பயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள

விவசாயிகள் பயிரிடும் பயறு வகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட சில வைரஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் உயிர்ரக மருந்துகளைக் கொண்டு இவ் வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி பயிர்களில் பச்சை புழு சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.இந்த பச்சைப் புழுக்களை வைரஸ் உயிரிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம்.

இப் பூச்சிகளை அழிக்க என்.பி.வைரஸ் என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.

இப் பூச்சிக் கொல்லி குறித்தும் இதைப் பயன்படுத்தும் முறை குறித்தும் புதுச்சேரி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பூச்சியியல் வல்லுநர் நி.விஜயகுமாரிடம் கூறியது:

பச்சைப் புழு:

  • கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயிர்கள் மற்றும் இயற்கையாக வளரும் தாவர இனங்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த பச்சைப் புழு பல பயிர் உண்ணும் பூச்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொதுவாக பச்சைப் புழுக்கள் தமது ஒரு மாத கால வாழ்க்கை சுழற்சியில் 30-45 நாள்கள் வயதுடைய பயிர்களைத் தாக்கி சேதப்படுத்துகின்றனர்.
  • சேதப்படுத்தப்படும் பயிர்களில் பச்சைப் புழுக்களின் அந்துப்பூச்சிகள் (தாய்ப் பூச்சிகள்) நடமாட்டம் பரவலாக இருக்கும்.
  • இந்த அந்துப் பூச்சிகள் இலைகளின் மீது முட்டைகள் இடுகின்றன. மூன்று அல்லது நான்கு நாள்களில் முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பயிர்களின் மொட்டு, காய், விதை, மற்றும் மலர் ஆகிய பாகங்களில் தலையை உட்செலுத்தி எஞ்சிய பாகங்களை வெளியே வைத்து தாக்குலை ஏற்படுத்துகின்றன.
  • இளம் புழுவானது ஒரு நாளைக்கு 30-40 பயிர் பாகங்களை அழிக்கும் தன்மை உள்ளது.
  • பச்சைப் புழுவானது சில சமயங்களில் பழுப்பு கலந்த பச்சை நிறத்திலும் 35 மி.மீ. நீளமுடையதாகவும் இருக்கும்.இது தனது புழுப் பருவத்தை 18-25 நாள்களில் நான்கு நிலைகளை கடந்து முடிக்கிறது.
  • பருமனான அந்துப் பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருப்பதோடு அதன் முன் இறக்கையில் சாம்பல் நிற அலை போன்ற கோடுகளுடன் நடுவில் சிறுநீரக விதை போன்ற கருப்பு புள்ளி இருக்கும்.

என்.பி.வைரஸ் உயிரி:

  • என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக் கொல்லிகள், கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் நுண்கிருமிகளால் ஆன நன்மை செய்யும் உயிரினக் கட்டுப்பாடு காரணியாகும், வைரியான் என்ற உட்கருவைக் கொண்ட இந்த வைரஸ் கிருமிகள் முறையற்ற வடிவமைப்பில் அறுகோண செல்களால் ஆனது.
  • இவ் வைரஸ் கிருமிகள் பச்சைப் புழுக்களை மட்டுமே கொல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை.
  • என்.பி.வைரஸ் உயர்ரக பூச்சிக்கொல்லி மருந்தைப் பயிர்களில் தெளித்தவுடன் புழுக்கள் பயிர்களின் பாகங்களை உண்ணும் போது வைரஸ் கிருமிகள் புழுக்களின் வயிறு, குடல் பகுதிகளுக்கு செல்கின்றன.
  • வைரஸ் தெளித்த 5-7 நாள்களில், வைரஸ் துகள்கள் புழுக்களின் அடிபாகத்தில் நோயை உண்டாக்கும்.பின்னர் புழுக்கள் பயிர்களில் தலைகீழாக தொங்கி இறந்துவிடும்.
  • வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட புழுவின் அடிப்பாகத்தில் ஊதாநிற வண்ணம் காணப்படும்.
  • இந்த என்.பி.வைரஸ் எனும் புதிய உயிரினக் கட்டுப்பாடு காரணி புதுச்சேரி குரும்பாப்பட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் திரவ வடிவில் பிளாஸ்டிக் குடுவைகளில் 100 மிலி மற்றும் 250 மிலி அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

உபயோகிக்கும் முறை:

  • என்.பி.வைரஸ் கரைசலை ஒரு ஏக்கருக்கு 250 மிலி என்ற அளவில் எடுத்துக் கொண்டு அதனுடன் 5 சதவீத வெல்லச் சர்க்கரை, 5 சதவீத கிரானைட் பாலிஷ் கழிவு, ஒட்டுத் திரவமான டீபால் (அல்லது) ரானிபால் 100 மிலி, ராபின் நீலம் 100 மிலி மற்றும் போரிக் அமிலம் (அல்லது) டானிக் அமிலம் 25 மிலி சேர்த்து இளம் புழுக்களின் தாக்குதல் தோன்றியவுடன் இலைகள், தண்டுகள், காய்கள், கதிர்கள் முழுவதும் நனையும்படி மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இதை மாலைப் பொழுதில் மட்டுமே தெளிக்க வேண்டும்.
  • பயிர்களின் அனைத்து பாகங்களிலும் படுமாறு தெளிக்க வேண்டும்.
  • நல்லத் தண்ணீரை தெளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் உப்பு நீர், கலங்கல் நீர், நுரைப்பு நீர் ஆகியவற்றை தெளிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது.
  • இளம் புழுக்கள் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும்.
  • வைரஸ் கரைசலை எக்காரணம் கொண்டும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுடனும், வேப்ப எண்ணெய்யுடனும் கலக்கக்கூடாது.
  • வைரஸ் கரைசலைப் பயிர்களின் மீது தெளித்தவுடன் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை 10 நாள்களுக்கு தவிர்க்க வேண்டும்.
  • இந்த வைரஸ் உயிர் ரக மருந்தை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். செலவும் குறைவாகும். இதனால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.
  • மேலும் இந்தப் பூச்சிகள் பயறு வகைகள் மட்டுமின்றி தக்காளி, வெண்டை, பச்சைமிளகாய், பூசணி, கனகாம்பரம் மற்றும் கேந்தி போன்றவற்றிலும் தாக்கும்.அதற்கும் இந்த என்.பி. வைரஸ் உயர்ரக மருந்து கரைசலை உபயோக்கிகலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *