சுவையான சத்து மிக்க சப்போட்டா

‘சிக்கூ’ என வட மாநில மக்களால் அழைப்படும் ‘சப்போட்டா’ பழம் உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவு பயிராகி, உற்பத்தியாகின்றது. அரபு நாடுகள், கத்தார், பஹ்ரைன், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, தென் ஆப்ரிகா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சப்போட்டாவின் தாயகம் இந்தியா அல்ல. போர்த்துகீசியர்கள் கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போது இந்த பழம் நமது நாட்டிற்குள் நுழைந்து, பரவி இன்று உலக அளவில் முதலிட உற்பத்தியாகும் நிலையை அடைந்துள்ளது.

வடிகால் வசதியுள்ள எந்த வகை மண்ணும் சப்போட்டா பயிரிட ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் ஏற்றது. அத்துடன் சப்போட்டா ஓரளவு உப்புத் தன்மையுள்ள நிலங்களிலும், உப்புத் தன்மை கொண்ட பாசன நீரையும் தாங்கி வளரக் கூடியது. இந்த சப்போட்டோவின் தாயகம் மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா. இங்குள்ள காடுகளில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே காட்டுத்தாவரமாக சப்போட்டா இருந்திருக்கின்றது. சுவையான சப்போட்டா பழத்தை அமெரிக்க பழங்குடி இன மக்கள் பழங்காலத்தில் ‘’நாணயமாக’’ பயன்படுத்தி இருக்கின்றனர். சந்தைகளில் சப்போட்டா பழங்களை எண்ணிக் கொடுத்து அதற்கு பதில் மீன், முயல் போன்றவற்றை வாங்கியிருக்கின்றனர். அமெரிக்க பழங்குடி இனமக்களின் வாழ்கையைக் குறித்து ஸ்பானிய பிஷப் ‘டியோகா டி லண்டா’ என்பவர் எழுதிய நூலில் இந்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சப்போட்டேசி’ தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் திருநாமம் ‘மனிலீகரா சப்போட்டா’. வெளிநாட்டிலிருந்து இந்தப்பழம் இந்தியாவிற்கு அறிமுகம் ஆனபடியால் இதற்குத் தமிழில் ‘சீமை இலுப்பை’ என்ற பெயரும் உண்டு. வருடத்திற்கு இரண்டு முறை காய்க்கும். ஏப்ரல் மற்றும் ஜூலை வரை முதல்முறையும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை இரண்டாம் முறையும் காய்க்கும்.

சப்போட்டா நன்கு செழித்து வளரக்கூடிய மர வகை ஆதலால் 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் 2 அடி நீளம் X 2 அடி அகலம் X 2 அடி ஆழமுள்ள குழிகள் எடுத்து குழிகளை சிறிது நாட்களுக்கு ஆற விட வேண்டும். பருவ மழை துவங்கும் முன்னர் ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சப்போட்டா நடுவதற்கு ஏற்ற காலம். குழி ஒன்றிற்கு  10 கிலோ நன்கு மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இவற்றுடன் மேல் மண் கலந்து மூடவேண்டும்.

கிரிக்கெட் பால், ஓவல், பாராமாசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ1, கோ 2, பெரியகுளம் 1, பெரியகுளம் 2, பெரியகுளம் 3 எனப் பல ரகங்கள் உள்ளன. இதில் தன் சுவையாலும், தரத்தாலும் பெரியகுளம் 1 எனப்படும் PKM 1 ரகம் முன்னிலையில் உள்ளது. சப்போட்டா விதை வழியே வளர்த்துச் செடியாக்கி நடப்படுவதில்லை. ஒட்டுக் கட்டியசெடிகள்தான் நடவுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒட்டுச் செடி என்பது ஒரு வேர்ச் செடியையும் அச்செடியில் வேர்பாகம் அடங்கியதொரு மண் கண்டத்தையும் வேர்ச் செடியுடன் இணைந்த ஒர் தலைச்செடியையும், ஓர் ஒட்டு பாகத்தையும் கொண்டதாக இருக்கும். தலைச்செடி நல்லதோர் தாய்மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதியாகும். தாய் மரம் தரமுள்ள காய்ப்பையும், அதிக அளவு விளைச்சலையும், பருவங்கள் தவறாமல் காய்க்கும் தன்மையும் உடையதாக இருக்க வேண்டும். வேர் செடியென்பது எந்த பிரதேசத்தில் ஒட்டுச் செடி நடப்படவேண்டுமோ அந்த இடத்தின் தட்ப வெப்ப சீதோஷ்ண நிலை, மண்ணின் தரம் மற்றும் தன்மை, தண்ணீரின் தன்மை இவைகளுக்கு ஏற்றவாறு வளரும் தன்மையுடையதாகும். நீண்டு வளர்ந்த வேர்பாகத்தை உடையதாகவும், பூச்சி நோய் முதலியவற்றை தாங்கும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும். ஒட்டு பாகம் என்பது தலைச் செடியையும், வேர் செடியையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் இடமாகும். இந்த இடம் ‘புண்’ பட்ட இடம் என்பதாலும் நோய், பூச்சி, மழைத் தண்ணீர், சூரிய வெப்பத்தால் எளிதில் தாக்கப்படுமென்பதாலும் ஒட்டு பாகம் போர்டோ பசை தடவிய துணியால் சுற்றப்பட்டு இறுக்கமாக கட்டப்பட்ட பாலித்தீன் தாளால் பாதுகாக்கப்படுகின்றது.

ஒட்டுச் செடியை குழியினுள் நடவு செய்யும்போது ஆணிவேரை எக்காரணத்தைக் கொண்டும் கலைக்கக் கூடாது. கீழேயுள்ள மண் கண்டம் ஒருபோதும் கலையவே கூடாது. மண் கண்டம் கலைந்து விட்டால் செடியிலுள்ள வேர்பகுதி காற்றுப்பட்டு செடி இறந்துவிடும். செடி நடவு செய்ய 2 மணி நேரம் முன் செடிக்கு தண்ணீர் விட்டு செடியின் தண்டு பாகத்தை இரண்டு விரல்களுக்குள் இறுக்கப்பிடித்து மண் சட்டி என்றால் லேசாகத் தட்டி உடைத்து அப்புறப்படுத்தியும், பாலீத்தீன் நாற்றாங்கால் பை என்றால் கூர்மையான கத்தியால் கிழித்தும் அப்புறப்படுத்தி வேருடன் கூடிய மண் கண்டத்தை அசைக்காமல் எடுத்து ஒட்டுப்பாகம் மண்ணுக்கு மேல் தெரியுமாறு வைத்து குழிகளில் நடவு செய்யவேண்டும்.

பருவ மழை துவங்கும் முன்னர் செடிகளை நட்டு, நட்ட உடன் செடிகள் காற்றில் ஆடாமலிருக்க செடியின் இரண்டு புறமும் குச்சிகளை நட்டு சப்போட்டா செடியுடன் இணைத்து எட்டுவடிவ கயிற்று கட்டால் கட்ட வேண்டும்.

சப்போட்டா ஒரு அயல் மகரந்த சேர்க்கை மரம் எனவே நல்ல முறையில் அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு காய்கள் அதிகமாகக் காய்க்க குறைந்தபட்சம் 2 அல்லது 3 மரங்களாவது ஒரு இடத்தில் நடவு செய்யப்படல் வேண்டும். செடிகள் நடவு செய்த சில நாட்களுக்கு 2,3 நாட்களுக்கு ஒருமுறையும் பின்னர் 4,5 நாட்களுக்கு ஒரு முறையும் நிலத்தின் தன்மை, பருவகால சூழ்நிலை போன்றவற்றை அனுசரித்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மரம் நன்கு வளர்ந்த பின் 10 நாட்களுக்கு ஒரு முறையேனும் நீர்ப் பாசனம் செய்யவேண்டும். சப்போட்டா வறட்சி தாங்கி வளர்கின்ற பயிர் என்பதால் நல்ல மழை உள்ள இடங்களில் மானாவாரி பயிராகவும் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுக்கலாம்.

பொதுவாக பழவகை மரங்களை இயற்கை முறையில் வளர்த்தால் பழத்தின் சுவையும், தரமும் நன்கு இருக்கும். ஆனாலும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் சப்போட்டா செடி நடவு செய்கையில் நடவு குழுக்குள் இரண்டு தீப்பெட்டி அளவு முசூரிடர்ஸி அல்லது சூப்பர் பாஸ்பேட் இட்டு நடவு செய்தால் வேர் நன்கு வளரும். ஒரு வயது முடிந்தபின்னர் தழைச்சத்தும், மழைச்சத்தும் தலா 200 கிராம் அளவிற்கும் சாம்பல் சத்து 300 கிராம் அளவிற்கு கொடுக்கவேண்டும். வருடம் ஒன்றிற்கு 200:200:300 கிராம் என்ற அளவில் கூட்டி 5 வருடங்களுக்குப் பின்னர் 30 முதல் 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் தழைச்சத்து, மணிச்சத்து ஒவ்வொரு கிலோவும் சாம்பல் சத்து ஒன்றரை கிலோவும் இடவேண்டும். ரசாயன உரம் இடுபவர்கள் சிபாரிசு செய்யப்படுகின்ற உர அளவைக் கோடைகாலத்தில் ஒரு முறையும், மழைக் காலத்தில் ஒரு முறையும் இரண்டாகப் பிரித்து இடலாம். பொதுவாக உரங்களை பிரித்து இடுவதால் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் உரம் சேதமடைவதும் தவிர்க்கப்படுகின்றது. மண்மாதிரி  எடுத்து மண் பரிசோதனை செய்து அதன்படி தழை, மணி, சாம்பல் சத்து, தொழு உரம் ஆகியவற்றுடன் நுண் ஊட்ட சத்துகளும் இடுவது நல்லது.

வருடம் முழுவதும் பச்சைப்பசேல் எனக் காணப்படும் சப்போட்டா, மண்ணின்தன்மை, ரகம், நீர்ப்பாசனம் போன்றவற்றை அனுசரித்து 60 முதல் 140 அடி உயரம் வரையிலும் வளரும் இயல்பை உடையது. சப்போட்டா நடவு செய்தபின் ஒட்டுக்கு ‘கீழ்’ தழைத்து வரும் வேர் செடிகளின் தளிர்களை அவ்வப்போது நீக்க வேண்டும். இல்லைஎன்றால் வேர்ச் செடியான பாலா, இலுப்பை அல்லது கிர்ணி வளர்ந்து சப்போட்டாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்திவிடும்.

மண் மட்டத்திலிருந்து 2 அடி உயரத்திற்கு கிளைகள் ஏதும் பிரியாமல் பக்கக் கிளைகளை கவாத்து செய்து விட வேண்டும். கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்க வேண்டும். பொதுவாக சப்போட்டா மரத்திற்கு கவாத்துச் செய்யத் தேவையில்லை. மிக உயரமாக வளரும் ஒரு சில தண்டுகளையும், அடர்த்தியாக நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிட வேண்டும்.

பழமரங்களின் ஆரம்பகால வளர்ச்சி மெதுவாக இருக்குமென்பதால், மர வரிசைகளுக்கு இடையே உள்ள இடங்களில் தக்காளி, வெங்காயம், கத்திரி போன்ற காய்கறி பயிர்களையோ, பப்பாளி போன்ற குறுகிய கால பழப்பயிரையோ சாகுபடி செய்யலாம். இதனால் நிலம் களையின்றி பராமரிக்கப்படுவதுடன் ஊடுபயிர் மூலம் உபரி வருமானமும் கிடைக்கும்.

இரண்டு புறமும் ஊசியான அமைப்பை சப்போட்டா இலை பெற்றிருக்கும். சப்போட்டா இலையானது 4 முதல் 12 அங்குலம் வரை இருக்கும். பழங்களானது ரகத்தைப் பொருத்து பிங்க், ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் இருக்கும். வெளிப்புற தோலானது பழுப்பு நிறத்தில் சின்னஞ்சிறிய கருப்பு திட்டுப் புள்ளிகளுடன் உப்புக் காகிதம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். நன்கு பழுத்த சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிடலாம். சப்போட்டாவில் அல்வா, ஜாம், ஜெல்லி, மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், புரூட்பார் போன்ற உணவுப்பொருட்களையும் தயார் செய்யலாம். சப்போட்டா பழத்தில் வைட்டமின்கள் B6 ம் C ம் நிறைந்து காணப்படுகின்றது..

100 கிராம் சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

சக்தி 120 கிலோகலோரி
மாவு சத்து 32.1 கிராம்
சர்க்கரை சத்து 20.14 கிராம்
நார்ச்சத்து 5.4 கிராம்
கொழுப்பு 0.46 கிராம்
புரத சத்து 1.45 கிராம்

வைட்டமின்கள்

நுண் சத்துக்கள்

B1 1% சுண்ணாம்பு 18 மி.கி
B2 10% இரும்பு 0.78 மி.கி
B3 10% மக்னீசியம் 11 மி.கி
B5 8% மாங்கனீசு 0.204 மி.கி
B6 55% பாஸ்பரஸ் 26 மி.கி
C 23% பொட்டாசியம் 0.454 மி.கி
E 2.11% சோடியம் 7 மி.கி
துத்தநாகம் 0.19 மி.கி

அறுவடையும் மகசூலும்

சப்போட்டா ஆண்டிற்கு இரண்டுமுறை மகசூல் கொடுக்கும். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் காய்க்கும். முதிர்ந்த சப்போட்டா கனியைக் கண்டறிவதற்கு நல்ல அனுபவம் தேவை. பொதுவாக இதர பழ வகைகளைப் போல தோலின் நிறம், அளவு போன்றவற்றில் எவ்வித மாற்றமும் இல்லாமலிருக்கும். நன்கு கூர்ந்து கவனித்தால் பழத்தின் மேலுள்ள கரும்புள்ளிகள் மறைந்து பழங்கள் பளபளப்பாக இருக்கும். பழத்தின் நுனிப்பகுதியில் காணப்படும் முள்போன்ற அமைப்பு உதிர்ந்து இருக்கும். பழத்தின் தோலை சிறிது சுரண்டிப் பார்த்தால் உள்ளே மஞ்சள் நிறம் தெரியும். சப்போட்டா பழத்தை அறுவடை செய்யும்போது அதன் காம்புப் பகுதியிலிருந்து வெள்ளை நிறப்பால் வரும். இந்த பாலானது இதர பழங்களின் மேலே பட்டு பழங்கள் பார்வைக்கு நன்றாக இல்லாமல் போய்விடும். இந்தப் பாலானது காலை வேலையில் அதிகமாகவும், மாலை வேளைகளில் குறைவாகவும் காணப்படும். ஆதலால் மாலை வேளையில் சப்போட்டா அறுவடை செய்யலாம். அறுவடை செய்த சப்போட்டா பழங்களை தனித்தனியே ஒன்றின் மேல் ஒன்று படாமல் நிலத்தில் பரப்பி வைத்து அதிலுள்ள பால் முழுவதும் வடிந்தபின் சேகரித்தால் சப்போட்டா பழம் பார்வைக்கு அழகாக இருக்கும். சப்போட்டாவை பழுக்க வைப்பது சுலபம். இயற்கை முறையிலேயே எளிதில் பழுக்கும் இயல்பை உடையதால் எந்தவித ரசாயன பொருட்களையும் பயன்படுத்தத் தேவையில்லை. நன்கு மூடிய காற்றோட்டமில்லாத இருட்டான, மூடிய அறைக்குள் சணல் சாக்கு பைகளில் அல்லது வைக்கோலில் பழத்தை வைத்து, அந்த அறையில் புகை அல்லது சாம்பிராணி புகையோ போட்டு காற்று புகாமல் மூடி வைத்தால் 24 – 36 மணி நேரத்திற்குள் நன்கு பழுத்துவிடும்.

நன்கு வளர்ந்த சப்போட்டா மரத்திலிருந்து 1000 முதல் 1500 பழங்கள் கிடைக்கும். ஏக்கர் ஒன்றிற்கு 10 முதல் 12 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும். தனிப்பயிராக சாகுபடி செய்யும் போது சப்போட்டாவிலும் பூச்சி, நோய் தாக்குதல் பிரச்னைகள் உண்டு.

சப்போட்டாவில் பூஞ்சாண நோயும், இலைப்புள்ளி நோயும் வரக்கூடும். கரும் பூஞ்சாண நோய் செதில் பூச்சிகள் மற்றும் மாவுப் பூச்சிகள் சுரக்கும் ஒருவகையான தேன் போன்ற திரவத்தால் கவரப்பட்டு வளரும் கருமை நிறப் பூசாணத்தால் ஏற்படும் நோய். இந்த நோய் இலைகளின் ஒளிச் சேர்க்கை திறனைப் பாதித்து, காய்களை உருவச் சிதைவு ஏற்பட வைக்கிறது. இதனை இயற்கையான முறையிலேயே எளிதில் கட்டுப்படுத்தலாம். 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ மைதாமாவை கரைத்து கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அதிலிருந்து ஒரு லிட்டர் எடுத்து நான்கு லிட்டர் தண்ணீருடன் கலந்து கரைத்து இலைகளின் இரண்டுபுறமும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். இந்த கரைசல் உலரும்போது பூஞ்சாணத்துடன் சேர்ந்து செதில் செதிலாக உதிர்ந்து விடுகின்றது.

மத்தியில் வெண்மையாகவும், அதனைச் சுற்றி இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்திலும் சிறிய கணக்கற்ற பகுதிகள் இலைகளின் மேல் காணப்படுவதே இலைப்புள்ளி நோயாகும். இந்த இலைப்புள்ளி நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ரகங்களை செய்து தரலாம். இல்லையெனில் 30 நாட்களுக்கு ஒரு முறை வீதம் மூன்று முறை 0.2 சதம் டைத்தேன் Z 78 மருந்தை தெளித்தும் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி ’டைமீத்தோ வேட்’ ரசாயன மருந்து தெளித்து இதனை கட்டுப்படுத்தலாம்.

பூச்சிகளின் சேதாரத்தில் பிரதான இடம் தண்டு துளைப்பானுக்கு உண்டு. தண்டு துளைக்கும் வண்டுகள் மரங்களின் பட்டைகளில் வட்ட வடிவ துளைகள் ஏற்படுத்த ஊடுறுவிச் சென்று மரத்தினுள் இருக்கும் திசுக்களைத் தின்று சேதம் விளைவிக்கும். இத்துளை வழியே கடினமான கம்பியைச் செலுத்தி வண்டுகளைக் கொல்லலாம். துளையினுள் மண்ணெண்ணை கலந்த பஞ்சை திணித்து அதன் மேல் களிமண் கொண்டு பூசி பூச்சியை மூச்சு திணற வைத்தும் கொல்லலாம்.

இலைப் பரப்பிலும், நடு நரம்பின் பக்கவாட்டு பகுதிகளிலும் இளம் கொளுந்துப் பகுதிகளிலும் செதில் பூச்சிகள் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்துகின்றன. ’மாலத்தியான்’ மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மூன்று வேளை தெளித்து செதில் பூச்சிகளைக்கட்டுப்படுத்தலாம்.

இளம் கனிகள், இளம் மொட்டுக்கள், இலைகள் ஆகியவற்றை இலை சுருட்டுப் புழுக்கள் தின்று சேதம் விளைவிக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி ’பாசலோன்’ மருந்தை கலந்து தெளித்து இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

இலைகளின் அடிப்பரப்பிலும், பழங்களின் காம்பு அடிப்பகுதியிலும் மாவுப்பூச்சி காணப்படும். இவை சாற்றை உறிஞ்சிவிட்டு சர்க்கரை திரவம் போல் பெருமளவில் சுரக்கின்றன. அதனால் மாவுப்பூச்சிகள் இருக்குமிடத்தில் எறும்புகளின் நடமாட்டமிருக்கும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி ’டைமீத்தோ வேட்’ ரசாயன மருந்து தெளித்து இதனைக் கட்டுப்படுத்தலாம்.

இளம் இலைகளின் மேற்பரப்பை சுரண்டி உண்ணும் இலை பச்சையம் உண்ணும் பூச்சி இலைகளை மடித்துவிட்டு இலைகள் கூடுபோல காட்சியளிக்கும். இவற்றினுள்ளே மிகச் சிறிய கம்பளி பூச்சிகள் காணப்படும். கடைசியில் இந்த இலைகள் காய்ந்து உருமாறி விழுந்துவிடும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி மாலத்தியான் மருந்தை இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பூ மொட்டுகள் உண்ணும் பூச்சிகள் பூக்கள் மற்றும் பூமொட்டுக்களை சேதப்படுத்தி அவற்றை உதிரச் செய்கின்றன. 5% வேப்பங்கொட்டை சாற்றைத் தெளித்து இதனை கட்டுப்படுத்தலாம். அல்லது 1 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி எண்டோசல்பான் மருந்து கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

மரங்களின் பட்டைகளை துளைத்துச் சென்று சேதத்தை ஏற்படுத்தும் பட்டை உண்ணும் பூச்சிகளை 1 லிட்டர் தண்ணீரில் 2 மில்லி ‘டைமீத்தோவேட்’ கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

தகவலுக்காகவே பூச்சி, நோய்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பழப்பயிர்களை ஒப்பு நோக்கும்போது சப்போட்டாவில் பூச்சி நோய்களின் தாக்குதல் மிகக் குறைவே. பொருளாதார சேத நிலை ஏற்படும் என்ற நிலை வந்தால் மட்டுமே ரசாயன பூச்சிக் கொல்லிகளை நாடுவது நல்லது.

பளபளக்கும் கறுப்பு நிற விதைகளையும், பழுப்பு நிற தோலையும் உடைய எளிய, அழகிய ‘சப்போட்டா’ உடல் நலனை பேணிக் காக்கும் அற்புதமான பழம். இதில் வைட்டமின் A இருப்பதால் வயதானவர்களின் கண்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது. சப்போட்டா பழம் சாப்பிட்ட உடனே உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியும் கொடுக்கக் கூடியது என்பதால் உடல் உழைப்பு செய்பவர்களுக்கு ஏற்ற பழம் இது. ‘டானின்’ நிறைய இருப்பதால் வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு சப்போட்டா ஒரு நல்ல மருந்து. சப்போட்டா ஜீரண மண்டலத்தைத் தூண்டி ‘செரிக்கும் சக்தியை அதிகப்படுத்துகின்றது. சப்போட்டாவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உறுதுணையாக இருக்கின்றது. ஆன்டி ஆக்ஸிடன்ட் anti oxidant குணமிருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது.

சப்போட்டா பழம் நல்ல தூக்கத்தை கொடுக்கும் குணமுடையதால் மன அழுத்தம், மன அமைதியின்மை, மூளைச்சோர்வு உள்ள வேலையிலிருப்போர் சப்போட்டா பழம் நிறைய சாப்பிட்டால் நல்ல அமைதி கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களும், தாய்ப்பால் கொடுப்போரும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும். நல்ல சக்தியும், நுண் ஊட்டமும் நிரம்பிய பழமாதலால் சருமமும் கேசமும் பளபளப்பாக மாறும்.

பளபளப்பாக மெழுகு பூசி,குளிர் பதன இடங்களில் மாதக்கணக்கில் சேகரிக்கப்பட்டு கவர்ச்சியாக தோற்றம் கொடுக்கக்கூடிய ‘ஆப்பிள்’ போன்ற விலையுயர்ந்த பழங்களின் மீதுள்ள மோகம் அதைவிட சுவையும், சக்தியும் அதிகமுள்ள, எளிய உடனுக்குடன் கிடைக்கும் சப்போட்டா போன்ற பழங்களின் மேல் இல்லை. குழந்தைகளுக்கு பெரியவர்கள் வெளி அழகை மட்டும் பார்த்து பழங்களை வாங்காமல் அதன் உள்ளீடுகளை உணர்ந்து, விலை குறைந்த, ஆனால் பல சத்துக்கள் உடைய சப்போட்டா போன்ற பழங்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *