கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் மாற்று பயிருக்கு மாறும் விவசாயிகள்

பருவ மழை தாமதம் உள்பட பல்வேறு காரணங்களால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில், நெல் சாகுபடி செய்த விவசாயிகள், ராகி மற்றும் எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 17 ஆயிரத்து, 500 ஹெக்டேரிலும், காரீப் பருவத்தில், 10 ஆயிரம் ஹெக்டேரிலும் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு, இரண்டு லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில் மட்டும், பத்து ஆயிரம் ஹெக்டேரில் இறவை மற்றும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் பெய்ததால், ஜூன் 15ம் தேதி முதல் பட்ட நெல் சாகுபடிக்கு அணை நீர் திறந்து விடப்பட்டது.

இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதாலும், கே.ஆர்.பி., அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகா மாநிலத்தில் மழை இல்லாததாலும், அணைக்கு நீர் வரத்து தடைப்பட்டு இதுவரை முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. கிணற்று பாசனம் உள்ளவர்கள் மட்டும் நெல் நாற்றுவிட்டுள்ளனர்.
அணை நீரை நம்பியுள்ள விவசாயிகள் நிலத்தை உழுது வைத்து காத்திருந்தனர். வழக்கமாக ஆடி மாதம், 10ம் தேதி வரை நெல் நாற்றுவிட்டு நடவு செய்தால் பருவத்தில் நெல் விளைச்சல் நன்றாக இருக்கும். அதன் பின், நெல் சாகுபடி செய்தால் நெல் விளைச்சல் பாதிக்கும்.

தற்போது, அணை பாசன பகுதியில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல்லுக்கு மாற்றாக ராகி மற்றும் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை மற்றும் சிறுதானிய பயிர்களான உளுந்து, காராமணி, பச்சை பயறு போன்வற்றை விதைத்து வருகின்றனர்.
அவதானபட்டி, பெரியமுத்தூர் பகுதியில் நெல்லுக்கு மாற்று பயிர் செய்யும் ஆயத்த பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்னர். மேலும், கடை மடை பகுதிகளில் மல்லிகை, செண்டுமல்லி போன்ற பூச்செடிகளை நடவும் விவசாயிகள் நிலத்தை சமன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்தாண்டு கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில் நெல் உற்பத்தி, 50 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *