தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந்தும்..

தேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த கேரள மாநிலத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி… முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழகம்.

முன்னாள் கோவை ஆவின் சேர்மனும் முன்னோடி தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.ராஜகோபால் பேசியபோது, “இது தமிழகத்துக்கு பெருமைதான். தமிழ்நாட்டில் 9 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கலாம். ஆரம்பத்தில் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகளில்தான் தென்னை விவசாயம் பரவலாக இருந்தது. ஆனால், அந்த நிலை மாறிவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணியோடு, திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என்று பல மாவட்டங்களில் புதிய தென்னை விவசாயிகள் உருவாகி வருகின்றனர். ஓரளவு தண்ணீர் வசதி இருக்கும் பகுதிகளில் கூட சொட்டுநீர் பாசனம் அமைத்து தென்னை சாகுபடியை செய்து வருகிறார்கள். ஆள் பற்றாக்குறை, ஓரளவு கிடைக்கும் கட்டுபடியான விலை போன்ற விஷயங்கள்தான் பல விவசாயிகள் தென்னைக்கு மாற காரணமாக உள்ளது.

கேரளாவைப் பொருத்தவரை மழையை நம்பி இருக்கும் மானாவாரித் தென்னைகள்தான் அதிகம். ஆரம்ப கால நாட்டுமரங்கள்தான் அங்கு அதிகம். அதில் சராசரி உற்பத்தி மரம் ஒன்றுக்கு 80 முதல் 100 தேங்காய் என்கிற அளவில்தான் இருக்கும். மேலும், அங்கு புதிய தென்னை விரிவாக்கம் நடைபெறவே இல்லை. இறவை பாசனத்தில் தென்னை சாகுபடியும் இல்லை. ரப்பர் விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் தென்னை விவசாயத்தை விட்டு ரப்பர் மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவதால் தேங்காய் உற்பத்தி வெகுவாக அங்கு குறைந்து விட்டது. தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நாட்டுரக தென்னைகளை விட, குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுக்கும் வீரிய ரக தென்னை நடவு அதிகம். ஆண்டுக்கு மரம் ஒன்றில் இருந்து 300 தேங்காய் வரை அறுவடை செய்யக்கூடிய ரகங்கள் இங்கு வந்து விட்டது. அதனால், தேங்காய் உற்பத்தியும் அதிகரித்து தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

அதே நேரத்தில், தமிழகத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். தமிழகத்தில் பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ கொப்பரை 70 ரூபாய்; உரித்த தேங்காய் ஒரு கிலோ 22 ரூபாய்; நார் மற்றும் குடுமியுடன் உள்ள தேங்காய் 10 ரூபாய் என விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது. ஆனால், தற்போது 30 முதல் 40 சதவிகிதம் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.

‘நியாயமான விலை கிடைக்க, மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி… தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள் தேங்காய்களை சாலைகளில் உடைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்” என்றார்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாசிலாமணி பேசியபோது, “வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தாராளமாக அனுமதி அளித்ததால், தேங்காய் எண்ணெய்க்கான தேவை குறைந்துகொண்டே வருகிறது. பாமாயில் இறக்குமதி செய்வதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும். உரித்த தேங்காயை கிலோ 40 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காயை கிலோ 120 ரூபாய்க்கும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி வீரசேனன் பேசியபோது,  “மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு அடிப்படை ஆதார விலையாக 59 ரூபாய் 50 காசு என வழங்குகிறது. இதுவே மிகவும் குறைவான விலை.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கும் குறைவான விலைதான் கிடைத்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கொப்பரை கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் கொள்முதலைத் தொடங்க வேண்டும்” என்றார்,

கள் இயக்க அமைப்பாளர் செ.நல்லசாமியிடம் பேசியபோது, “கொப்பரைக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் தென்னை விவசாயம் நசிந்து வருகிறது. கேரளாவைப் போல, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட வேண்டும். தென்னைப்பால் (கள்) இறக்க அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம்…

ஜி.பழனிச்சாமி, கு. ராமகிருஷ்ணன்

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *