கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க மழைக் காலத்தில் குறைந்த இடைவெளி நாள்களில் குடற்புழு நீக்கம் செய்வது அவசியம் என கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் பல்லடம் மருத்துவர் நடராஜன் கூறியது.

 கால்நடைகளை அதிகம் தாக்கும் நோய்களுள் குடற்புழு நோயும் ஒன்று. மாடுகளை மட்டுமின்றி, அனைத்துக் கால்நடைகளையுமே இப்புழுக்கள் தாக்குகின்றன. இருப்பினும், அதிகப்பட்சமாகப் பாதிக்கப்படுவது மாடுகள் தான். புழுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் வரை பாதிப்புகள் வெளிப்படையாக ஏற்படுத்துவதில்லை. புழுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் நோயின் பாதிப்பும் அதிகரித்தே காணப்படும்.

 பெரும்பான்மையான கன்றுகள், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள எருமைக் கன்றுகள் பிறந்ததும் உடனடியாக உருண்டை புழுவின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவற்றின் சீம்பால் மற்றும் கன்று ஈன்ற முதல் இரண்டு வாரங்களில் வரும் பாலை கன்றுகள் அருந்துவதால் அதிலுள்ள புழுக்கள், கன்றுகளை நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கி, இறக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.

 கால்நடைகள், தட்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள் மற்றும் உருண்டைப் புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. குடற்புழுக்களால் பாதிக்கப்படும் கால்நடைகளின் வயிற்றில் மிகுதியான வீக்கம் ஏற்படும். உடல் எடை குறைந்து எந்நேரத்திலும் சோர்ந்து காணப்படும். தாடையின் கீழ் பகுதியில் வீக்கம் காணப்படும். வயிற்றுப்போக்கு மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறது. சில கால்நடைகள் பால் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.

  சாதாரண நாள்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும். மழைக் காலத்தில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும் கட்டாயம் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கத்துக்கு 6 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தொடர்ந்து புழு நீக்கத்துக்கு ஒரே மருந்தை வழங்குவதால், புழுக்களின் பாதிப்பை குறைக்க முடியாது. சுழற்சி முறையில் 6 மருந்துகளையும் குறிப்பிட்ட இடைவெளியில் கால் நடைகளுக்கு வழங்க வேண்டும். கன்றுகளுக்குத் தொடர்ச்சியாக ஆறு மாத காலமும் பின்னர் மூன்று மாத இடைவெளியிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

 குடற்புழு நீக்கம் செய்வதனால் கால்நடைகளுக்கு சினை உற்பத்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் உணவு உள்கொள்ளும் திறனையும் அதிகரிக்கிறது. உணவுகளிலுள்ள ஊட்டச்சத்தை முழுமையாக கால்நடைகளுக்கு கொண்டு சேர்க்கிறது.

 மாடுகளுக்கு பால் கறக்கும் அளவை அதிகரிப்பதோடு, ஆடுகளுக்கு அதிக குட்டிகளை ஈன்றும் வாய்ப்பை வழங்குகிறது. விவசாயிகள் தவறாமல் அட்டவணையிட்டு, சுழற்சி முறையில் தொடர்ந்து குடற்புழு நீக்கம் செய்து கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *