தென்னையில் ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறு

விழுப்புரம், சிறுவந்தாடு கிராமத்தில், தென்னங்கன்றுகள் இடையே ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறும் சாகுபடி பணியில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமம் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் சண்முகம். தனது 4 ஏக்கர் நிலத்தில் 2 மாதங்களுக்கு முன் தென்னங்கன்றுகள் நடவு செய்து, வனத்துறை மூலம் வழங்கிய சவுக்கை கன்றுகளையும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில், 25 அடி இடை வெளியில் தென்னங் கன்றுகள் நட்டுள்ளார்.

ஊடு பயிராக சவுக்கைக் கன்றுகள் நட்டு, பச்சை பயறும் விதைத்துள்ளார்.அவர் கூறியதாவது:

  • தென்னங்கன்றுகளுக்கு இடையே மூன்றரை அடி அகலம், இரண்டடி நீளம் இடைவெளியில், சவுக்கைக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
  • வனத்துறை மூலம் வழங்கிய தேக்கு மரக் கன்றுகள், வரப்பை சுற்றி நட்டுள்ளேன்.
  • சவுக்கை நடவு முடிந்தவுடன், பச்சை பயறு விதைக்கப்படும்.
  • பச்சை பயறு செடிகள் வளர்ந்ததும், ஏக்கருக்கு 4 கிலோ வீதம் டி.ஏ.பி.,யை 10 லிட்டர் தண்ணீரில், ஒரு நாள் முழுவதும் ஊர வைத்து, கரைத்து, கரைசலை வடிகட்டி 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் பச்சை பயறு செடிகளுக்குத் தெளிக்கப்படும்.
  • இதன் சத்துகள் பச்சை பயறு செடிகள் மட்டுமின்றி, சவுக்கு மற்றும் தென்னங் கன்றுகளுக்கும் கிடைக்கும்.
  • மூன்றரை மாதங்கள் கழிந்தவுடன், பச்சை பயறு அறுவடை செய்யப்படும். பின், பவர் வீடர் மூலம் வயலில் குறுக்கு, நெடுக்காக உழவு செய்து, களைகளை மண்ணில் மக்கச் செய்வதால், சிறந்த இயற்கை சத்துகளாக கிடைக்கிறது.
  • பச்சை பயறு அறுவடை மூலம் கிடைக்கும் பணம், மொத்த சாகுபடி பணிகளுக்கும் செலவு செய்த தொகைக்கு, ஈடு கொடுத்து விடும். பின், இரண்டரை ஆண்டு முதல் மூன்றாண்டிற்குள் சவுக்கை மரங்கள் அறுவடை செய்யப்படும்.
  • டிராக்டர் மூலம் உழவு செய்து, தென்னங்கன்றுகள் மற்றும் தேக்கு மரங்கள் பராமரிப்பு செய்யப்படும்.
  • இதில் நடவு செய்யப்பட்டுள்ள நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங் கன்றுகள், ஐந்தாம் ஆண்டு முதல் காய்க்கத் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *