேண்டும். அதனுடன், பசும்பால்-2 லிட்டர், பசுமாட்டுச்சிறுநீர்-5 லிட்டர் ஆகியவற்றை ஊற்றிக் கலக்கி டிரம் நிரம்பும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும். இக்கரைசலை தினமும் காலையிலும் மாலையிலும் நான்கு நாட்கள் வரை நன்கு கலக்கி வர வேண்டும். பிறகு, இதை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயிரில் தெளித்தால் பயிர் நன்கு ஊட்டமாக வளரும்.

இக்கரைசலைத்தான் பாகலுக்கு வாரம் இருமுறை தெளித்து வருகிறார் பாலகிருஷ்ணன். வடிகட்டிய பிறகு எஞ்சும் வண்டலையும் செடிகளின் தூரில் போட்டு வருகிறாரம்.

‘வருமுன் காப்போம்!’

இயற்கை விவசாயத்தில் பூச்சிகளுக்கு, ‘வருமுன் காப்போம்’ முறைதான் சிறந்தது. விதைத்த 25-ம் நாளில் இருந்து பறிப்பு முடியும் வரை வாரம் ஒரு முறை இஞ்சி-பூண்டுக் கரைசல் தெளித்து வந்தால்தான்  பூச்சித்தாக்குதலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்’ என்பது பாலகிருஷ்ணனின் அனுபவ பாடம்

இஞ்சி-பூண்டுக் கரைசல்!

இஞ்சி-250 கிராம், பூண்டு-250 கிராம், மிளகாய்-250 கிராம் ஆகியவற்றை உரலில் இடித்து, 2 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார். இதை, 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்

தொடர்புக்கு,
பாலகிருஷ்ணன்,
செல்போன்: 09442553279 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *