நெற்பயிரில் குருத்துப்பூச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிரில் குருத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்துள்ளனர். குருத்துப் பூச்சி தாக்குதல் தென்பட்டால் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறையினை கட்டுப்படுத்தலாம்.

  • குருத்துப் பூச்சிகள் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் நடுக்குருத்தைத் தாக்கும். இதனால் நடுக்குருத்து வாடி வைக்கோல் நிறமாகும். பிடித்து இழுத்தால் கையோடு வந்துவிடும்.
  • இலையின் நுனியில் உள்ள முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிப்பதன் மூலம் இப் பூச்சியின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்கலாம்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தழைச்சத்து இடக் கூடாது.
  • ஒரு ஹெக்டேருக்கு ஒரு விளக்குப்பொறி மற்றும் 12 இனக்கவர்ச்சிப் பொறி என்ற அளவில் வைத்து அந்துப் பூச்சியினை கவர்ந்து அழிக்கலாம்.
  • பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அதனுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்து தெளிக்க வேண்டும்.
  • நடவு வயலில் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை 5 சி.சி. வீதம் 30 மற்றும் 37 ஆவது நாள்களில் தெளித்து குருத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்.
  • இப்பூச்சியின் பொருளாதாரச் சேத நிலையானது ஒரு சதுர மீட்டருக்கு 2 முட்டைக்குவியல்கள் அல்லது 10 சதவிகித நடுக்குருத்து வாடிக்காய்தல் ஆகும். இவற்றை தாண்டும்போது ஒரு ஹெக்டேருக்கு கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 சதவிகிதம், எஸ்.பி. 1000 கிராம் அல்லது குளோர் ஆன்ட்ரனிலிபுரோல் 18.5 சதவிகிதம், எஸ்.சி. 150 மில்லி அல்லது பிப்ரோனில் 5 எஸ்.சி. 1000-1500 மில்லி அல்லது தயமீ தாக்சம் 25 டபுள்யூஜி 100 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. 1250 மில்லி அல்லது பாஸ்பமிடான் 40 எஸ்.எல். 1250 மில்லி அல்லது பாசலோன் 35 ஈ.சி. 1500 மில்லி என்ற அளவில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *