கை கொடுக்கும் கருணை கிழங்கு

ஒரே தண்ணீர், ஒரே பராமரிப்பில் வெங்காயம், கருணை கிழங்கு என இரண்டு பயிர்களுடன் இரட்டை லாபமும் ஈட்ட வழிகாட்டும் விவசாயி காந்தி கூறுகிறார் :

  • தஞ்சாவூர் அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவன் நான். விதைப்பதற்கு முன் வயலை நன்கு தயார் செய்ய வேண்டும். பின் புழுதி அடித்து சமப்படுத்தி, பாத்திகள் பிரித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பிரித்த பின், முதலில் கருணைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும்.
  • கருணைக்கிழங்கை பொறுத்தவரை, நல்ல விதை கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும்; பூச்சித் தாக்குதலும் குறைவாக இருக்கும்.
  • அதைப் போலவே, பார் பிரித்து, வெங்காயத்தை ஊடு பயிராக நடவு செய்ய வேண்டும். வெங்காயம் 60 நாள் பயிர். இது குறைந்த நாட்களில் நிறைந்த லாபம் தரக்கூடியது.
  • வெங்காயத்தை பொறுத்தவரை, வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. அவ்வாறு தண்ணீர் தேங்கி நிற்கும் பட்சத்தில், வெங்காயம் அழுகி விடும். வெங்காயம் வயலில் இருக்கும் நேரத்தில், கருணைக் கிழங்குக்கு என, தனியாக பராமரிப்பு செய்ய தேவையில்லை.
  • வெங்காயத்திற்கு விடும் தண்ணீர் மற்றும் இடு பொருள்களை கொண்டே கருணைக் கிழங்கு நன்றாக வளர்ந்து விடும்.
  • வெங்காயத்தை அறுவடை செய்த பின், கருணைக் கிழங்கு மட்டும் வயலில் இருக்கும். அப்போது கருணைக் கிழங்குக்கு ஒரு களை கொத்தி விட வேண்டும். அப்போது இருக்கும் பயிர்களின் ஊக்கத்திற்கு ஏற்ப, ஏதேனும் இடுபொருள் இடலாம்.
  • கருணைக் கிழங்குக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. தண்ணீர் அதிகம் தேவையில்லாத பயிர்.
  • அதேபோல வெங்காயத்திற்கும், அதிக தண்ணீர் தேவையில்லை. ஒரே நேரத்தில் ஒரே தண்ணீரை பயன்படுத்தி, இரண்டு பயிர் செய்வதால் இரட்டை லாபம் ஈட்ட முடியும்.
  • வெங்காயம், 60 நாளில் அறுவடைக்கு வரும். அப்போது நாம், 5 டன் வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.
  • அதன்பின் ஆறு மாதம் கழித்து, கருணைக் கிழங்கை அறுவடை செய்யும் போது, 12 டன் வரை கருணைக் கிழங்கு கிடைக்கும்.
  • கருணைக் கிழங்குக்கு இப்போது நல்ல சந்தை இருக்கிறது. அதனால் விற்பனை குறித்த பயம் இல்லை. அதேபோல தண்ணீர் பிரச்னை, பூச்சி தாக்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் கூட, எப்படியாவது தாக்குப்பிடித்து கை கொடுப்பதில் கருணை, விவசாயிக்கு நல்ல நண்பன்.
  • கருணை மூலமாக மட்டும், ஏக்கருக்கு ஒரு பருவத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். வெங்காயம் மூலமும் லாபம் ஈட்டலாம். கருணை, விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்புக்கு: 9976108280

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *