தென்னை மரங்களின் நண்பர்கள்

தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு மற்றும் குறு விவசாயிகளை தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், குறைந்து வரும் கொள்முதல் விலை போன்ற அதிகளவு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தென்னை சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கவும் தென்னை வாரியத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் தென்னை நண்பர்கள் திட்டம் மிகப்பெரிய அளவில் கிராமப்புறங்களில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:

  • தென்னை மரம், வளர்க்கவும், உருவத்திலும் பிற மரங்களைக் காட்டிலும் வேறுபாடு கொண்டது.கிளைகள் இல்லாத காரணத்தால் மரத்தில் ஏறுவது கடினம், பாரம்பரியமாக குறிப்பிட்ட சிலரே மரம் ஏறிவரும் நிலை உள்ளது.
  • தற்போது உள்ள இளைய சமுதாயத்தினர் கல்வி அறிவு பெற்றுவிட்ட சூழலில் தென்னை மரம் ஏற அனுபவம் உள்ள வயதானவர்களை மட்டுமே நம்ப வேண்டியது உள்ளது.
  • பல மாவட்டங்களில் மரமேறிகளின் பற்றாக்குறைக் காரணமாக தேங்காய்களைப் பறிக்க முடியாத நிலைகூட நிலவுகிறது.
  • இத்தகைய சூழலில் கேரள மாநிலம் கோழிக்கோடு மார்வில் இன்டஸ்டிரீஸ் வடிவமைத்துள்ள மரமேறும் கருவி தென்னை சாகுபடியில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்படச் செய்துள்ளது.
  • தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தென்னை மரமேறும் கருவிகள் வாயிலாக மரமேறும் பணி எளிமையாக்கப்பட்டுள்ளது.யார் வேண்டுமானாலும் தென்னை அறுவடையில் ஈடுபட முடியும்.
  • தற்போது தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை மரங்களின் நண்பர்கள் என்ற திட்டத்தின் வாயிலாக மரமேறும் கருவிகளைக் கொண்டு மரமேறும் பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
  • கடந்த 17-3-2011 முதல் செயல்படுத்தப்பட்டும் இப்பயிற்சியில் 18 வயது முதல் 40 வயது வரையிலான ஆரோக்கியமான இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
  • வேலையில்லாத 7-ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படும் இப்பயிற்சி திட்டத்தில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்சம் 20 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு 6 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளர்கள் ஒரே இடத்தில் தங்கிப் பயிற்சியைப் பெற வேண்டும்.இப்பயிற்சியில் தென்னை மரமேறும் தொழில் பயிற்சி, தேங்காய்களை அறுவடை செய்வது, தென்னை மரங்களின் தலைப்பகுதியை சுத்தம் செய்தல், பூச்சி மற்றும் பூஞ்ஞாணக் கொல்லிகளைத் தெளித்து தென்னையில் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தென்னைகளில் செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்வது மற்றும் வீரிய ஒட்டு தென்னைகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பம் சொல்லித் தரப்படுகிறது.
  • இப்பயிற்சியை முடித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் மரமேறும் கருவி, இரு சக்கர வாகனம், தொலைபேசிக் கொண்டு விவசாயிகளின் அழைப்பை பெற்று தேங்காய்களை பறித்து தகுந்த கட்டணம் பெறலாம்.
  • இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ஆயிரம் வரை பணம் சம்பாதிக்கலாம்.
  • கடந்த ஒரு வருடத்தில் 3 ஆயிரம் தென்னை மர நண்பர்கள் கிராம அளவில் உருவாக்கப்பட்டு கிராமப்புற வேலைவாய்ப்பும் பெற்றும் தென்னை உற்பத்தியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • தென்னை விவசாயிகள் பல உற்பத்தி பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைப்பதுடன், தென்னை உற்பத்தித் திறன் பெருகியுள்ளது, நகர்புறங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் தென்னை மரங்களில் கூட குறைந்தக் கட்டணத்தில் தேங்காய் மற்றும் இளநீர் அறுவடை செய்யப்படுகிறது.
  • வேலையில்லாத கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பெற அருமையான இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

எனவே தமிழக தென்னை விவசாயிகள், கிராமப்புற, நகர்புற வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் குறுகிய காலத்தில் சுயவேலைவாய்ப்பு பெற இச்சிறப்பான தென்னை மரங்களின் நண்பர்கள் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்கிறார் தி.ராஜ்பிரவீன்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *