வறட்சியை சமாளிக்க விவசாயிகள் புது யுக்தி : நிழல் போர்வை சாகுபடி

பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டி பகுதியில், வறட்சியை சமாளிக்க, நிழல் போர்வை அமைத்து, சொட்டு நீர் பாசனம் மூலம் மிளகாய், தர்பூசணி போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
சேலம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், பூக்கள்,காய்கறி, நெல், வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்ததால், விவசாயம் செய்ய தேவையான தண்ணீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி பகுதி விவசாயிகள், வறட்சியை சமாளிக்க, நிழல் போர்வை அமைத்து, சொட்டு நீர் பாசனத்தில் பயிர் நடவு செய்து, கூடுதல் லாபம் பெறும் யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

 

  • வயலில் பயிருக்கு ஏற்ற வகையில் பாத்திகள் அமைத்து, பிளாஸ்டிக் விரிப்பு மூலம் பாத்தியை மூடி விடுகின்றனர்.
  • பிளாஸ்டிக் கவர் மேற்பகுதியில் தேவையான இடத்தில், ஓட்டை போட்டு, அதன் வழியாக மண்ணில் விதை, செடிகளை நடவு செய்கின்றனர்.
  • பயிரின் வேர் பகுதிக்கு மட்டுமே, சொட்டுநீர் பாசனம் மூலம் மிக குறைந்த தண்ணீர் விடப்படுகிறது.
  • பிளாஸ்டிக் கவரின் மேற்பகுதியில் வளரும் செடிக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்கிறது.
  • அதே சமயம், வேர் பகுதியில் தண்ணீரின் ஈரதன்மை பல நாட்களுக்கு நீடிக்கிறது. அதனால், செடி ஊக்கமாக வேகமாக வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கிறது.
  • கம்மாளப்பட்டி கிராமத்தில், குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நிழல் போர்வை அமைத்து, பத்து ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய், தர்பூசணி, முலாம் பழம், சம்பங்கி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

கம்மாளப்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது:

  • கடும் வறட்சியால், கிணற்றில் தண்ணீர் வற்றி வருகிறது. விதை, செடி நடவு செய்யும் பாத்திகளில் நிழல் போர்வை அமைத்து, பயிர் நடவு செய்கிறோம்.
  • மிக குறைந்த தண்ணீரை கொண்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் பயிரின் வேர் பகுதிக்கு தேவையான தண்ணீர் விடுவதால், செடி நன்கு வளர்கிறது.
  • பாத்தி முழுவதும் கவர் போட்டு மூடி விடுவதால், தேவையில்லாத புல், பூண்டு உள்ளிட்ட களைகள் முளைப்பதில்லை.
  • இதனால், களை பறிக்கும் செலவு குறைகிறது. களை இல்லாததால், பயிர்களை நோய்கள் தாக்குவதும் மிக குறைவு.
  • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கூடுதல் லாபம் கிடைக்கும். நிழல் போர்வை அமைக்க ஒரு ஏக்கருக்கு, 20 ஆயிரம் செலவாகும்.

தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் கூறியதாவது:

  • நிழல் போர்வை அமைப்பதால், மிக குறைந்த பராமரிப்பு செலவில் கூடுதல் லாபம் பெற முடியும். நிழல் போர்வை அமைக்க, நவீன இயந்திரங்கள் உள்ளன.
  • பாத்திகள் தயார் செய்தல், அடியுரம் இடுதல், சொட்டு நீர் குழாய் அமைத்தல், பாத்திகளில் பிளாஸ்டிக் கவர் அமைத்தல், ஆகிய பணிகளை இயந்திரமே செய்து விடும். கோடை காலத்தில் நிழல் போர்வை அமைத்து, விவசாயிகள் பயன்பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *