குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு

தைப்பட்டத்துக்கான காய்கறி நாற்றுக்களை வழக்கமான முறையில் உற்பத்தி செய்யும்போது பருவநிலை காரணமாக சேதாரமடைய வாய்ப்புள்ளது.

இதற்கு மாற்றாக விவசாயிகள் பாதுகாக்கப்பட்ட நிழல்வலை கூடாரங்களிலோ அல்லது சூரிய வெளிச்சத்துடன் கூடிய சிறிய நிழல் கொட்டகைகள் அமைத்தோ அவைகளில் குழித்தட்டு முறையில் நாற்றுக்களை பராமரித்து பருவநிலை காரணமாக நாற்றுக்களுக்கு ஏற்படும் சேதாரத்தை தவிர்த்து வாளிப்பான காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து பயன் பெறலாம்.

நாற்றங்கால்களை குழித்தட்டு முறையில் பராமரிப்பது எப்படி

  • குழித்தட்டுகளை தென்னை நார்க்கழிவு அல்லது மண்புழு உரம், மணல் மூலம் தயார் செய்த கலவை கொண்டு நிரப்ப வேண்டும்.
  • தென்னை நார்க்கழிவு குழி நிரப்பு பொருள் நிரப்பிய 10 தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • பின்னர் ஒவ்வொரு குழியிலும் 0.5 செ.மீ. ஆழத்துக்கு சுண்டு விரல் மூலம் குழி ஏற்படுத்தி தட்டுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் ஒரு விதை வீதம் விதைப்பு செய்து செடி வளர்பொருள் (தென்னை நார்க்கழிவு) கொண்டு மூட வேண்டும்.
  • தென்னை நார்க்கழிவினை 300, 400 சதவீத ஈரப்பத நிலையில் உபயோகிக்கும்போது தட்டுக்களுக்கு விதைப்புக்கு முன்பாகவும், பின்னரும் நீர்பாய்ச்ச தேவையில்லை.
  • விதைப்பு செய்த தட்டுகளை 10 தட்டுகள் கொண்ட அடுக்குகளாக ஒன்றன் மீது ஒன்றாக பயிறுக்கேற்றவாறு 3 முதல் 6 நாள்களுக்கு அடுக்கி வைத்து அவற்றின் மேல் பாலித்தீன் தாள் கொண்டு காற்றோட்டமாக மூட வேண்டும்.
  • இது தட்டுகளில் உள்ள ஈரப்பதத்தை விதைகள் முளைக்கும் வரை நிலை நிறுத்துகிறது.
  • விதைகள் முளைத்தவுடன் செடிகள் வளைந்து போவதைத் தவிர்க்க முளைப்பு கண்டுள்ள தட்டுகளை நிழல் வலைக் கூடாரங்களுக்கு மாற்றி சிறு வலைக் கூடாரங்களில் பாலித்தீன் தாள் மூடாக்கு அமைத்து பராமரிக்க வேண்டும்.
  • தினமும் தட்டுகளில் உள்ள ஈரப்பத நிலைக்கு ஏற்றவாறு பூவாளி மூலம் தட்டுகளுக்கு நீர்ப்பாசனம் செய்து பராமரிக்கவும், பயிர்சத்துகள் கரைந்து வீணாவதை தவிர்க்க அதிக நீர்ப்பாசனத்தை தவிர்க்கவும்.
  • முளைப்பு கண்டுள்ள தட்டுகளுக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 0.2 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதம் மருந்து கொண்டு பயிர் பாதுகாப்பு செய்து நாற்றுகள் மடிவதை தவிர்க்கவும்.
  • நாற்றுகள் வெளுப்பாக தென்பட்டால் 19:19:19 நீரில் கரையும் உரத்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் (சிறிய டீ ஸ்பூன் அளவு) என்ற அளவில் கலந்து நாற்றுவிட்ட 12 மற்றும் 20-ம் நாள்களில் நாற்றுகளின் மேல் தெளிப்பு செய்து வாளிப்பான நாற்றுக்களாக பராமரிக்கலாம்.
  • நாற்றுக்களை மழையிலிருந்து பாதுகாக்க, சிறுவலைக் கூடாரங்களை அமைத்து அவைகளின் மேல் பாலித்தீன் மூடாக்கு அமைத்து பராமரிக்கலாம்.
  • நடவுக்கு முன்பாக நிழல் மற்றும் நீர்ப்பாசன அளவை குறைத்து நாற்றுக்களை நடவுக்கு தயார் செய்ய வேண்டும்.
  • விதைகள் முளைத்த 7, 10 நாள்களில் இமிடாகுளோபிரிட் மருந்து லிட்டருக்கு 0.2 மி.லி. வீதம் நீரில் கலந்து தெளிக்கவும்.
  • பின்னர் நடவுக்கு முன்பாக மீண்டும் ஒருமுறை தெளித்தும் பூச்சிக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளலாம்.

இந்த முறையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முனைவர் க. வீராசாமி கூறினார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “குழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *