சமவெளியிலும் முட்டைக்கோஸ் சாகுபடி

இலை வகை காய்கறி பயிர்களில் மிகக் குறைந்த நாளாக நடவு செய்த 75 -வது நாளிலேயே அறுவடைக்கு வரும் முட்டைக்கோஸை மலைப்பகுதிகளில் மட்டுமல்லாது சமவெளியிலும் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

ரகங்கள்:

மலைப்பகுதிகளுக்கு பூசா டிரம்கெட், பிரைட் ஆப் இந்தியா, ஏர்லி வொண்டர், செப்டம்பர் எக்லிப்ஸ் ஆகிய ரகங்களை தேர்வு செய்வது சிறந்தது. சமவெளிப் பகுதிகளுக்கு கோல்டன் ஏக்கர், லார்ஸ் சாலிட், லேட் டிரம்ஹெட், எரிலி ஆட்டம் ஜெயின் மற்றும் மகாராணி ஆகிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: பொதுவாக முட்டைக்கோஸை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளரும்.

மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை உள்ள நிலங்கள் ஏற்றவை. இப்பயிரைப் பயிரிட குளிர்ச்சியான பனிமூட்டம் தேவை. பொதுவாக எல்லா மலைப்பகுதிகளிலும் பயிரிடலாம். சமவெளிப்பகுதியில் குளிர் காலங்களில் பயிர் செய்யலாம்.

விதைக்கும் பருவம்:

சமவெளிப்பகுதியில் முன் பருவப் பயிராக ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் விதைக்கலாம். மத்திய கால பயிராக செப்டம்பரில் விதைக்கலாம். சிறந்த பொறுக்கு விதைகளைத் தேர்ந்தெடுத்து பருவம் பார்த்து நடவேண்டும். முன்பருவ வகைகள் முன் பருவத்திலும், பின்பருவ வகைகளை பின்பருவத்திலும் நடவேண்டும். இரகங்களை பருவம் மாற்றி பயிரிடக்கூடாது.

விதையளவு:

ஹெக்டேருக்கு 650 கிராம் விதை போதுமானது.

நாற்றாங்கால் தயாரிப்பு:

முட்டைக்கோஸ் விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் பயிர், நாற்றுக்கள் தயாரிக்க நல்ல வடிகால் வசதியுள்ள கட்டிகள் அற்ற பொல பொல வென்றிருக்கும் மண் தேவை. ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் அளவில் நாற்றாங்கால் தயாரிக்கவேண்டும்.

நாற்றாங்காலில் மக்கிய தொழு உரம் 300 கிலோ, 10 கிலோ ஐந்தாம் எண் கொண்ட கலப்பு உரம் இட்டு 10 முதல் 15 செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து, அவற்றில் 15 முதல் 20 செ.மீ ஆழத்தில் வரிசையாக விதைகக்க வேண்டும். பின்னர், தொழு உரம் கலந்த கலவையால் மூடவேண்டும். பின்பு பூவாளியின் உதவியால் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்:

நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது பண்டுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் தோண்டம் கருவியால் நிலத்தைக் கிளறி 40-க்கு 40 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். மத்தியப் பட்டப்பயிருக்கு 60-க்கு 45 செ.மீ இடைவெளி கொடுக்கவேண்டும். சமவெளிப் பகுதிகளுக்கு 45-க்கு 30 செ.மீ. இடைவெளி போதுமானது.

நடவு:

30 முதல் 40 நாள் ஆன நாற்றுகளை நடவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். நாற்றுகளைப் பறிப்பதற்கு 6 நாள் முன்பு நாற்றாங்காலுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிடுவதன் மூலம் நாற்றுக்களைக் கடினப்படுத்தலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாற்றுக்கள் நடவு செய்யப்படும் போது நன்கு உயிர் பிடித்து வளரும்.

முட்டைக்கோசை நாற்றுகள் விட்டு நடவு செய்யும் முறைக்கு பதில் நேரடி விதைப்பும் செய்யலாம். நன்கு தயார் செய்யப்பட்ட நிலத்தில் 60-க்கு 30 செ.மீ இடைவெளியில் குத்து ஒன்றுக்கு 2 விதைகள் வீதம் விதைக்கவேண்டும். செடிகள் சுமார் 8 முதல் 10 செ.மீ. உயரம் வளர்ந்தவுடன் குத்துக்கு ஒரு செடி விட்டு மற்றவற்றை பயிரைக்காட்டிலும் 20 நாள் முன்னதாக அறுத்துவிட வேண்டும்.

உரமிடுதல்:

சமவெளிப்பகுதிகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் அளிக்கப்படும் பரிந்துரைப்படி உரங்களை பார்த்து இட வேண்டியது அவசியம்.

நீர் நிர்வாகம்:

முட்டைக்கோசிற்கு தொடர்ச்சியாக நீர் வேண்டும். ஆனால் நீர் தேங்கக்கூடாது. நடவு செய்யும் முன்னர் நீர் பாய்ச்சவேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர், பின்பு 10 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். கோஸ் தலைகள் உருவாகி முதிர்ச்சியடையும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதை தற்காலிகமாக நிறுத்திவிடவேண்டும். இவ்வாறு செய்வதால் கோசில் வெடிப்பு ஏற்படுவதைத்த தவிர்க்கலாம். மேலும், வறட்சியான காலநிலைக்கும் பின்னால் மிகுதியான நீர் பாய்ச்சினாலும் தலைப்பாகம் வெடிக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி:

நடவுக்கு முன்னர் ட்ரைபுளுராலின் அல்லது பேசலின் போன்ற களைக்கொல்லியை தெளிப்பதன் மூலம் நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம். பயிருக்கு இரண்டிலிருந்து மூன்று முறை கொத்து கொண்டு களை நீக்கம் செய்யவேண்டும்.

வேருக்கு சேதம் ஏற்படாதவாறு மண்ணை மேலாகக் கொத்திவிட வேண்டும். நடவு செய்த 6 வாரங்கள் கழித்து செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

அசுவினிப் பூச்சிகள்:

இவற்றைக் கட்டுப்படுத்த 2 சதவீதம் வேப்பம் எண்ணெய் அல்லது டைமெத்தோயேட் 2 மில்லி மருந்துடன் 0.5 மில்லி டீப்பாலுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும். ஒட்டும் மஞ்சள் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.

வேர்ப்புழு:

இதனைக் கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, மாவை வேளைகளில் செடியின் அருகில் ஊற்றவேண்டும்.

வைரமுதுகு அந்துப்பூச்சி:

இந்தப் பூச்சி முட்டைக்கோசை தாக்கும் முக்கிய பூச்சியாகும். இந்த அந்துப்பூச்சியின் புழுக்கள் முட்டைக்கோசின் இளம் இலைகளையும் நடுக்குரத்தையும் தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.

வேர் வீங்கல் நோய்:

நோயைத் தடுக்க நாற்றுக்களை நடுவதற்கு முன் 2 கிராம் கார்பென்டாசிம் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் முக்கி நடவேண்டும். செடிகளைச் சுற்றி மேற்கண்ட கலவையை ஊற்றவேண்டும். பயிர் சுழற்சி முறைகளைக் கடைப்பிடிக்கவும்.

கருப்பு அழுகல் நோய்:

இந்நோய் வேர் மற்றும் தண்டுப் பகுதியைத் தாக்குவதால் செடிகள் அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த விதைகளை 100 பிபிஎம் ஸ்ரிடிப்டோமைசின் 30 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்கவேண்டும்.

அறுவடை:

முட்டைக்கோசு நட்ட 75ஆவது நாளில் இருந்து அறுவடைக்கு வரும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுட்ன கூடிய முட்டைக்கோசை அறுவடை செய்யவேண்டும். 120 நாட்களில் சுமார் எட்டு முறை வளர்ச்சியடைந்து முட்டைக்கோசுகளைப் பறிக்கலாம். முட்டைக்கோசு நன்றாக வளர்ச்சி பெற்று முற்றாமல் இருக்கும் தருவாயில் அறுவடை செய்யவேண்டும்.

மகசூல்:

மலைப்பகுதியில் ஹெக்டேருக்கு 150 நாளில் 50 முதல் 60 டன்களும், சமவெளிப்பகுதியில் ஹெக்டேருக்கு 120 நாளில் 25 முதல் 35 டன்களும் மகசூல் கிடைக்கும்.
நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *