நிலக்கடலையை தாக்கும் ""டிக்கா'' இலைப்புள்ளி நோய்

நிலக்கடலையை தாக்கும் “”டிக்கா” இலைப்புள்ளி நோய், தண்டு அழுகல் நோயை தடுக்க மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆலோசனை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை கணித்து பெரும்பாலான பகுதிகளில் நிலக்கடலை மானாவாரியாக பயிரிடப்படுகிறது. தற்போது நிலவி வரும் அதிக ஈரப்பதம் சூழ்நிலையில் நிலக்கடலையில் “டிக்கா’ இலைப்புள்ளி, தண்டு அழுகல் நோய்கள் ஏற்பட்டு மகசூலை பாதிக்கின்றன.

“டிக்கா’ இலைப்புள்ளி நோய்:இந்நோய் தாக்கிய இலையின் அடிப்பரப்பில் பழுப்பு நிறப்புள்ளிகளும் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்புள்ளிகளும் ஏற்பட்டு இலை உதிர்ந்து விடும். நிலக்கடலையின் வயது 50 முதல் 60 நாட்களில் இந்நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

தண்டு அழுகல் நோய்: மழைக்காலங்களில் தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலையில் தண்டு அழுகல் நோய் தாக்குகிறது.

நோய் தாக்குதல் இருந்தால் வெண்ணிற பூசண வித்துக்கள் செடியின் மேற்புறத்திலும், செடியின் அடிப்புறம் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்தும் காணப்படும். இலைப்புள்ளி, துருநோய்க்கு மேன்கோசெப் அல்லது குளோரோதலோனில் மருந்தை ஏக்கருக்கு 400 கிராம் அளவிலும் தெளிக்க வேண்டும். கார்பண்டாசிம் மருந்தை ஏக்கருக்கு 100 கிராம் அளவில் 15 நாள் இடைவெளி விட்டு இரு முறை தெளிக்க வேண்டும்.

வயலில் களை அதிகம் இல்லாமலும், தண்ணீர் தேங்காத அளவிற்கு பார்த்து கொள்ள வேண்டும்.

ட்ரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்னும் நுண்ணுயிரியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 25 கிலோ தொழு உரத்துடன் அல்லது 150 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து வயலில் தூவ வேண்டும், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *