பலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்!

இயற்கை விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டத்தையே பரிசோதனைக்கூடமாக மாற்றி ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சென்னகேசவன். ஆடு, மாடு வளர்ப்பில் தனி யுக்தியைக் கடைப்பிடித்து வெற்றி நடை போடும் சென்னகேசவன், மலைப்பயிரான பீட்ரூட்டைச் சமவெளிப்பகுதியில் முருங்கைத் தோட்டத்தில் ஊடுபயிராகச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்திருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ளது, சென்னகேசவனின் தோட்டம். பீட்ரூட் அறுவடைப்பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த சென்னகேசவனைச் சந்தித்தோம்.

நம்மைச் சந்தோஷமாக வரவேற்றுப் பேசிய சென்னகேசவன். “இது மொத்தம் 23 ஏக்கர் கரிசல் மண் தோட்டம். 5 ஏக்கர் நிலத்துல செடி முருங்கை இருக்கு. 4 ஏக்கர் நிலத்துல வேம்பு, தீக்குச்சி, குமிழ்னு மரப்பயிர்கள் இருக்கு. 2 ஏக்கர் நிலத்துல சீனி அவரை இருக்கு. ஒண்ணே முக்கால் ஏக்கர் நிலத்துல வேலிமசால் இருக்கு. 9 ஏக்கர் நிலத்துல மக்காச்சோளம் போட்டு அறுவடை முடிஞ்சுடுச்சு. மீதி நிலத்தை விதைப்புக்காக ஓட்டி வெச்சிருக்கேன். செடிமுருங்கை இருக்கிற 5 ஏக்கர் நிலத்துல பீர்க்கன், பாகல், கத்திரி, தக்காளி, வெள்ளைப்பூசணி, நிலக்கடலை, கொத்தமல்லினு நிறையப் பயிர்களை ஊடுபயிராச் சாகுபடி செஞ்சுருக்கேன். அதுல ஒரு முயற்சியாத்தான் பீட்ரூட்டையும் சாகுபடி செஞ்சு பார்த்தேன்.

இதுக்குப் பெரிசா செலவில்லை. தனியாகப் பராமரிப்பு செய்ய வேண்டியதில்லை. நோய்த்தாக்குதலும் இல்லாம நல்லா விளைஞ்சு வந்தது. சந்தையில நல்ல விற்பனை வாய்ப்பும் இருக்கு. அதனால, நாலு வருஷமா தொடர்ந்து பீட்ரூட் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். போன போகத்துல ஒண்ணேகால் ஏக்கர் நிலத்துல ஊடுபயிரா பீட்ரூட் போட்டிருந்தேன். அதுதான் இப்போ அறுவடையாகிட்டுருக்கு” என்ற சென்னகேசவன் தொடர்ந்தார்…

“இதுவரைக்கும் உள்ளூர்ல விற்பனையானது போக மீதியைக் கோவில்பட்டி, எட்டயபுரம் மார்க்கெட்கள்ல கொண்டு போய் விற்பனை செஞ்சுட்டுருந்தேன். அங்கே இயற்கை பீட்ரூட்டுங்கிறதுக்காகத் தனி விலையெல்லாம் கிடைக்கலை. சமீபத்துல கோவில்பட்டியில் ‘தென்னக மானாவாரி உற்பத்தியாளர் சங்கம்’ சார்பா, கோவில்பட்டி உழவர் சந்தையில் இயற்கைக் காய்கறிகள் விற்பனைக்காகக் கடைகள் ஆரம்பிச்சுருக்கோம். அடுத்த போகத்துல இருந்து அங்கதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல மொத்த அறுவடையும் முடிஞ்சுடும். முடிஞ்சதும் வருமானக்கணக்கு பத்தி சொல்றேன்” என்று சொல்லி விடைகொடுத்தார், சென்னகேசவன்.

சில நாள்கள் கழித்து நம்மை அழைத்துப் பேசிய சென்னகேசவன், “ஒண்ணேகால் ஏக்கர் பரப்புல, 8,424 கிலோ பீட்ரூட் மகசூலாகியிருக்கு. ஒரு கிலோவுக்கு 6 ரூபாயில் இருந்து 14 ரூபாய் வரை விலை கிடைச்சது. மொத்தம் 8,424 கிலோ விற்பனை மூலம் 87,644 ரூபாய் வருமானம் கிடைச்சுருக்கு. உழவு முதல் அறுவடை வரை மொத்தமா 18,650 ரூபாய்ச் செலவாகியிருக்கு. அதுபோக, 68,994 ரூபாய் லாபமாகக் கிடைச்சிருக்கு” என்றார்.

நுனி கிள்ளிவிட வேண்டும் 

“பீட்ரூட் அறுவடை முடியும் வரை முருங்கைக்குத் தனிப் பராமரிப்பு தேவையில்லை. முருங்கையை விதைத்த 50-ம் நாளில் இரண்டரை அடி உயரம் வரை வளர்ந்துவிடும். அந்த நேரத்தில் நுனியைக் கிள்ளி விட வேண்டும். இதனால், பக்க கிளைகள் அதிகமாகும். பீட்ரூட் அறுவடை முடிந்த பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா மற்றும் மீன் அமினோஅமிலம் ஆகியவற்றைச் சுழற்சி முறையில் மாற்றி மாற்றித் தெளித்து வர வேண்டும். முருங்கையில் 128-ம் நாளுக்குமேல் காய்களைப் பறிக்கலாம். நன்றாகப் பராமரித்தால், 5 ஆண்டுகள் வரை காய்கள் கிடைக்கும்” என்கிறார் சென்னகேசவன்.

பீட்ரூட் வற்றல்

“கிழங்குகள் அரைக் கிலோ அளவுக்கு மேல பெருத்துட்டா சந்தையில் விலை கிடைக்காது. அந்த மாதிரி பீட்ரூட்களைச் சிப்ஸ் மாதிரி வெட்டி, வெயில்ல 2 நாள் காய வெச்சு எடுத்து ஈரம், காத்துப் படாம சேகரித்து வெச்சுக்கலாம். இந்த வத்தலைத் தண்ணில போட்டுக் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொதிக்க வெச்சா பச்சை பீட்ரூட் மாதிரியாயிடும். அதை வழக்கம்போலச் சமைச்சுக்கலாம். பெரிய காய்களை இப்படி வத்தலாக்கி எங்க வீட்டுத்தேவைக்கு வெச்சுக்குறோம்” என்கிறார் சென்னகேசவன்.

செறிவூட்டப்பட்ட ஆட்டுஎரு

நீளமான பிளாஸ்டிக் தாளை விரித்து அதில் ஒரு டன் ஆட்டுஎருவைப் பரப்பி அதனுடன் தலா 2 கிலோ அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் மொபிலைஷிங் பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் தெளித்துப் பிட்டுப் பதத்தில் பிசைந்து 48 மணி நேரம் வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட ஆட்டுஎரு தயார்.

விதை நேர்த்தி 

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் 50 மில்லி பஞ்சகவ்யாவைக் கலக்க வேண்டும். அக்கரைசலில் 900 கிராம் (1 ஏக்கர் 25 சென்ட் விதைப்புக்கு) முருங்கை விதையைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதை எடுத்து நிழலில் 15 நிமிடங்கள் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும். 1 ஏக்கர் 25 சென்ட் பரப்பில் ஊடுபயிராக விதைக்க 1,400 கிராம் பீட்ரூட் விதை தேவைப்படும். முருங்கை விதைக்கு மேற்கொண்டது போலவே பீட்ரூட் விதையையும் விதைநேர்த்தி செய்யலாம்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்

1 ஏக்கர் 25 சென்ட் பரப்பில் முருங்கையில் ஊடுபயிராகப் பீட்ரூட் சாகுபடி செய்யும் முறை குறித்துச் சென்னகேசவன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…

முருங்கை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றுக்குப் புரட்டாசிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த 1 ஏக்கர் 25 சென்ட் நிலத்தில் டில்லர் கொண்டு இரண்டு முறை உழவு செய்து, ஒரு வாரம் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு டிராக்டர் மூலம் நிலத்தை மட்டப்படுத்தி வரப்புக்கலப்பை கொண்டு வரப்பு அமைத்து… 8 அடி அகலம், 10 அடி நீளத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்காலில் ஒருபுறம் மட்டும் பாத்திக்கு உட்புறமாகச் செடிக்குச் செடி 5 அடி, வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி இருக்குமாறு ஒன்றரை அங்குலம் ஆழத்தில் குழி பறித்து… குழிக்கு ஒரு முருங்கை விதை வீதம் விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மறுநாள், பாத்திகளுக்குள் அரையடி இடைவெளியில் குழிக்கு ஒரு பீட்ரூட் விதை வீதம் விதைக்க வேண்டும். முருங்கை, பீட்ரூட் விதைகளை விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தைச் சில பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பீட்ரூட் விதைகளை நடவுசெய்தால், ஒரே சமயத்தில் அறுவடைக்கு வருவதைத் தவிர்க்க முடியும்.

விதைத்த 3-ம் நாள் ஒரு டன் செறிவூட்டப்பட்ட ஆட்டுஎருவைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். பீட்ரூட் 5-ம் நாளுக்குமேல் முளைத்துவரும். முருங்கை 9-ம் நாளுக்கு மேல் முளைத்துவரும். 25-ம் நாளுக்குமேல் களை எடுக்க வேண்டும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். 35-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இது பீட்ரூட் கிழங்கைப் பருமனாக்குவதோடு சுவையையும் அதிகரிக்கும். 48-ம் நாளுக்குமேல் கிழங்குகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். 60-ம் நாளுக்குமேல் அறுவடையைத் துவங்கலாம்.

விற்பனையைப் பொறுத்துத் தினசரியோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பீட்ரூட்களில் மூன்று அங்குலம் வரை இலைத் தண்டுகள் இருக்குமாறு விட்டு வைத்தால் 6 நாள்கள் வரை வாடாமல் இருக்கும்.

தொடர்புக்கு, சென்னகேசவன், செல்போன்: 9842348915

நன்றி: பசுமை விகடன்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்!

  1. சுப்ரமணி.அ says:

    பீட்ருட் விதைகள் எங்கு கிடைக்கும்
    என்ற தகவல் வேண்டும் நான் கிருஷ்ணகிரி மவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *