பூச்சி மருந்து தெளிப்பில் ஆலோசனைகள்

பூச்சி மருந்து தெளிக்கும் விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • விவசாயிகள் பயிர்களில் பூச்சிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மருந்து தெளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் நன்மை செய்யும் பூச்சிகள் பாதிக்கப்படுவதுடன் மட்டுமில்லாமல், சுற்றுபுறச் சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது.
  • மேலும் அளவுக்கு அதிகமாக மருந்துகளைப் பயன்படுத்துவதால் நாம் உண்ணும் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகளில் நச்சுத்தன்மைஅதிகமாகி மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
  • எனவே விவசாயிகள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தங்களுடைய உடல் நலத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
  • பூச்சிகளை துளைப்பான்கள், இலையை உண்பவை மற்றும் சாறு உறுஞ்சும் பூச்சிகள் என்று பிரிக்கலாம்.
  • இவற்றில் எந்த வகையான பூச்சிகள் தங்களுடைய பயிரை தாக்கியிருக்கின்றன என்பதைத் தெரிந்து, அதற்கேற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை சரியான அளவு நீருடன் கலந்து கைத்தெளிப்பான் அல்லது விசைத்தெளிப்பான் மூலம் செடிகளில் படும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
  • கைத்தெளிப்பானைப் பயன்படுத்தும்போது, ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • அதுபோல் விசைத்தெளிப்பான் கொண்டு மருந்து தெளிக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்தை 60 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு குறைவான அளவு மருந்து தெளிக்கும்போது பூச்சிகள் மருந்துக்கு கட்டுப்படுவதில்லை.
  • அதே நேரத்தில் அதிகமான அளவு மருந்து தெளிக்கும்போது பயிரானது காய்ந்து விடுவதற்கு வாய்ப்பு அதிகம்.மேலும் தானியங்களும், காய்கறிகளும் நச்சுத்தன்மையுடன் காணப்படும். எனவே விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை சரியான அளவில் தெளிக்க வேண்டும்.
  • பூச்சிமருந்தின் திறனை அதிகப்படுத்த மருந்துடன் காதி சோப்பு அல்லது ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 200 மி.லி. என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
  • காய்கறிகளில் தெளிப்பதற்கு முன்னர் காய்கறிகளைப் பறித்துவிட்டு பின்னர் தெளிக்க வேண்டும்.
  • மருந்து தெளிக்கும்போது காற்று அடிக்கும் திசையில் தெளிக்க வேண்டும்.
  • காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையிலோ அதிக சூரிய வெளிச்சம் உள்ள காலங்களிலோ மருந்து அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மருந்து தெளித்த தெளிப்பானை நன்கு கழுவி பின்னர் உலர வைக்க வேண்டும்.
  • மருந்து தெளித்தபின் கண்டிப்பாக சோப்பு போட்டு குளித்து, துணிகளையும் துவைக்க வேண்டும்.
  • உபயோகித்த மருந்துக் குப்பிகளை நசுக்கி மண்ணில் புதைத்துவிட வேண்டும். மீதமுள்ள மருந்து உள்ள கலன்களைப் பாதுகாப்பாக குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *