ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்வளம் குறையும்

கம்பம் வட்டாரத்தில் விவசாயிகள் தினவிழா வேளாண்துறை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெங்கடசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வெங்கடசுப்ரமணியன் பேசுகையில், ’தேனி மாவட்டத்தில் 12 ஆயிரம் மண்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்ணில் இயற்கை நுண்ணுயிரிகள் பல உள்ளன. ரசாயன உரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் நுண்ணுயிரிகளின் பெருக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டு மண்வளம் குறைய வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் உரப்பயன்பாட்டை மண்பரிசோதனை மூலம் அறிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும்.

தழைச்சத்தினை குறைவாக பயன்படுத்தல் மற்றும் வேப்பம் பிண்ணாக்கினை கலந்து பயன்படுத்துவதால் பூச்சிநோய் தாக்குதல் குறையும்.

பரிந்துரை செய்யப்பட்ட பூச்சிமருந்துகளை மட்டும் குறிப்பிட்ட அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் விவசாயிகள் எளிய முறைகளில் இயற்கை உரங்களை தங்கள் பண்ணைகளில் கிடைக்கும் வேப்பந்தழை, காட்டாமணக்கு, புங்கைஇலை, ஊமத்தை இலை மற்றும் எருக்கு இலையினை பயன்படுத்தி இயற்கை பூச்சிவிரட்டி தயாரித்து உபயோகிக்கலாம். உயிரியல் கட்டுப்பாடு முறைகளான இனக்கவர்ச்சிப்பொறி மற்றும் இயற்கை முட்டை ஒட்டுண்ணி ஆகியவற்றை பயன்படுத்தி தரமான உணவு தானியங்களை உற்பத்தி செய்து, வளமான தலைமுறையை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.”  இவ்வாறு பேசினார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *