பயறு வகை சாகுபடி

பயறுவகைப் பயிர்களில் இருந்து மனித வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இப் பயிர்களை எளிய முறையில், அனைத்து விவசாயிகளும் சாகுபடி செய்யலாம். குறைந்த செலவில், அதிக மகசூலும் பயறுவகைப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றன.

பயறுவகை உற்பத்தியை அதிகரிக்க, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மற்றும் வரப்போரத்திலும் பயிரிடலாம். உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்ய பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

  • ஒருங்கிணைந்த உரம், களை, நீர் நிர்வாகம் செய்து காலத்தே அறுவடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 25 கிலோ என்ற விதை அளவில், நெல் அறுவடைக்கு 5-10 நாள்களுக்கு முன் மெழுகு பதத்தில் விதைக்க வேண்டும். வயல் மெழுகு பதத்தில் இல்லை என்றால், தண்ணீர் பாய்ச்சி மெழுகு பதம் வந்ததும் விதைக்கலாம்.
  • விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு சூடோமோனாஸ் என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 10 கிராம் என்ற அளவில் அல்லது டிரைகோடெர்மாவிரிடி என்ற உயிரியல் பூஞ்சானக் கொல்லியை கிலோவுக்கு 4 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து 24 மணி நேரத்திற்கு பின் விதைக்க வேண்டும்.
  • காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து வேர் முடிச்சுகள் மூலம் பூமியில் நிலைப்படுத்துவதற்காக ரைசோபியம் என்ற உயிர் உரத்தையும், மண்ணில் கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கிடைக்கச் செய்ய பாஸ்போ பாக்டீரியா என்ற உயிர் உரத்தையும் ஹெக்டேருக்கு 3 பாக்கெட் வீதம் 400 மி. ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து, விதையுடன் கிளறி நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி விதைக்க வேண்டும்.
  • தழைச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும், மணிச்சத்து ஹெக்டேருக்கு 12.5 கிலோ வீதமும் பயிருக்கு உரமிட வேண்டும். பயறு நுண்ணூட்டம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் தயாரிக்கப்படும் பயறு வொண்டர் நுண்ணூட்டம் ஹெக்டேருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.
  • இடைவெளி 3ல10 செ.மீ. என்ற அளவில் சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்.
  • நன்செய் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்யும்போது கண்டிப்பாக 2 சதவீத டிஏபி உரக்கரைசல் இலை வழியாக தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பூக்கும் நிலையில் ஒரு முறையும், பிறகு 15 நாள்கள் கழித்து மறுமுறையும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இவ்வாறு இலைவழி உரம் தெளிப்பதால் பூ, பிஞ்சு உதிர்வது கட்டுப்படுத்தப்படும். தழைச்சத்து குறைவு உடனடியாக சரி செய்யப்படுகிறது.
  • ஒரு சமயத்தில் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது.
  • பயறு அறுவடை செய்யும்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன், செடிகளை தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை செய்து கட்டி வைத்து, பின் வெயிலில் காய வைத்து கையிலாலோ அல்லது இயந்திரங்களை வைத்தோ மணிகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.
  • இவ்வாறு தரைமட்டத்திற்கு வெட்டுவதால் மண்ணில் இருக்கும் வேர்கள் மண்வளத்தைப் பெருக்கும். இயந்திரத்தினால் அறுவடை செய்யும்போது வயலில் மண்ணின் ஈரத்தன்மை மிதமாக உள்ளதா என்று கண்டறிந்துவிட்டு அறுவடையை மேற்கொள்ளலாம்.
  • அறுவடை இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 1 ஏக்கர் உளுந்து மற்றும் பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து, தானியங்களை சுத்தம் செய்து பிரித்து எடுக்கலாம். இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
  • மேலும், பயிரை தக்க தருணத்தில் அறுவடை செய்து, மேலான பலனைப் பெறமுடியும். இவ்வாறு பயறு சாகுபடி செய்வதால் குறைந்த நாள்களில் எளிய செலவில் நிறைந்த மகசூல் பெறலாம்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *