பருத்தியில் மாவு பூச்சி

  • பருத்திப் பயிரில் எறும்புகள் நடமாட்டம் இருக்கிறதா? அப்படியென்றால் மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கிறதென தெரிந்து கொள்ளலாம்.
  • பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதல், ஆரம்பத்தில் இங்குமங்குமாக ஒரு சில செடிகளில் மட்டும் காணப்படும். நுனிக்குருத்து, இலைகள், காய்களில் இப்பூச்சி தோன்றி, சாறை உறிஞ்சும்.
  • செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, வாடி காய்ந்து விடும். சில சமயங்களில் இலைகள் காய்ந்து, உதிர்ந்து விடும். இவை, கூட்டமாக பஞ்சு போல் அடையாக, இலை மற்றும் தண்டுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

பரவும் விதம்:

  • மாவுப்பூச்சிகள் வெளியேற்றும் தேன் போன்ற துளிகள், இலைகளில் படிந்து பளபளவென்று மின்னும்.
  • இத்துளிகளை சாப்பிட வரும் எறும்புகள், மாவுப்பூச்சியின் குஞ்சுகளை அடுத்த செடிகளுக்கு எடுத்துச் சென்று பரப்பிவிடும்.
  • அறுவடையின் போது, உடைகளில் ஒட்டி, வயலின் பிற பகுதிகளுக்குப் பரவுகின்றன. அறுவடை முடிந்த பின் அகற்றப்படாத கத்தரி, பருத்தி, வெண்டை செடிகள் இருந்தால், அவற்றில் பூச்சிகள் பெருகி, காற்று மற்றும் மனிதர்கள் மூலம் அருகிலுள்ள பயிர்களுக்குப் பரவுகின்றன.
  • பருத்தியைத் தவிர வெண்டை, புடலை, கோவை, செம்பருத்தி, புகையிலை, வாழை, கொய்யா, சீத்தாப்பழம் பயிர்களிலும், குரோட்டன்ஸ், நாயுருவி செடிகளிலும் காணப்படுகின்றன.
  • வயலைச் சுற்றிலும் நன்கு உயரமாக வளரக்கூடிய சோளப்பயிரை, நெருக்கமாக வேலி போல் பயிரிட்டால், அரண் போலிருந்து, காற்று மூலம் மாவுப்பூச்சிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • மக்காச்சோளம், தட்டை பயறு வகைகளை வாய்க்கால் வரப்புகளில் ஆங்காங்கு பயிரிட்டால், கிரைசோபா, பொறிவண்டு போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருகி, மாவுப்பூச்சிகளின் பல்வேறு பருவங்களைக் கட்டுப்படுத்துகின்றன.
  • காற்று மூலம் பரவும் மாவுப்பூச்சிகளை கண்காணிக்க, மஞ்சள் நிறம் பூசப்பட்ட டப்பாக்களில் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு ஐந்து டப்பாக்களை, குச்சியில் கவிழ்த்து வைக்க வேண்டும்.
  • தாக்குதல் குறைவாக இருக்கும் போது, வேப்பெண்ணெய் 2 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது மீன்எண்ணெய் ரோசின் சோப் 25 கிராமை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீருக்கு “ப்ரோபினோபாஸ்’ அல்லது “டைமித்தோயேட்’ மருந்தை, 2 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிர் நனையும் படி தெளிக்க வேண்டும்.
  • மருந்துக் கரைசல் பயிரின் பாகங்களில் படிந்துள்ள மாவுப்பூச்சி படலத்தில் நன்கு பரவும் வகையில், வேளாண் திரவ சோப்பு (சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால், தனுவெட்) ஏதாவது ஒன்றை, கால் மில்லி வீதம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 10 – 15 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மருந்து தெளிக்க வேண்டும்.
  • கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க, ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் வரை மருந்து கரைசல் தேவைப்படும்.

-பி.அமலா, ஸ்ரீவில்லிபுத்தூர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *