வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காக்கும் பிபிஎம்

நெற்பயிர்கள் வறட்சியினால் வாடுவதை தடுக்கவும், வெப்பத்திலிருந்தும் பாதுகாக்க கூடியதுமான நவீன பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் புதன்கிழமை குளபதம் கிராமத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மழையை நம்பி இருக்கும் மாவட்டம். வறட்சிக்கு இலக்காகும் மாவட்டம்.

இங்கு பெரும்பான்மையாக நெற்பயிர் 1.3 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு செய்யப்படும் சாகுபடியானது பயிர் முளைத்து தூர்கட்டும் பருவத்திலிருந்து வறட்சிக்கு உள்ளாகி இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து வந்தனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பி.பி.எம்.எம். (பிங்க் பிக்மென்டட் பேக்கல்டேடிங் மெத்தைலோ பாக்டீரியம்) என்ற பாக்டீரியா கரைசலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தை சேர்ந்த குளபதம் கிராமத்தில் நவீன பாக்டீரியா கரைசலை அறிமுகப்படுத்தும் வகையில் தெளிக்கப்பட்டது. நவீன பாக்டீரியா கரைசல் குறித்து ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரா. துரைசிங் கூறியதாவது:

  • இதை தெளிப்பதன் மூலம், இந்த பாக்டீரியா இலைகளின் மேல் வாழ்ந்து கொண்டே மெத்திலோ பாக்டீரியா பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகிளின், ஆக்ஸின் மற்றும் யூரியேஸ் என்ற நொதி பொருள்களை பயிர்களுக்கு அளிக்கும்.
  •   இதனால் பயிரானது வறட்சியால் விரைவில் வாடுவது தடுக்கப்படுகிறது. மேலும் பயிர்களுக்கு மாதம் ஒருமுறை தெளிப்பான் மூலம் வறட்சி மற்றும் வெப்பத்திலிருந்தும் பயிர்களை பாதுகாக்கும்.
  •   இக்கரைசலை ஏக்கருக்கு 200 மி.லி. என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் அல்லது பூம்ஸ்பிரேயர் என்ற விசைத்தெளிப்பான் மூலமும் தெளிக்கலாம்.
  •  இது குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.
  • மேலும் நேரில் வரமுடியாத விவசாயிகளாக இருந்தால் 04567232639 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நன்றி: தினமணி 

Related Posts

கருகும் நெற்பயிரை காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர்... மேலூர் வட்டத்தில் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் கர...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *