பருத்தி செடிகள் வாடுவதை தடுக்கும் முறைகள்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக கோவில்பட்டி வட்டாரப் பகுதியில் பருத்தி சாகுபடி மானாவாரிப் பயிராகவும், இறவைப் பயிராகவும் பயிரிடப்பட்டுள்ளது.
  • தற்போது பூக்கும் பருவத்தில் உள்ள செடிகள் திடீரென வாடிக் காய்ந்துவிடுகின்றன. இதனால் செடிகளின் எண்ணிக்கை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
  • இதற்கு காரணம் பருத்தியைத் தாக்கும் தண்டு கூன்வண்டு ஆகும்.

சேத அறிகுறிகள்:

  • தண்டு கூன் வண்டின் தாக்குதலானது விதை முளைத்த 12 முதல் 15 நாள்களிலேயே தொடங்கிவிடுகிறது.
  • புழுக்கள் தண்டினை வட்ட வடிவத்தில் துளைத்து உள்ளே உள்ள மெல்லிய திசுக்களை உண்கின்றன. இதனால் தண்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது.
  • ஒரே செடியில் பல இடங்களில் வீக்கம் காணப்படும். மெல்லிய காற்று வீசினால்கூட இந்த வீக்கம் உள்ள பகுதியானது அடித்து செடிகள் இறந்துவிடும்.
  • மேலும் தாக்கப்பட்ட செடிகளில் காய்களில் எண்ணிக்கை மற்றும் தரம் குறைகிறது.

வாழ்க்கைப் பருவம்:

  • கூன் வண்டானது செடியின் பட்டையை உட்கொண்டு, தரைக்கு ஒட்டிய இடத்தில், தண்டில் முட்டைகளை இடுகிறது.
  • முட்டையில் இருந்து வெளியே வரும் புழுவானது 50 முதல் 60 நாள்களில் முழு வளர்ச்சியை அடைந்து தண்டிற்குள் உள்ளேயே கூட்டுப்புழுவாக மாறிவிடுகிறது.
  • கூட்டுப்புழுவில் இருந்து வெளியே வரும் வண்டானது அழுக்கு கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

மேலாண்மை முறைகள்:

  • வண்டின் தாக்குதலால் காய்ந்துபோன செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.
  • தாக்குதலுக்கு உள்ளான செடிகளை அறுவடைக்குப் பின் எரித்துவிடவேண்டும்.
  • தண்டில் தரையை ஓட்டிய இடத்தில் முட்டை இடுவதைத் தவிர்க்க மண் அணைக்க வேண்டும்.
  • மண் அணைப்பதற்கு முன்னால் ஒரு ஏக்கருக்கு கார்போயியூரான் 3ஜி 12.5 கிலோ என்ற அளவில், விதைத்த 20-ஆவது நாள் இட வேண்டும்.
  • குளோர்பைரியாஸ் 20இசி 2.5 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, விதைத்த 15 மற்றும் 30-ஆவது நாளில் தண்டுபாகம் நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.
  • அடுத்த பருவத்தில் வயலில் தொடர்ச்சியாக பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட விதையளவை விட அதிகமாக விதைக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு அடியுரமாக தொழு உரம் 10 டன் மற்றும் வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ இட வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *