மணிலா பயிரில் புரோடினியா புழு

மணிலா பயிரில் காணப்படும் புரோடினியா புழுவைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பொ.ஜெயக்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.

  •  மணிலா பயிரில் காணப்படும் புரோடினியா புழுவின் தாய் அந்துப் பூச்சிகள் இலையின் மேல்பாகத்தில் குவியல் குவியலாக சுமார் 200 முதல் 300 வரை முட்டைகள் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் பளபளப்பான பச்சை நிறத்துடன் காணப்படும்.
  • இளம் புழுக்கள் 5 முதல் 6 நாள்கள் ஒரே இலைத் தொகுதியில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டி உண்கின்றன.
  • இளம் புழுக்கள் கூட்டமாக வாழ்ந்தாலும், வளர்ந்த புழுக்கள் தனித் தனியாக பிரிந்து மற்ற இலைகளுக்கு சென்று நடுநரம்பு பகுதியை விட்டுவிட்டு மீதி இலைப் பகுதியை வெட்டி உண்ணும். அதிகம் தாக்குண்ட வயல்களைப் பார்த்தால் மாடு மேய்ந்தது போன்று காட்சியளிக்கும்.
  • முட்டையிலிருந்து வெளிவந்த புழு அந்துப் பூச்சியாக மாறுவதற்குள் 5 முறை தன் தோலை உரித்துக் கொள்கிறது. நான்காவதாக தோல் உரித்தவுடன் இப்புழுக்களை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். எனவே, இவற்றை அழிக்க வயிற்று நஞ்சு அல்லது நச்சுத்தீனி தயாரித்து அவற்றை உண்ணும்படி செய்ய வேண்டும்.
  • மணிலா விதை விதைத்த 40-வது நாளில் (அதிக வளர்ச்சிப் பருவத்தில்) இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். மேலும், ஜனவரி மாதங்களிலும் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
  • நான்காவது தோலுரிப்பு பருவத்தில் 100 புழுக்கள் சராசரியாக 524 கிலோ இலையைத் திண்ணக்கூடியது.
  • இந்த நச்சுத்தீனியை நாமே தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு, பச்சரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் 1 கி, செவின் தூள் 500 கிராம் தேவை.
  • வெல்லக் கரைசலை தயார் செய்து அதனுடன் அரிசி தவிட்டை தரையில் கொட்டி வெல்லத்தையிட்டு இரண்டரக் கலக்க வேண்டும். பிறகு, நச்சு மருந்து செவின் தூளை நன்றாக கிளற வேண்டும். சிறிது சிறிதாக நீர் ஊற்றி பிசைய வேண்டும்.
  • உருண்டை பிடிக்கும் பதத்தில் அதனைக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வயல் ஓரங்களிலும், நடுவிலும், ஆங்காங்கே மாலை நேரத்தில் போட்டுவைக்க வேண்டும்.
  • மறுநாள் காலை இதனை உண்டு புழுக்கள் ஆங்காங்கே செத்துக் கிடப்பதைக் காணலாம். எனவே, மணிலாவில் நச்சுத்தீனியை இட்டு புரோடினியா புழுவை கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *