நெல் விதைப் பரிசோதனை

நெல் விதைகளைப் பரிசோதனை செய்து கொண்டு சம்பா பட்டத்தில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் சி.பெருமாள் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மத்திய கால நெல் ரகங்களான வெள்ளைப் பொன்னி, மே.வெ. பொன்னி, பாபட்லா – 5205, குறுகிய கால ரகங்களான ஏடிடி (ஆர்) 45, ஏடிடி – 36, ஏடிடி – 37, ஏடிடி – 39 ஆகியவை முன்சம்பா மற்றும் சம்பா பருவத்துக்கு பயிரிட மிகவும் ஏற்ற ரகங்களாகும்.
 • இப்போது தமிழகத்தில் நெல் பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் உயர் விளைச்சலும் அதிக வருமானமும் தரக்கூடிய, திருந்திய நெல் சாகுபடி முறை விவசாயிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 • இந்த முறைப்படி சாகுபடி செய்யும் போது ஏக்கருக்கு 3 கிலோ என்ற அளவே விதை நட்டால் போதும்.
 • சதுர நடவு முறையில் அதாவது 22.5 செ.மீ.-க்கு 22.5 செ.மீ. என்ற பயிர் இடைவெளியில் நாற்றுகள் நடப்படுவதோடு 1 ச.மீட்டருக்கு, 25 குத்துகள் பயிர் என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது.
 • போதிய காற்றோட்ட வசதியும், பூச்சி நோய்தாக்காத வண்ணம் பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து குத்துக்கு 30-40, வாளிப்பான கதிர்கள் கிடைக்கும்.
 • மேலும் ஒவ்வொரு கதிரும் சராசரியாக 200-250 நெல்மணிகளைக் கொண்டதாக இருக்கும்.
 • ஏக்கருக்கு 3 கிலோ என்ற விதையளவை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு நெல் மணியும் தரமாகவும், அதிக முளைப்புத்திறன் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்.
 • அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை பயன்படுத்தும்போது நாம் திட்டமிட்ட சாகுபடி பரப்பில் நடவு செய்ய போதுமான நாற்றுகள் கிடைக்கும்.
 • இந்த சம்பா பட்டத்தில் உத்தரமேரூர், மதுராந்தகம், சித்தாமூர், பவுஞ்சூர், அச்சிறுப்பாக்கம் வட்டார விவசாயிகள் ஏற்கெனவே தங்களது கையிருப்பில் உள்ள நெல்விதைகளையே விதைப்புக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
 • அப்படி பயன்படுத்தும் போது கையிருப்பு விதைகள் போதுமான முளைப்புத்திறனுடன் இருக்கிறதா என பார்ப்பது அவசியம்.
 • எனவே விவசாயிகள் நாற்று நடும் முன் விதைப்புக்காக தங்கள் கைவசம் உள்ள நெல் விதையிலிருந்து 400 கிராம் அளவில் மாதிரி எடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள விதை பரிசோதனை அலுவலகத்தில் ரூ.30 கட்டணத்துடன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
 • மேலும் விதை பரிசோதனை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பி பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

Related Posts

அரிசியை வேக வைக்காமல் சாதம் ஆக்க முடியுமா?... கட்டக் நகரில் உள்ள மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம்...
சம்பா பயிரில் இலைகருகல் நோய் வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள ...
உரச்செலவை குறைக்க நெல் சாகுபடியில் பசுந்தாள் உரம்... தமிழ்நாட்டில் ஒருபோக சம்பா நெல் சாகுபடி அதிக பரப்ப...
வறட்சியைத் தாங்கும் குதிரைவாலி... கோவை வேளாண் பல்கலை அறிவியல் மையம் கண்டுபிடித்துள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *