கால்நடைகளுக்கு மாற்றுத் தீவனமாக அசோலா

கால்நடைகளின் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசோலா செடிகளை மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்துமாறு, கால்நடைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஈரோட்டில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர்கள் கவிதா, யசோதை ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  •  தமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் வறட்சி நிலவுகிறது. மேலும், விவசாயம், மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவும் குறைந்து கொண்டே வருவதால் தீவனப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • இதனால், மாற்றுத் தீவனமான அசோலாவைப் பயன்படுத்தி தீவனச் செலவு மற்றும் தீவனத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம்.
  • அசோலா, பெரணி வகையைச் சார்ந்த மிதவைச் செடியாகும்.
  • இவை நீரின் மேற்பரப்பில் வேகமாக வளரும்.
  • அசோலாவை கால்நடைகளுக்குப் பச்சையாகவோ, உலர் நிலையிலோ கொடுக்கலாம்.
  • அசோலாவில் 50 முதல் 60 சதவீதம் வரை புரதச்சத்து, பீட்டா கரோட்டின், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புகள் உள்ளன.
  • அசோலாவை கறவை மாடுகளுக்கு மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தினால் பாலின் கொழுப்புச் சத்து 10 சதவீதமும், கொழுப்பு அல்லாத திடப்பொருளின் அளவு 3 சதவீதமும் அதிகரிக்கும்.
  • மேலும், பாலின் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது.
  • அசோலாவை கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தும்போதுகோழிகள் விரைவாக வளரும்.
  • அசோலா சிறந்த உரமாகவும் பயன்படுகிறது.
  • அசோலாவை நன்றாகக் கழுவிய பின் கறவை மாடுகளுக்கு அளிக்க வேண்டும்.
  • முதன்முதலில் அசோலாவைப் பயன்படுத்தும்போது அடர் தீவனம் ஒருபங்கு, அசோலா ஒருபங்கு வீதம் கொடுக்க வேண்டும்.
  • நன்கு பழக்கப்பட்ட பின் அசோலாவை தனியாகவே கொடுக்கலாம்.
  • பசுந் தீவனப் பற்றாக்குறையை ஈடுசெய்ய புரதச்சத்து மிகுந்த அசோலாவை உற்பத்தி செய்து நிரந்தர மாற்றுத்தீவனமாகப் பயன்படுத்தலாம்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *