பாரம்பரிய நெல்: எதையும் தாங்கும் சம்பா மோசனம்

பாரம்பரிய நெல் ரகங்களில் பள்ளமான பகுதிகளில் பயிரிட ஏற்ற ரகம் சம்பா மோசனம். இதன் வயது நூற்றி அறுபது நாள். அதிகத் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீர் வருவதற்கு முன்பு, நெல் விதையைத் தெளித்துவிட்டு வந்தால் போதும். மழை பெய்யும்போது குறைந்த ஈரத்திலும் முளைத்துவிடும்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

எதையும் தாங்கும்

வறண்டு கிடக்கும் ஏரிகளில் இதைப் பயிர் செய்யலாம். பிறகு தண்ணீரின் அளவு அதிகரிக்க அதிகரிக்கப் பயிரின் உயரமும் அதிகரித்துக்கொண்டே வரும். இதனால் பயிர் அழுகாது. அதிகத் தண்ணீர் இருந்தாலும் நீருக்கு உள்ளேயே கதிர் வந்து முற்றி, அதிக மகசூல் கொடுக்கும். எல்லா நிலைகளையும் தாங்கி நின்று பலனைக் கொடுப்பதால், இதற்குச் சம்பா மோசனம் என்று பெயர் வந்துள்ளது.

`விதைப்போம், அறுப்போம்’

சம்பா மோசனம் மோட்டா ரகம். சிகப்பு அரிசி. ஏக்கருக்கு இருபத்தி இரண்டு முதல் இருபத்தி ஐந்து மூட்டை வரை கிடைக்கும். இதற்கு எந்த உரமும் போட வேண்டியதில்லை. பூச்சித் தாக்குதல் உட்பட எந்த நோயும் இந்தப் பயிரைத் தாக்காது. `விதைப்போம், அறுப்போம்’ என்னும் சொலவடைக்கு ஏற்ற நெல் ரகம் இது.

இதன் சாகுபடிக்காக எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை. ஒரு சால் உழவு செய்து தெளித்துவிட்டு வந்து, பிறகு அறுவடைக்குச் சென்றால் போதும். நம் முன்னோர் இந்த அரிசியை உண்டு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்துவந்தனர். இன்றும் பல்வேறு கிராமங்களில் சம்பா மோசனம் நெல் புழக்கத்தில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

சம்பா மோசனம் நெல் இயற்கையாகவே விளைவதால் நமக்குத் தேவையான புரதச் சத்துகள், தாது உப்புகள் இதில் அடங்கியுள்ளன. இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலிமையும் அதிகரிக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் இதை உண்டு வந்தால், சோர்வு நீங்கி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துவிடும். சம்பா மோசனம் அரிசிச் சாப்பாட்டுக்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, அவல், கஞ்சி, பலகாரங்கள் ஆகிய உணவு வகைகளுக்கும் ஏற்ற ரகம்.

நெல் ஜெயராமன், தொடர்புக்கு: 09443320954


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *