தானே புயலால் மஞ்சள் மகசூல் பாதிப்பு

“தானே’ புயலால் மஞ்சள் செடிகள் மண்ணில் சாய்ந்து அழுகி மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலங்களில் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் மஞ்சள் சாகுபடி செய்வதில் குறிப்பிட்ட விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டு பயிராக மஞ்சள் உள்ளதால் நிகர லாபம் ஈட்டி வந்தனர்.

மஞ்சள் சாகுபடி செய்ய நிலத்தை உழுது சாண எருவை இட்டு நிலம் பண்படுத்தபடுகிறது.

அதில் சாணக் கரைசலில் ஊறவைத்த மஞ்சள் கிழங்கு நடவு செய்யப்படுகிறது.

செடிகள் வளரும்போது முளைக்கும் களைகளை நீக்கி, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி ஊட்டச்சத்து உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும்.

இதனால் செடிகளின் வேர்களில் அதிகளவில் கிழங்குகள் உற்பத்தியாகி பருத்து வளர்கிறது.

கிழங்குகளுக்கு முற்றியதும் நீர்பாய்ச்சுவது நிறுத்தப்படுகிறது.

அதன்பின் செடிகள் காய்ந்து மண்ணில் சருகாக சாய்ந்த பின் மண்ணை வெட்டி அதில் உள்ள மஞ்சள் கிழங்கை எடுக்கின்றனர்.

கிழங்கில் ஒட்டியுள்ள மண்ணை அப்புறப்படுத்தி அதனை தரம் பிரிக்க வேண்டும்.

அவற்றை பெரிய கொப்பரையில் இட்டு வேகவைத்து 10 நாட்கள் உலர வைக்க வேண்டும்.
அதன்பின் இயந்திரத்தில் போட்டு “பாலிஷ்’ செய்யப்படுகிறது.

இதனால் கிழங்கின் மீது இருந்த வேர்கள் அகற்றப்பட்டு மேற்புறம் பளபளப்பாக மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதன் பின்னரே இதனை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியும்.

இத்தனை சிக்கல் இருந்தாலும் மஞ்சள் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் நிகர லாபம் ஈட்டிவரும் விவசாயிகள் தொடர்ந்து மஞ்சள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

கடந்த டிச., 30ம் தேதி வீசிய “தானே’ புயலில் மாவட்டத்தில் விளை பொருட்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. மஞ்சள் செடிகள் மண்ணில் சாய்ந்து சேதமடைந்தது.
கிழங்கு முற்றும் தறுவாயில் செடிகள் மண்ணில் சாய்ந்து அழுகியதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் கிழங்கு பருத்து வளராததால் அறுவடை செய்து பதப்படுத்தும் போது, போதிய தரமின்றி எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *