வாழையில் ஊடுபயிராக தக்காளி

ஊறு விளைவிக்காத வருமானத்துக்கு, ஊடுபயிர்கள் சாகுபடியே சிறந்தவழி என்கின்றனர் உடுமலையை சேர்ந்த விவசாயிகள்.

உடுமலையில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி தென்னை, வாழை, காய்கறி உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழுகுளபாசனத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளவர்கள் தென்னை, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகையில் சிக்கனத்தை கையாள்வதற்கு ஊடுபயிர்களும் முக்கிய காரணமாக உள்ளது. இதனால், தென்னை, வாழை போன்ற பயிர்க ளில் தக்காளி, சோளம், அவரை, கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர்.

ஓராண்டுகால பயிரான வாழையில், தக்காளி போன்ற குறுகியகால காய்கறி பயிர்களை இரண்டு முறை பயிரிட்டு அறுவடை செய்யலாம் என்கின்றனர்.

வாழையில் இரண்டு பாத்திகளுக்கும் இடையில், வாழை கன்றுகளுக்கு இடையேயும் தக்காளி செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வாழைக்கிடையே தக்காளி சாகுபடியை மேற்கொள்ளும் போது ஓராண்டுக்கும் குறைந்தபட்சம், மூன்று அறுவடை வரைக்கும் பெறலாம்.

ஊடுபயிர்களால் நிலத்தில் வெயில் நேரடியாக விழாதவாறு தடுக்கப்படுகிறது. இதனால், ஈரப்பதம் சமநிலை படுத்தப்படுவதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது. ஒருபயிருக்கு தண்ணீர் பாய்ச்சினால் இரண்டு பயிர்களும் எடுத்துக்கொள்கிறது. இதனால் தண்ணீர் சிக்கனமாவதுடன், அடுத்த பருவத்துக்கான தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

வாழை பலன் கொடுப்பதற்குள் ஊடுபயிரிலிருந்து வருமானத்தை பெற்றுவிடலாம். இதற்காக ஓராண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், ‘வாழை சாகுபடி செய்தால் வருமானத்துக்காக ஓராண்டு வரை காத்திருக்க வேண்டும். அதில் ஏதாவது ஒரு காய்கறி பயிரை ஊடுபயிராக நடவு செய்தால் குறைந்தபட்சம், 3 மாதங்களில் வருமானம் பெறமுடியும். தக்காளியின் தேவை எப்போதும் இருப்பதால் மழையில்லாமல் சாகுபடி பரப்பும் குறைந்த வருவதால் நிலையான விலை கிடைக்கும் என்ற நோக்கில் தக்காளி, வாழைக்கு ஊடுபயிராக நடவு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *