துவரை சாகுபடி டிப்ஸ்

துவரை சாகுபடியில் விவசாயிகள் நாற்று நடவு முறை தொழில்நுட்பங்களைக் கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறும் வழிமுறைகள்:

மண் வளத்தைப் பாதுகாப்பதில் துவரை சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரை பயிர், தனது சாகுபடி பருவத்தில் ஏக்கருக்கு சுமார் 8 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கிறது. அறுவடைக்குப்பின் இப் பயிரின் வேர்ப் பகுதிகள், உதிர்ந்த இலைகள் மண்ணின் பெüதிக மற்றும் ரசாயனத் தன்மைகளை மேம்படுத்துகிறது.

துவரைப் பயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் உழவியல் தொழில்நுட்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்பயிரை, தனிப் பயிராகவும், கலப்புப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடலாம்.

தற்போது, பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்க தாமதமாவதால், சாகுபடி பணிகள் ஜுலை மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, விதைப்பு தாமதமாவதால், இப் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், துவரையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு நாற்று நடவு முறை பரிந்துரைக்கப்படுகிறது.

நாற்றங்கால் தயாரிப்பு:
இப் பருவத்துக்குப் பரிந்துரைக்கப்படும் கோ(ஆர்.ஜி.) 7, எல்ஆர்ஜி.41, வம்பன் 2, 3, பி.எஸ்.ஆர்.1 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். துவரை நடவுமுறை சாகுபடிக்கு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பின், ரைசோபியம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி விதைப்பு செய்ய வேண்டும்.

மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் உள்ள 6-க்கு 4 அளவுள்ள பாலிதீன் பைகளில் நிரப்பி, விதைப்புக்குப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க 4 துளைகள் போடலாம். பின்பு விதைநேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாள்கள் பராமரிக்கப்பட வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்யலாம்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

நடவு செய்தல்:

தனிப் பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை 5-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2904 பயிர்/ஏக்கர்), ஊடுபயிர் சாகுபடிக்கு 6-க்கு 3 அடி என்ற இடைவெளியிலும் (2420 பயிர்/ஏக்கர்) எடுக்க வேண்டும்.

நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன் குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்து, உடன் நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப் பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் மேற்கொள்ளலாம். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.

நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன், மானாவாரி சாகுபடியாக இருந்தால் ஏக்கருக்கு 11 கிலோ யூரியா, 62 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 124 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 16 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். மேலும், ஏக்கருக்கு 4 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும். நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து 5-6 செ.மீ. அளவுக்கு குருத்தைக் கிள்ளிவிடுவதால், பக்க கிளைகள் அதிகரித்து கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.

நடவு முறை சாகுபடியின் நன்மைகள்:

நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். அதிக ஆழத்தில் செய்யப்படுவதால் வேர் வளர்ச்சி அதிகமாவதோடு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறையில் செய்யப்படுவதால், பயிர்ப் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் மேற்கொள்ள முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி மற்றும் போதிய அளவு நீர்ப் பாசனம் அளிப்பதால், நிலம், காற்று, ஈரப்பதம் மற்றும் பயிர் சத்துகள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்குக் கிடைப்பதால், பயிர் மகசூல் அதிகரிக்கிறது. பக்கவாட்டுக் கிளைகள் அதிக அளவில் உருவாவதன் மூலம் அதிகக் காய்கள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்கிறது.

எனவே, நாற்று நடவு முறையில் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் துவரை சாகுபடி செய்து அதிக விளைச்சலைப் பெற்று லாபம் அடையலாம் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *