ஒரு ஹெக்டேரில் 25 டன் சப்போட்டா

சிவகங்கை மாவட்டத்தில் சப்போட்டா பழ சாகுபடி சராசரியாக 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் கிரிக்கெட் பால், பி.கே.எம் 1, ஓவல் ஆகிய ரகங்கள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளன.

சப்போட்டா ஒரு வெப்ப மண்டல பழப்பயிர். இந்தப் பயிர் அனைத்து வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. இதனை 1000 மீட்டர் உயரம் வரை உள்ள நிலங்களில் சாகுபடி செய்யலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடவுக்கு ஏற்றக்காலம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் கி. வெங்கடேஸ்வரன் கூறுயதாவது:

  • சப்போட்டாவில், கோ1, கோ2, கோ3, பி.கே.எம்1, பி.கே.எம்2, பி.கே.எம்3, பி.கே.எம்4, பி.கே.எம்.5, கிரிக்கெட் பால், ஓவல் பாராமசி, தகரக்குடி, கீர்த்தபாரத்தி, பாலா, காளிப்பட்டி, மற்றும் துவாரப்புடி ஆகிய ரகங்கள் உள்ளன. ஒட்டுக்கன்றுகளும் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
  • ஒரு மீட்டர் அளவு குழி தோண்டி அதில் 10 கிலோ தொழுஉரம் 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு 100 கிராம் லிண்டேன் மருந்து ஆகிய கலவையினை இட்டு குழியின் நடுவில் சப்போட்டா கன்றின் ஒட்டுப்பகுதி தரையில் இருந்து 15 செ.மீட்டருக்கு மேல் உள்ளவாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த உடனும், நட்ட 3 வது நாளும், பிறகு 10 முதல் 15 நாள்கள் இடைவெளியிலும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஒரு ஆண்டு முடிந்தபின் செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழுஉரம், 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து, 300 கிராம் சாம்பல் சத்து என்ற அளவில் சப்போட்டா செடிக்கு உரமிட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு 50 கிலோ தொழுஉரம், ஒரு கிலோ தழைச்சத்து, ஒரு கிலோ மணிச்சத்து, 1.5 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். நீர்ப் பாசன வசதி உள்ள பகுதிகளில் கோடை காலத்தில் ஒரு முறையும், மழைக் காலங்களில் ஒரு முறையும் என இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, உரச் சேதமும் தடுக்கப்படும்.
  • ஒட்டு கன்றுகளில் ஒட்டுப்பகுதிகளின் கீழே தழைத்து வரும் வேர்ச்செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்ற வேண்டும். சுமார் 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் விரிந்து செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். சப்போட்டாவில் கவாத்து செய்தல் தேவையில்லை.
  • சப்போட்டாவை தாக்கக் கூடிய மொட்டுப் புழுவினை கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி 2 மில்லி லிட்டர் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 2 மில்லி லிட்டார் அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இதில் காணப்படும் கம்பளிப் புழுவினை கட்டுப்படுத்த குளோரோபைரஸ் 20 ஈசி 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும். பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 ஈசி 2 மில்லி லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்.
  • சப்போட்டாவில் கரும் புஞ்சாண நோயைக் கட்டுப்படுத்த 1 கிலோ மைதா அல்லது ஸ்டாரிச்வினை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பின் 20 லிட்டர் தண்ணீரில் (5 சதவீதம்) கலந்து தெளிக்க வேண்டும்.
  • முதிர்ந்த காய்கள் வெளிரிய பழுப்பு நிறத்திலும் அதன் சதைப்பகுதி வெளிரிய மஞ்சள் நிறத்திலும் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்த பழங்களை 5000 பி.பி.எம் எத்ரல் (5 மில்லி லிட்டர்) 10 கிராம் சோடியம் ஹைட்ராக்ûஸடு கலவையுடன் காற்றுப்புகாத அறையில் வைப்பதனால் பழங்கள் பழுப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.
  • இந்த முறையில், ஒரு ஹெக்டேரில் சப்போட்டா பயிர் செய்தால் ஒரு ஆண்டுக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் எடுக்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *