ஏக்கருக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கொடுக்கும் பப்பாளி!

குறைவான தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை, தொடர் அறுவடை… போன்ற காரணங்களால், பழ சாகுபடியில் விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரத்தில், வரத்துக்குறைவான காலங்களில், சந்தைக்கு வருவது போல திட்டமிட்டு பழ சாகுபடி செய்தால், நல்ல லாபம் பார்க்க முடியும். பல விவசாயிகள் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு லாபம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில், சீசன் இல்லாத காலங்களில் பப்பாளியைச் சந்தைப்படுத்தி நல்ல லாபம் பார்த்து வருகிறார், சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் இருந்து சாயர்புரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, சக்கம்மாள்புரம். தோட்டத்தில் இருந்த சரவணனைச் சந்தித்தோம்.

நஷ்டம் கொடுத்த வாழை!

“விவசாயம்தான் குடும்பத்தொழில். ப்ளஸ்-டூ முடிச்சிட்டு சித்தப்பா வெச்சிருந்த மளிகைக் கடையில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல அப்பா திடீர்னு இறந்ததால், அப்பா செய்த விவசாயத்தை நான் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு.

ஆரம்பத்துல ரசாயனமும் இயற்கையும் சேர்ந்துதான் செய்தேன். இப்போ ஆறு வருசமா ரசாயன உரம் போடுறதை நிறுத்திட்டேன். ரெண்டு ஏக்கர்ல ‘நாடன்’ ரக வாழை சாகுபடி செய்திருந்தேன். வாழையில் லாபம் இல்லை. உரம், கூலி, நோய்த்தாக்குதல்னு எல்லாத்தையும் சமாளிச்சு சந்தைக்குக் கொண்டு போனா, சரியான விலையும் இல்லை. அதுல ரொம்ப நஷ்டப்பட்டேன்.

‘வாழைக்கு மாற்றா வேற என்ன சாகுபடி செய்யலாம்?’னு குடும்ப நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர்தான், ‘பப்பாளிக்கு ரசாயன உரமே தேவையில்லை. நல்ல விலையும் கிடைக்கும். தொடர் பறிப்பும் இருக்கும்’னு சொன்னாரு. அவர் சொன்னது போல ரெண்டரை ஏக்கரில் ‘ரெட் லேடி’ ரக பப்பாளியை சாகுபடி செய்திருக்கேன். ஒரு ஏக்கர்ல மலை ஏத்தன் வாழை, அரை ஏக்கர்ல எலுமிச்சை போட்டிருக்கேன். இந்த மண், உதிர் செம்மண் (சலித்துப் போட்ட ஆற்று மண் மாதிரி இருக்கும்) இந்த மண்ணுல எந்தச் சத்துமே கிடையாது. தண்ணீர் தேங்கி நிற்காது. அதனால், ஆற்று வண்டலைக் கொட்டித்தான் விவசாயம் செய்றேன். அப்படி நிலத்தைச் சரிசெஞ்சதுக்கே ஏகப்பட்ட செலவு” என்ற சரவணன், தொடர்ந்தார்.

கைகொடுக்கும் பப்பாளி!

“எப்பவுமே சித்திரை மாதத்துல இருந்து ஆடி மாதம் வரை எல்லா பழ வகைகளுமே மகசூல் அதிகமாக இருக்கும். இதனால் மார்க்கெட்டுக்கு, வரத்து அதிகமாகி பழங்களுக்கு விலை இருக்காது. அதனால ஆவணி மாசம் பறிப்புக்கு வர்ற மாதிரி கார்த்திகை மாசம் நடவு போடணும். பொதுவா கார்த்திகை மாதம் நடக்கூடாதுனு சொல்லுவாங்க. அப்படி நட்டா, ஆவணி மாசம் காய்ப்புக்கு வர்றப்போ மகசூல் குறைவாத்தான் இருக்கும். ஆனா, நல்ல விலை கிடைக்கும். அதிகமா விளைய வச்சு விலை இல்லாம குப்பையில கொட்டுறதுக்கு பதிலா, குறைவான மகசூல் கிடைச்சாலும், நல்ல விலை கிடைச்சிடும்.

ஏக்கருக்கு 70 ஆயிரம் கிலோ!

9-ம் மாதத்திலிருந்து தொடர்ந்து 9 மாதங்களுக்கு வாரம் 3 பறிப்புகள் வீதம் பப்பாளிப் பழங்களைப் பறிக்கலாம். 9 மாதங்களுக்கு 108 பறிப்புகள் வரும். ஒரு பறிப்புக்கு 800 கிலோ கிடைக்கும்.

சராசரியாக 100 பறிப்புகள், ஒரு பறிப்புக்கு 700 கிலோனு வெச்சிக்கிட்டாகூட மொத்தம் 70 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக 7 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், உழவு, கன்றுகள், நடவுக்கூலி, பறிப்புக்கூலி, சாணம், கோழி எருனு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மீதி, 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்” என்ற சரவணன் நிறைவாக,

“நான் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்லதான் பப்பாளியை விற்பனை செய்றேன். தவிர, தோட்டத்துக்கு வந்து கேட்கிறவங்களுக்கும் விற்பனை செய்றேன். ரசாயனம் இல்லாம விவசாயம் செய்யுறதுனால தனி விலையெல்லாம் யாரும் தர்றதில்லை. ஆனாலும், நஞ்சில்லாத பழத்தை விற்பனை செய்யுறதுல மனசுக்கு சந்தோசம்தான். தனியா ஒரு ஏக்கர்ல பப்பாளி நடவு செய்து இரண்டு மாத கன்றுகளா இருக்கு. அதுல ஊடுபயிரா வெள்ளரி போட்டிருக்கேன். இன்னும் காய்ப்புக்கு வரலை. என்னைப் பொறுத்தவரைக்கும் பப்பாளியை சாகுபடி செய்தா வருமானம் நிச்சயம்’’ என்று சொல்லி  விடைகொடுத்தார்.

பப்பாளி சாகுபடி செய்யும்விதம் குறித்து சரவணன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!

“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை மூலம் உழுது பத்து நாட்கள் காயவிட்டு, மீண்டும் சட்டிக்கலப்பை மூலம் உழுது, பத்து நாட்கள் காய விடவேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது அடுத்த நாள், கன்றுக்குக் கன்று 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 2 மீட்டர் என்ற இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு நாட்கள் காலையும் மாலையும் 2 மணி நேரம் தண்ணீர் விட்டு, மூன்றாவது நாள் மாலை, 15 சென்டி மீட்டர் அளவுக்கு குழி எடுக்கவேண்டும். குழிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் நடவு செய்யவேண்டும். மாலைப் பொழுதில் நடுவதால், வெயில் பாதிப்பு இருக்காது. மறுநாள் காலையில் வரும் வெயிலை எதிர்கொள்ளும் தன்மையும் கன்றுக்குக் கிடைத்துவிடும். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் தேவைப்படும்.

நடவில் கவனம் தேவை

வேர்ப்பகுதி தண்டுடன் சேரும் பகுதியை ‘மோதிர வளையம்’ என்பார்கள். இந்த மோதிர வளையம் பகுதிவரைதான் செடி மண்ணுக்குள் இருக்க வேண்டும். வேர்ப்பகுதி மண்ணுக்குள்ளும் தண்டு வெளியேவும் இருக்க வேண்டும். தண்டுப்பகுதி மண்ணுக்குள் இருந்தால், ‘எர்மினியா’ என்ற நோய் தாக்கி தண்டுப்பகுதி அழுகிவிடும். நடவு செய்ததில் இருந்து இரண்டு நாட்கள் வரை தொடர்ந்து செழிம்பாக தண்ணீர் கொடுக்கவேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒருநாள் பாசனம் செய்தால் போதும்.

45-ம் நாள் கன்றை விட்டு ஓர் அடி தள்ளி 2 அடி அகலம், ஓர் அடி ஆழத்தில் குழி எடுத்து ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ அளவில் மட்கிய சாணத்தை, வைக்க வேண்டும். கடலைப் பிண்ணாக்கு வைத்தால் நூற்புழு வரும். அதனால், கவனம் தேவை.
200 லிட்டர் தண்ணீரில், 5 கிலோ கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, ஒரு லிட்டர் இ.எம். கரைசலை ஊற்றிவிட்டு ஒரு வாரம் வரை வைத்திருந்து, சொட்டுநீர் மூலமாக மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதை, கன்றுகளை நட்ட இரண்டாவது மாதத்திலிருந்து கொடுக்க வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும்.

பூப்பூக்கும் நேரத்தில் கோழிஎரு!

90 முதல் 95 நாட்களில் (மூன்று மாதத்தில்) செடிகளில் பூப்பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வேர்கள் பரவி இருக்கும் என்பதால், சொட்டு நீர்க்குழாயை ஓர் அடி தள்ளி போட்டு, ஒவ்வொரு செடிக்கும் தலா 3 கிலோ கோழிஎரு வைக்க வேண்டும். பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கோழிஎரு வைத்து வர வேண்டும்.

காய் பெருக்க மீன்கரைசல்!

கன்று நட்டதிலிருந்து 9 மாதம் கழித்து, முதல் பறிப்பு வரும். 11-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கும்.

200 லிட்டர் தண்ணீரில், 10 கிலோ மீன்கழிவுடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை ஊற்றி 40 நாட்கள் வைத்திருந்து, இதில் 10 லிட்டர் கரைசலை எடுத்து சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதன் மூலம் பூக்கள் அதிகம் பூத்து, காய்களும் பருமனாவதோடு, மகசூலும் கூடும். கன்று நட்ட 15-ம் மாதம் வரை மகசூல் அதிகமாக இருக்கும். பிறகு, குறையத் தொடங்கும். 9-ம் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை… வாரம் ஒருமுறை மீன்கழிவு- இ.எம். கரைசலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கோழிஎருவும் என முறையாகக் கொடுத்து வந்தால், மகசூல் குறையாமல் சீராக இருக்கும்.”

டெங்கு காய்ச்சலை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!

பப்பாளிப்பழத்தில் வைட்டமின்-ஏ சத்து அதிகமுள்ளது. இது ஒரு நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல், வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு அருமையான மருந்து. பித்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளைத் தீர்க்கும். பப்பாளிப் பாலில் செரிமானத்துக்கு உதவும் என்சைமான ‘பப்பாயின்’ உள்ளது. இது புரோட்டீன் உணவைச் செரிக்கவைக்க உதவும். அதிகமான பருப்பு உணவை உண்டபிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளைச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும். பழுக்காத பப்பாளித்துண்டுகள் அல்லது பப்பாளிச்சாற்றை சிறிதளவு குடித்தால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் மலத்தில்

மாவுப்பூச்சிக்கு தண்ணீர் ஸ்பிரே..!

பப்பாளியை மாவுப்பூச்சிகள் தான் அதிகம் தாக்கும். கன்று நட்ட ஒரு மாதத்தில் இருந்தே கன்றுகளைக் கவனமாக உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு அடியில், இலைக்கு மேல், தண்டுப்பகுதியில், பூக்களில் என வெள்ளை நிறத்தில் பஞ்சு போல மாவுப்பூச்சி இருக்கும். ஒரு பூச்சியைக் கண்ணில் பார்த்தால்கூட, தண்ணீரை கன்று முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும். தண்ணீர் ஸ்பிரே செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில்,10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்பெண்ணெய் மற்றும் சிறிதளவு காதிசோப் ஆகியவற்றைக் கலந்து ஸ்பிரே செய்ய வேண்டும். அடிக்கடி கன்றுகளை உற்றுக் கவனித்தால் மட்டுமே மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.

வேர் அழுகலைத் தடுக்க சுண்ணாம்பு-துத்தநாகக் கரைசல்!

சில கன்றுகளின் வேர்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் தாக்குவதால், கன்றுகள் சரிந்து விடும். இலைகள் பழுப்பு நிறமாகி, கன்று வாடலாகக் காணப்பட்டால், தூர்ப்பகுதியில் லேசாக குழிதோண்டிப் பார்த்தால் வேர் அழுகல் தெரியும். இதைத் தடுக்க 10 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சுண்ணாம்பு, 200 கிராம் மயில்துத்தம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். மயில்துத்தத்தை நேரடியாகத் தூவினால் பொங்கி, முகத்தில் தெறித்துவிடும். அதனால் ஓரமாகத் தூவி, மெதுவாகக் கலக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மயில்துத்தக் கரைசலைக் கலந்து, ஒரு கன்றுக்கு 100 மில்லி அளவில், தூர்ப்பகுதியைச் சுற்றி ஊற்றினால், வேர் அழுகலைத் தடுக்கலாம்.

தொடர்புக்கு,
சரவணன்,
செல்போன்: 9442264327 .

நன்றி:பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *