கோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி

கோடைப் பருவத்தில் துவரை சாகுபடி செய்து அதிக பலன் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இப்பயிர் அதிக அளவில் மானாவாரி பயிராக பயிரிடப்படுவதால், இவ்வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.

ஏற்ற ரகம்:

  • எல்ஆர்ஜி41, விபிஎன்2, விபிஎன்3, பிஆர்ஜி1 ஆகிய ரகங்கள் கோடை சாகுபடிக்கு ஏற்றவை.
  • இந்த ரகங்களில் ஏதாவது ஒன்றை ஹெக்டேருக்கு 10 கிலோ அளவில் தனிப் பயிராக பயிரிடலாம்.

விதைக்கும் முறை:

  • விதைக்கும் முன் 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் பூஞ்சான மருந்தை கலந்து விதைத்தல் வேண்டும்.
  • இதனால் வேர் அழுகல் நோய் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • பூஞ்சானகொல்லி விதை நேர்த்தி செய்த விதையை 24 மணி நேரம் கழித்து உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், பாஸ்போபேக்டீரியா 3 பாக்கெட் ஆகியவற்றுடன் 3 டம்ளர் ஆறிய கஞ்சியை சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடங்கல் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

உர மேலாண்மை:

  • கோடை உழுவு செய்த நிலத்தில் ஒரு ஹெக்டேருக்கு தொழு உரம் 12.5 டன், 25 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை கடைசி உழவின்போது இட வேண்டும்.
  • ரசாயன உரங்களான ஜிப்சம் 55 கிலோ, டிஏபி 54.5 கிலோ, யூரியா 5.5 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ ஆகியவை அடி உரமாக இட வேண்டும்.
  • நுண்ணூட்டச் சத்தான ஜிங்க் சல்பேட் 12.5 கிலோ உரத்தை 50 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சீராகத் தூவ வேண்டும்.
  • இத்துடன் 5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும்.

பயிர் இடைவெளி:

  • விதையை வரிசைக்கு வரிசை 180 செ.மீ. அளவும், விதைக்கு விதை 30 செ.மீ. அளவும் இடைவெளி விட்டு நடவும்.
  • விதைத்த 3-ம் நாள் 2 லிட்டர் களைகொல்லியான பெண்டிமெத்திலின்-ஐ 50 கிலோ மணலுடன் கலந்து மண்ணில் சீராகத் தூவ வேண்டும்.
  • பின்னர் 25 முதல் 30-வது நாளில் களை எடுக்க வேண்டும்.
  • களை எடுக்கும்போது ஒரு அடி இடைவெளியில் ஒரு செடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • மகசூல் அதிகரிக்க பூக்கும் தருவாயில் 2 சதவீத டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் ஹெக்டேருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் பெறமுடியும் என நாட்டறம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் த.கணேசன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *