டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி

பயறு வகைப் பயிர்களில் கூடுதல் மகசூல் பெற இரு முறை 2 சதம் டிஏபி கரைசலை கைத் தெளிப்பான் கொண்டு தெளிப்பது அவசியம் என்று வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயறு வகைப் பயிர்கள்:

  • கொண்டைக் கடலை, உளுந்து, தட்டைப் பயிறு, அவரை, பாசிப் பயறு, கொள்ளு, துவரை, சோயா மொச்சை ஆகிய பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் பெரிதும் அவசியமானது.

டிஏபி கரைசல் தயாரிப்பு:

  • டிஏபி கரைசலைப் பயிர்களுக்கு தெளிப்பதைவிட அந்தக் கரைசலைத் தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
  • சிறிது அளவு மாறினாலும் கரைசல் தெளித்தும் எந்தவிதப் பயனும் கிடைக்காது.
  • அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும் அபாயமும் உள்ளது.
  • எனவே, கரைசல் தயாரிப்பில் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • ஓர் ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரம் போதுமானது.
  • 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து வைக்க வேண்டும்.
  • இரவு நேரத்தில் 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும்.
  • காலையில் இந்தக் கரைசலை கலக்காமல் இருக்க வேண்டும்.
  • மேல் புறத்தில் தெளிந்திருக்கும் கரைசலைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.

கைத் தெளிப்பான்:

  • டிஏபி கரைசலைத் தெளிக்கும்போது விசைத் தெளிப்பான் பயன்படுத்தக் கூடாது.
  • விசைத் தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாது. நுரையே அதிகமாக வரும். எனவே, கைத் தெளிப்பான் பயன்படுத்தியே தெளிக்க வேண்டும்.
  • காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். வெயில் இருக்கும் தருணத்தில் தெளித்தால் எந்தவிதப் பயனும் தராது.

எப்போது தெளிப்பது?:

  • பயறு வகைப் பயிர்களை நடவு செய்த 30-வது நாளில் ஒரு முறையும், 45-வது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
  • இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறையும் தெளிக்கலாம்.

பயன்கள் என்ன?:

  • பொக்கு காய்கள் வராது.
  • பூக்கள் கொட்டாது.
  • காய்கள் நன்கு திரட்சியாக வளரும். கூடுதல் மகசூல் பெறலாம்.
  • சாதாரணமாக ஒரு ஹெக்டேரில் 620 கிலோ பயறு வகைகள் கிடைத்தால் 2 சதம் டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதம் வரை மகசூல் கிடைக்கும்.

அரசு மானியம்:

  • டிஏபி தெளிப்புக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திடத்தின் மூலம், அரசு மானியமும் வழங்கப்படுகிறது.
  • டிஏபி கரைசல் தயாரிப்புக்கு மானியமாக ரூ.500 வழங்கப்படுகிறது. விவசாயி கூடுதலாக ரூ.200 மட்டும் செலவு செய்தால் போதுமானது.
  • இதேபோல், டிஏபி தெளிக்கும் பணிக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கு 2 ஆள்களைப் பயன்படுத்தினால் கூலியாக ரூ.600 வழங்க வேண்டியிருக்கும். அதில், 50 சதத்தை அரசே மானியமாக வழங்குகிறது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *