பாரம்பர்ய மாடு…தஞ்சாவூர் ‘குட்டைகாரி!’

திகமாகப் பால் கிடைக்கும்’ என்ற ஆசையால், விவசாயிகள் பலரும் கலப்பின மாடுகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், விவசாயிகளின் உற்ற தோழனாக இருந்து, பல வகைகளிலும் பலன் கொடுத்து வந்த நாட்டுமாடுகள் அழிந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மற்றும் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் ஆகியோர், ‘பசுமை விகடன்’ மூலம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பலரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம்.

ஓய்வுபெற்ற வங்கி அலுவலரான மாணிக்கம், அம்மாப்பேட்டை அருகே உள்ள நத்தம் செண்பகபுரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஒரு பகல் பொழுதில் தோட்டத்தில் இருந்த மாணிக்கத்தைச் சந்தித்தோம்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் மாணிக்கம். “திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பக்கத்துல உள்ள அருந்தவம்புலம்தான் எனக்குப் பூர்வீகம். அப்பா, தாத்தா எல்லாரும் விவசாயம்தான் பார்த்தாங்க. நான் படிச்சுட்டு பேங்க்ல வேலைக்குச் சேர்ந்து, 2011-ம் வருஷம் ஓய்வுபெற்றேன். என்னோட சொந்தக்காரங்க நிறையபேர் பசுமை விகடன் வாசகர்கள். அவங்க மூலமாத்தான் நானும் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். அதைப் படிக்கப் படிக்க நானும் விவசாயத்துல ரொம்ப ஆர்வமாயிட்டேன்.

இதனால, 2015-ம் வருஷம் இந்த 8 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். ஆரம்பத்துல ஒரு ஏக்கர் நிலத்துல மட்டும் இயற்கை விவசாயம் செஞ்சேன். பசுமை விகடன் மூலமா புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேஷ் அறிமுகமானார். அவர்கிட்ட இருந்துதான் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி, பத்திலைக்கரைசல், மீன் அமினோ அமிலம் எல்லாம் வாங்கி… கட்டைப் பொன்னி ரக நெல்லைச் சாகுபடி செஞ்சேன். அதுல 24 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைச்சது. அடுத்த வருஷம், வெள்ளைப்பொன்னி நெல் சாகுபடி செஞ்சதுல 18 மூட்டை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம், சம்பாப்பட்டத்துல கறுப்புக்கவுனி, ஆத்தூர் கிச்சலிச்சம்பா ரெண்டையும் தலா ஒரு ஏக்கர் நிலத்துல போட்டுருக்கேன்” என்று சொன்ன மாணிக்கம், மாடுகள் மேய்ந்துகொண்டிருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச்சென்றார்.

“இயற்கை விவசாயத்துல இறங்கினப்புறம் நாட்டு மாடுகள் வாங்கணும்கிற எண்ணம் வந்துச்சு. அதனால, போன வருஷம் ஜனவரி மாசம், ஆச்சம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர்கிட்ட இருந்து ‘தஞ்சாவூர் குட்டை காரி’ங்கிற பாரம்பர்ய மாடுகள் இரண்டை வாங்கிட்டு வந்தேன். இப்போ அந்த மாடுகளுக்கு ரெண்டு வயசாகுது. வாட்டி எடுக்குற வெயில்ல கூட இந்த மாடுங்க சுறுசுறுப்பா இருக்குது.

காலையில 9 மணியில இருந்து, சாயந்தரம் 6 மணி வரைக்கும் மேய்ச்சல்லதான் இருக்கும். சாயந்தரம் 6 மணிக்குத் தண்ணீர் காட்டிக் கட்டிடுவோம். மறுநாள் காலையில 9 மணிக்குத் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். இப்போதைக்குக் கொட்டகைகூட அமைக்கலை, வெளியிலதான் கட்டுறோம். ஆனாலும் மாடுகள் பனி, வெயில்னு எல்லா சூழ்நிலையையும் தாங்கிக்குதுங்க. ரெண்டு மாடுகளுமே நல்ல ஆரோக்கியமாவும் திடகாத்திரமாவும் இருக்கு. இவ்வளவுக்கும் இதுகளுக்கு அடர் தீவனம் கொடுக்குற தேயில்லை. மேய்ச்சல் மட்டும்தான்.

இந்த வகை மாடுகள் குட்டையா இருக்கும். திமில் நல்ல திரட்சியாவும் கொம்புகள் சின்னதாவும் இருக்கும். உடல் முழுவதும் கருப்பு நிறத்துலயும் உடல்ல ஏதாவது ஓர் இடத்துல வெள்ளை நிறத்திட்டுகள் இருக்கும். இந்த மாடுகள் 14 ஈத்துகள் வரை ஈனும். இன்னும் இந்த மாடுகள் சினைப்பருவத்துக்கு வரலை” என்று சொன்ன மாணிக்கம் பண்ணையைக் கவனித்து வரும் முத்துவை நமக்கு அறிமுகப்படுத்தினார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்து இயற்கை விவசாயம்மீது ஏற்பட்ட ஆசையால் வேலையை உதறிவிட்டு மாணிக்கத்தின் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

நம்மிடம் பேசிய முத்து, “இப்போ நாட்டு மாட்டுப்பாலுக்கு அதிகத் தேவை இருக்கு. அதனால, நாட்டு மாடுகளை அதிகப்படுத்தலாம்னு இருக்கோம். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தாயும் கன்றுமா ரெண்டு ஜோடி சிந்தி ரக மாடுகளை வாங்கியிருக்கோம். இந்த மாடுகள் கறவையில இருக்குறதால, அடர்தீவனமா கடலைப்பிண்ணாக்கு, சோளப்பொட்டு, உளுந்தம்பொட்டு, தவிடுனு கலந்து கொடுக்குறோம். இப்போதைக்குத் தினமும் 14 லிட்டர் பால் கிடைக்குது. அதுல 4 லிட்டர் பாலை வீட்டுத்தேவைக்கு வெச்சுக்கிட்டு, மீதி பத்து லிட்டர் பாலை மட்டும் ஆவின் நிலையத்துல  ஊத்துறோம். ஒரு லிட்டர் பாலுக்கு 28 ரூபாய்ங்கிற கணக்குல தினமும் 280 ரூபாய் வருமானம் கிடைச்சுட்டுருக்கு. அதுல மாடுகளுக்கே தினமும் 160 ரூபாய் செலவாகிடுது” என்றார்.

நிறைவாகப் பேசிய மாணிக்கம், “இப்போதைக்குப் பால் குறைவாகக் கிடைக்குறதால ஆவினுக்குக் கொடுக்குறோம். மாடுகளை அதிகப்படுத்திப் பால் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியதும், நாங்களே நேரடியா விற்பனை செய்யலாம்னு இருக்கோம். அப்படி விற்பனை செஞ்சா ஒரு லிட்டர் பாலுக்கு 50 ரூபாய் வரை கிடைக்கும்” என்றார் நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,

மாணிக்கம், செல்போன்: 7598641895

முத்து, செல்போன் 9843453223

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *