மணிலாவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்

மணிலா ஒரு பணப்பயிர் மட்டுமின்றி முக்கியமான எண்ணெய் வித்துப்பயிர். மணிலாவின் விதையில் எண்ணெய் சத்து மட்டுமின்றி புரதச்சத்தும் அதிகமாக இருக்கிறது. மணிலா பயிரை பொதுவாக கார்த்திகை – மார்கழி பட்டங்களிலும் சித்திரை – வைகாசி பட்டங்களில் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

கார்த்திகை – மார்கழி மாத மணிலா இறவை பட்டம். சித்திரை – வைகாசி மானாவாரி பட்டம். இது புன்செய் பயிர். மணிலா பயிரிட இப்போது ஏற்ற தருணம்.

டிஎம்வி 7, ஜெஎல் 24, கோ 2, விஆர்ஐ 1, விஆர்ஐ 2, விஆர்ஐ 3, விஆர்ஐ 4 ஆகிய மணிலா ரகங்கள்தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

மணிலாவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம் குறித்து புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

  • பொதுவாக கார்த்திகை தீபம் முடிந்தப் பிறகு மழை பெய்வது நின்றுவிடும். வயலில் தண்ணீர் தேங்கி நிற்காது. அந்தத் தருணத்தில் மணிலா விதைக்கப்படுகிறது.
  • இப்படி விதைக்கப்படும் மணிலா 45 நாள்கள் கழித்து பூ பூக்கும் தருணத்துக்கு வருகிறது.
  • அந்தப் பூ பூக்கும் தருணம் வரும்போது மார்கழி மாதத்தின் கடைசி வருவதால் பனி அதிகமாக நிலவும்.
  • அப்போது நிலவக்கூடிய பனியின் அளவைப் பொறுத்தே பூக்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, மகரந்தச் சேர்க்கையும் வேகமாக நடைபெறும். இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • இந்த மணிலா பயிர் மாசி மாதத்தில் அறுவடைக்கு வருவதால் நல்ல விலையும் போகிறது.
  • விவசாயிகள் மணிலா விதையை விதைக்கும் முன்பு கண்டிப்பாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் முளைப்புத் திறனும் கூடும். இளைப்புள்ளி நோய் வராலும் தடுக்க முடியும்.
  • விதை நேர்த்தி செய்யப்பட்ட மணிலா விதையை இதற்கென தயாரிக்கப்பட்ட பாத்திகளில் அதை விதைக்கலாம்.
  • விதைத்தவுடன் 20 நாள் கழித்து செடிகள் நன்கு முளைத்து வரும்.
  • அந்தத் தருணத்தில் ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி என்ற மருந்தை 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு கையளவு ஒவ்வொரு செடியின் வேர் பகுதியில் படுமாறு பாத்திகளில் தூவிவிட வேண்டும்.
  • பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். இப்படி செய்தால் இந்த டிரைகோடெர்மா விரிடி என்ற மருந்து அதிகமான எண்ணிக்கையில் வேர்ப் பகுதிகளில் பூஞ்ஞான வித்துகளைப் பெருக்கி வேர் அழுகல் நோயை உருவாக்கக்கூடிய தீமை தரும் பூஞ்ஞான கிருமிகளை எதிர்த்துப் போராடும். இந்த மருந்து கழுத்து அழுகல் நோய் வராமலும் தடுக்கும்.
  • இந்த மருந்து கிடைக்காத பகுதிகளில்  அல்லது நேரங்களில் சூடோமோனாஸ் என்ற உயிர்ரக பாக்டீரியா மருந்தை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
  • மணிலா விதை செடியாக வந்து ஒரு மாதம் கழித்து சில பகுதிகளில் ஆங்காங்கே மணிலா செடிகள் காய்ந்து போய் அதைப் பிடித்து இழுத்தால் வேரோடு ஒடிந்து வெளியே வந்துவிடும். இது வேர் அழுகல் நோய்க்கான அறிகுறி.
  • இதைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்ஞான கொல்லியை வேரில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் இந்த மருந்தை1 ஏக்கருக்கு 1 கிலோ எடுத்து தண்ணீரில் கரைத்து மாலை நேரத்தில் வேர் முழுவதும் நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மணிலாவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *